Published:Updated:

ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பைக் கட்டுப்படுத்த புது சட்டம்... மாற்றுக் கருத்தை முடக்க திட்டமா?!

மத்திய அரசு கொண்டு வர உள்ள இந்தச் சட்டத் திருத்தம் குறித்த முடிவு பொதுமக்களுடன் கலந்தாலோசிக்காமல் ரகசியமாக எடுக்கப்பட்டு உள்ளதாகவும், இது சீனாவில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு பின்பற்றப்படும் தணிக்கை முறைக்கு இணையானதாக இருக்கிறது என்றும்...

ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பைக் கட்டுப்படுத்த புது சட்டம்... மாற்றுக் கருத்தை முடக்க திட்டமா?!
ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பைக் கட்டுப்படுத்த புது சட்டம்... மாற்றுக் கருத்தை முடக்க திட்டமா?!

னிநபரின் கணினித் தகவல்கள் பரிமாற்றத்தைக் கண்காணிக்க அனுமதி, சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்த சட்டத் திருத்தம் என, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இணையதளம் மூலமான தகவல் பரிமாற்றங்களைத் தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்திள்ளது. இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் மட்டுமல்லாது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களிடமும், அதன் பயன்பாட்டாளர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாட்டில் உள்ள எந்தவொரு கணினித் தரவுகளையும் குறுக்கிடவும், கண்காணிக்கவும், கண்டறியவும், வேவு பார்க்கவும் 10 மத்திய அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கி கடந்த டிசம்பர் 20-ம் தேதியன்று மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இது குறித்த `கெசட்’ அறிவிப்பை மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் காபா வெளியிட்டார்.  

கண்காணிப்பில் கம்ப்யூட்டர்

1. உளவு அமைப்பு (ஐ.பி.)

2. போதைப்பொருள் தடுப்பு அமைப்பு

3. அமலாக்க இயக்குநரகம்

4. மத்திய நேரடி வரிகள் வாரியம்.

5. வருவாய் புலனாய்வு இயக்குநரகம்

6. சி.பி.ஐ.

7. தேசியப் புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.)

8. மத்திய மந்திரிசபை செயலகத்தின் கீழ் செயல்படும் `ரா’ உளவுப்பிரிவு (ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு)

9. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், அசாமில் செயல்படுகிற சமிக்ஞை புலனாய்வு அமைப்பு

10. டெல்லி போலீஸ் கமிஷனர்

ஆகிய 10 அமைப்புகளும் 2000-ம் ஆண்டு இயற்றப்பட்ட தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவு 69-ன் கீழ் நாட்டில் உள்ள எந்த ஒரு கணினியையும் வேவு பார்க்க முடியும்.

கணினியில் அனுப்பப்படுகிற இ-மெயில்கள், சமூக வலைதளப் பதிவுகள் உள்ளிட்ட எந்த ஒரு தகவலையும் இடைமறிக்கவோ,  தகவல்களைக் கண்டறியவோ, சேமிக்கப்பட்டுள்ள தகவல்களை பகுப்பாய்வு செய்யவோ இந்த 10 அமைப்புகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், ஒத்துழைக்காத பட்சத்தில் அபராதமும், 7 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. 

மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ``பயங்கரவாதிகள் கம்ப்யூட்டர் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதை கண்டுபிடிக்கவே இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கான 10 அமைப்புகளும் தங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுத்து வந்தன. அதைத்தான் தற்போது நடைமுறைப்படுத்தி உள்ளோம். சாதாரண மக்களுக்கு இந்த உத்தரவால் எந்த இடையூறும் ஏற்படப்போவதில்லை. சந்தேகப்படும் நிலையில் உள்ளவர்களின் கம்ப்யூட்டர்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படும். எனவே, இதுபற்றி பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ஏற்கெனவே, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, கடந்த 2010-ல் வழங்கப்பட்ட அனுமதியை நீட்டித்துத்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" என மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

இதனிடையே, மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்குரைஞர் எம்.எல்.சர்மா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். 


ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்புக்கும் கட்டுப்பாடு

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த அதிரடியாக ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்படும் சட்டவிரோதமான கருத்துகளைத் தானாக நீக்குவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்க வலியுறுத்தும் வகையில், தகவல்தொழில்நுட்ப சட்டத்தின் 79 -வது பிரிவில் புதிய திருத்தங்களை கொண்டு வரவுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. 

கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் வரம்புகளை மீறி கருத்துகளை பகிர்வது, தனிமனித விமர்சனம், ``மீம்ஸ்" என்ற பெயரில் பிரபலங்களை நையாண்டி செய்வதென சமூக வலைதளங்களில் அரங்கேறிவரும் அத்துமீறல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும், இதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79-வது பிரிவில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும், இதற்கான முன்வரைவை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தயாரித்துள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. 

 ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான, சட்டவிரோத, பொய்யான தகவல்களை அடையாளம் கண்டறிந்து செயலிழக்க வைப்பதற்கான தொழில்நுட்பத்தை அல்லது தொழில்நுட்ப வழிமுறைகளைச் சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் அவற்றின் முகவர் நிறுவனங்கள் வகுக்க வேண்டும். 50 லட்சத்துக்கு மேற்பட்ட பயனாளர்களைக் கொண்ட சமூக வலைதளங்கள், இந்தியாவில் நிரந்தர அலுவலகத்தைத் திறக்க வேண்டும். ஆட்சேபகரமான தகவல்களைப் பகிர வேண்டாம் என்று பயனாளர்களிடம் சமூக வலைதளங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தயாரித்துள்ள முன்வரைவில் கூறப்பட்டுள்ளது. 

பசு கடத்தல், குழந்தை கடத்தல் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால், ஆங்காங்கே கும்பல் தாக்குதல் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. இதனால் மத்திய அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதன் காரணமாக, சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும்வகையில் தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளில் திருத்தம் செய்ய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த வரைவு திருத்தங்களை இணையதளத்தில் வெளியிட்டு, ஜனவரி 15–ம் தேதிக்குள் பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீன பாணி தணிக்கை  

இந்த நிலையில், மத்திய அரசின் இந்த  வரைவு திருத்தங்கள் தனிநபரின் அந்தரங்கத்தில் தலையிடுவதாக உள்ளது என்ற விவாதம் எழுந்தது. எதிர்க்கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும், மத்திய அரசு அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. 

ஏற்கெனவே, சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகளின் அடிப்படையில் காவல் துறைக்குக் கைது செய்ய அதிகாரமளிக்கும்  மத்திய அரசின் தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவு 66 ஏ-வை ரத்து செய்து கடந்த 2015 -ம் ஆண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றம்   உத்தரவிட்ட நிலையில், தற்போது வரைவு திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இணையதளத்தை அதிகம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இவர்களில் 2019-ம் ஆண்டில் மட்டும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 25 கோடியே 80 லட்சம் பேர் இருக்கலாம் என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 

இந்த நிலையில், மத்திய அரசு கொண்டு வர உள்ள இந்தச் சட்டத் திருத்தம் குறித்த முடிவு பொதுமக்களுடன் கலந்தாலோசிக்காமல் ரகசியமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது சீனாவில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு பின்பற்றப்படும் தணிக்கை முறைக்கு இணையானதாக இருக்கிறது என்றும் `தி இன்டர்நெட் ஃப்ரீடம் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பின் நிறுவனரும், வழக்கறிஞருமான அபர் குப்தா தெரிவித்துள்ளார். 

2019 ஜனவரி 15-ம் தேதிக்குள் பெயரளவுக்குப் பொதுமக்களின் கருத்தைக் கேட்டதாக பதிவு செய்துவிட்டு, விரைவிலேயே இந்தச் சட்ட திருத்தத்தை அமல்படுத்துவதில் மோடி அரசு தீவிரமாக உள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டால், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள், தேவைப்பட்டால் குறிப்பிட்ட ஒரு தகவல் முதலில் யாரிடமிருந்து வந்தது என்பதை எளிதில் கண்டறிந்து அரசுக்குச் சொல்ல முடியும் என்பதோடு, 24 மணி நேரத்துக்குள் அந்தத் தகவல் அல்லது கருத்தைப் பதிவிட்ட சமூக வலைதளத்திலிருந்து நீக்கிவிடவும் முடியும். 

