Published:Updated:

‘5 ஆண்டு' குடிநீர் தொட்டி, ஆக்ரமிக்கப்பட்ட மயானம்! - கலெக்டரிடம் புகார் வாசித்த நாமக்கல் மக்கள்

‘5 ஆண்டு' குடிநீர் தொட்டி, ஆக்ரமிக்கப்பட்ட மயானம்! - கலெக்டரிடம் புகார் வாசித்த நாமக்கல் மக்கள்
‘5 ஆண்டு' குடிநீர் தொட்டி, ஆக்ரமிக்கப்பட்ட மயானம்! - கலெக்டரிடம் புகார் வாசித்த நாமக்கல் மக்கள்

மயானம் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறி மத்துருட்டு ஊராட்சியை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு நம்மிடம் பேசிய  பொதுமக்களில் சிலர், ``நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள மத்துருட்டு ஊராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு கணவாய்மேடு பகுதியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் தெருவில் மின்கம்பம் நடப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக தெருவிளக்கு போடவில்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் வீதியில் நடப்பதற்கே முடியவில்லை. அதுவும் எங்கள் கிராமம் மலைப்பகுதியையொட்டி இருப்பதால், விஷ ஜந்துகள் தெருவுக்குள் வருகின்றன. ஒரு சிறுவன் பாம்பு கடித்து இறந்து விட்டான். எனவே, உடனடியாக எங்கள் பகுதிக்கு தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும்.

மேலும், எங்கள் பகுதியில் குடிநீர்த் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடாமல் கிடப்பில் போட்டு வைத்து உள்ளனர். இதனால் நாங்கள் குடிநீர் எடுப்பதற்கு சிரமம் அடைந்து வருகிறோம். நாங்கள் பயன்படுத்தி வரும் மயானம் நான்கு புறமும் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பாக நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.