Published:Updated:

முத்தலாக் விவகாரம்! - நாடாளுமன்றத்தில் கொந்தளித்த அன்வர்ராஜா

முத்தலாக் விவகாரம்! -  நாடாளுமன்றத்தில் கொந்தளித்த அன்வர்ராஜா
முத்தலாக் விவகாரம்! - நாடாளுமன்றத்தில் கொந்தளித்த அன்வர்ராஜா

முத்தலாக் சட்ட திருத்தத் தாக்கல் விவாதத்தில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க உறுப்பினர் அன்வர்ராஜா, மத்தியில் ஆளும் பி.ஜே.பி-க்கு சாபம் விட்டுப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யின் வழிகாட்டுதலுடனே மாநில ஆட்சியை நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் மாநில உரிமைகள் பாதிக்கப்படும்போதெல்லாம் அ.தி.மு.க தலைமை மத்திய பி.ஜே.பி தலைமைக்கு எதிராக மென்மையான போக்கையே கடைப்பிடித்து வந்துள்ளது. இதனிடையே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யுடன் தேர்தல் கூட்டணிக்கான முயற்சிகளைப் பா.ஜ.க மேற்கொண்டு வருவதாகத் தெரிகின்றன. தமிழக முதல்வரை மத்திய அமைச்சர் சந்திப்பதும், மத்திய அமைச்சர்களை மாநில அமைச்சர்கள் சந்திப்பதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் சட்டத் திருத்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அ.தி.மு.க எம்.பி-யான அன்வர்ராஜா, பா.ஜ.க-வுக்கு சாபம் விடும் வகையில்  ``முத்தலாக் சட்டத் திருத்தம் எனும் பெயரில் நீங்கள் (பா.ஜ.க) விரும்பும் சட்டத்தைக் கொண்டு வர முயல்கிறீர்கள். இஸ்லாமிய மார்க்கத்தின் முத்தலாக் சட்டம் என்பது எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படும் சட்டமல்ல. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடைபெறுவதாகும். அற்புதமான வழிமுறைகளையும் எக்காலத்துக்கும் பொருந்தும் சட்டமாகவும் முத்தலாக் உள்ளது என கேரள உயர் நீதிமன்றத்தால் பாராட்டப்பட்ட சட்டமாகும்.


 

இதில் எந்தவொரு மாறுதல்களையும் கொண்டுவரக் கூடாது என அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் எம்.ஜி.ஆரால் கோரிக்கை வைக்கப்பட்ட உன்னதச் சட்டம். எவ்வளவு பெரிய அறிவுஜீவியாக இருந்தாலும் அவர் கூறும் கருத்து பிற்காலத்தில் திருத்தப்படும். ஆனால், 1400 ஆண்டுகளைத் தாண்டியும் ஒரு மாறுதல்கூட செய்யப்படாத கருத்துகளாக குரானின் சட்டங்கள் இருப்பதே இது இறைவன் அறிவித்த சட்டம் என்பது புரியவில்லையா?

முத்தலாக் மனிதனால் எழுதப்பட்ட சட்டமல்ல. இறைவனால் அருளப்பட்ட சட்டம். இதில் கைவைத்து மத விஷயத்தில் தலையிடாதீர்கள். பண மதிப்பிழப்பு மூலம் கிராமப்புறங்களில் மதிப்பை இழந்தீர்கள், ஜி.எஸ்.டி வரி விதிப்பின் மூலம் நகர்ப்புறத்திலிருந்து தூக்கி எறியப் பட்டீர்கள். இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததன் மூலம் தலைகுனிந்து நிற்கிறீர்கள். இப்போது இறைவனின் சட்டத்தின் மீது கை வைத்தீர்களேயானால் இறை சாபத்துக்கு உள்ளாவீர்கள். இறைவனின் தண்டனையிலிருந்து உங்களால் தப்பிக்கவே முடியாது" என உரையாற்றிய அன்வராஜாவின் ஆக்ரோஷப் பேச்சு பா.ஜ.க-வை மட்டுமல்ல, அ.தி.மு.க-வினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.