அதே சமயம் மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு சமூக வலைதளங்கள் இன்னமும் முழு அளவில் தங்களது சம்மதத்தைத் தெரிவிக்கவில்லை. அரசின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற தாங்கள் தயாராக இருப்பதாகவும், அதே சமயம் தங்கள் தளத்தைப் பயன்படுத்துவோரின் தனி உரிமை பாதிக்கப்படக் கூடாது என்பது குறித்து தாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன. 

``இந்தச் சட்டத் திருத்தத்துக்கு இன்னும் பல பூர்வாங்க நடவடிக்கைகள் பாக்கி உள்ளன. இறுதியாக எத்தகைய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் வகுக்கப்படுகின்றன என்பதைப் பார்த்துவிட்டு எங்கள் பதிலைத் தெரிவிப்போம்" என ஃபேஸ்புக் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதள நிறுவனங்களிடம், போலிச் செய்திகளைப் பரப்புகிறவர்கள் குறித்த தகவல்களைத் தருமாறு மத்திய அரசு கேட்டது. ஆனால், அதில் தனிநபர் உரிமை பிரச்னைகள் இருப்பதாகவும், எனவே அத்தகைய தகவல்களைத் தர முடியாது என்றும் அவை தெரிவித்துவிட்டன. 

மாற்றுக் கருத்தை முடக்கவா? 

இந்த நிலையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இச்சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதில் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக உள்ளது. போலிச் செய்திகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்கவே இந்தத் திருத்தம் கொண்டு வரப்படுவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதிரான மாற்றுக் கருத்துகள் பரப்பப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்தச் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வருவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சிகள் தரப்பிலும் குற்றம்சாட்டப்படுகின்றது. 

``மத்திய அரசு தயாரித்துள்ள சட்டவரைவில், இணையதள நிறுவனங்கள் விசாரணைக்குப் பயனளிக்கக்கூடிய அல்லது தொடர்புடைய தகவல்களை, குறைந்தது 180 நாள்களுக்கு உரியதைப் பாதுகாத்து வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகளை மீறினால் இணையதள அணுகல் மற்றும் பயன்படுத்தும் உரிமைகள் ரத்து செய்யப்படும் என மாதத்துக்கு ஒருமுறையாவது பயனாளிகளுக்குத் தெரிவிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

எனவே, இந்தச் சட்டவரைவு அமலுக்கு வரும்பட்சத்தில் அது சமூக வலைதளங்களை அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துவிடும். இது அரசுக்கு எதிரான கருத்துகளைத் தணிக்கை செய்ய வழிவகுத்து பேச்சுரிமையைத் தடுக்கும் விதமாகவும், தனிநபரின் உரிமையைப் பாதிக்கும் விதமாகவும் அமைந்து விடும். பொதுமக்களின் கருத்துகளைக் கண்காணிப்பது போன்றவற்றுக்கு அனுமதி அளிக்கும் எந்த ஒரு சட்டமும் நீதிமன்றத்தின் ஒப்புதல் அல்லது பரிசீலனைக்குப் பின்னர் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது நாட்டின் பிரஜைகள் மீது அரசின் கட்டுப்பாடற்ற கண்காணிப்புக்கு வழிவகுத்து விடும்" என்கிறார்கள் சைபர் சட்ட நிபுணர்கள். 

`எதிர்கருத்து என்பது ஜனநாயகத்தில் இருக்கும் பாதுகாப்பு வால்வு போன்றது. குக்கரிலும் பாதுகாப்பு வால்வு இல்லையென்றால் அழுத்தம் காரணமாக அது வெடிக்கும். ஜனநாயக நாட்டில் எதிர்கருத்து இல்லையென்றால், குக்கரின் கதிதான் ஏற்படும்’ என்று இடதுசாரி ஆதரவாளர்கள் 5 பேரின் கைது தொடர்பான வழக்கை விசாரித்தபோது உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. 

மோடி தலைமையிலான மத்திய அரசு இதை மனதில் கொண்டால் சரி!