Published:Updated:

''நிலத்தை கொடுத்தா வெளியூர் வேலைனு சமாதானம் பண்றாங்க'' - பயத்தில் சேலம் 8 வழிச்சாலை மக்கள்!

''நிலத்தை கொடுத்தா வெளியூர் வேலைனு சமாதானம் பண்றாங்க'' - பயத்தில் சேலம் 8 வழிச்சாலை மக்கள்!
''நிலத்தை கொடுத்தா வெளியூர் வேலைனு சமாதானம் பண்றாங்க'' - பயத்தில் சேலம் 8 வழிச்சாலை மக்கள்!

சென்னை டூ சேலம் வரையிலான அதிவிரைவு போக்குவரத்திற்காக எட்டு வழிச்சாலை திட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வந்தது. இந்தச் சாலை வசதியை எதிர்த்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வெகுண்டெழுந்து போராட்டம் நடத்தியதன் விளைவாக அந்தத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். 

ஆனாலும், சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “எட்டு வழிச்சாலை திட்டத்தைத் தொடங்கிய நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். ஏனோ அதை இன்னும் முழுமையாகச் செயல்படுத்த முடியாமல் இருக்கிறது. வாகனங்கள் அதிகரிக்கும்போது விபத்துகளும் அதிகரிக்கும். அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. விலைமதிப்பற்ற மனிதர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க சர்வதேச தரத்துக்கு இணையாகச் சாலை அமைப்பதில் என்ன தவறு? நாட்டின் நலன்கருதி எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று பேசியிருப்பது அனைவரையும் மீண்டும் கொதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. 

முதல்வரின் இந்தப் பேச்சுக்கு போராட்டம் நடத்திய மக்களின் பதில் என்ன? அவர்களின் தற்போதைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள சிலரிடம் தொலைப்பேசியில் பேசினோம்.  

“ஏங்க என்னங்க முதல்வர் இப்படி பேசுறார். மக்களான நாங்க அவ்வளவு பெரிய போராட்டம் நடத்தியும் அவர் மனசு இறங்கலியே. நாங்க காலங்காலமா வாழ்ந்த நெலத்த விட்டுப் போகணும்னு எப்படிங்க அவரு எதிர்பார்க்கிறார். இந்தக் காட்டையும் கழனியையும் வுட்டுட்டு எங்கங்க போறது. ஏற்கெனவே போராட்டம் பண்ணினதுல இருந்தே சனங்க எல்லாரும் பயந்துக்கிட்டு கெடக்குறாங்க. எப்போ எவன் வந்து திரும்பவும் நெலத்த அளக்கப்போறோம் எடத்தக் காலி பண்ணுங்கன்னு சொல்லிடுவானோன்னு உசுரக் கையில புடிச்சிக்கிட்டு திரியுறோம். என் வீட்டாலு சொந்தமா ஒழைச்சு உருவாக்கின நெலம் இது. ஓடியாடி வேல பாத்த மனுசன் இன்னிக்கோ நாளைக்கோ நம்ம எடம் கைய விட்டுப் போயிடும்னு நினைச்சு இடிஞ்சு போயி உக்காந்துட்டாரு. ஆடு, மாடு கூட மேய்க்கப் போக மாட்டேங்கிறாரு. எனக்கு வயசு எழுவதுகிட்ட நெருங்கிடுச்சு. இன்னும் ஒழைச்சு திங்கணும்னு நெனைக்கிறேன். ஆனா, இந்த ரோடு போடுற திட்டத்தால மனசு வெசனமா கெடக்குதுங்க. எங்கள வுட்டுடுங்க சாமி. இப்புடியே வயக்காட்டுல வேல செஞ்சு வயித்த நெறைச்சிக்குறோம்” என்று ஆதங்கப்படுகிறார் கிருஷ்ணம்மா பாட்டி. 

ஐம்பதை வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் சின்னப்பொண்ணு என்பவர் பேசும்போது, “எனக்கு ஒரு பையன் ரெண்டு பொண்ணுங்க தம்பி. காட்டுல கூலி வேல பாத்துத்தான் குடும்பத்த ஓட்டுறோம். வருசக்கணக்குல வேல பாத்து பொத்திப் பொத்தி சேத்து வச்ச பணத்துல வூடு கட்டி குடியிருக்கலாம்னு பாத்தா எங்க நெலத்து மேலயே ரோடு வரப்போகுதுன்னு அளந்துட்டுப் போயிருக்காங்க. இப்போதைக்கு பிரச்னை ஓஞ்சிருந்தாலும் எப்போ வேணா என்ன வேணா நடக்குமேன்னு பயந்து போயி வூடு கட்டாமலேயே போட்டுருக்கோம். பத்தாயிரம் கல்லு எறக்கி போட்டுருக்கேன் தம்பி. அது அத்தனையும் வெயில்லயும் மழையிலயும் கெடந்து பாழாப் போகுது. காசையும் செலவு பண்ணி கட்டாம போட்டிருக்கிறதைப் பாத்து நெஞ்சு வலியே வந்துடுச்சு. ரெண்டு பொம்பளைப் புள்ளைகளுக்கு இன்னும் கல்யாணம் வேற பண்ணனும். எல்லாத்தையும் நெனைச்சு நெனைச்சு சீக்கிரத்துலயே நான் செத்துடுவேனோன்னு பயமா இருக்குங்க தம்பி. அக்கம் பக்கத்து சனங்க சொல்றதைப் பாக்கும்போது ஒரு சிலருங்க வெள்ளாம பண்றதையும் நிறுத்திட்டாங்க. இங்க வர்ற அதிகாரிங்ககிட்ட இந்தத் திட்டத்தை கை விட்டுடுங்கன்னு சொன்னா மக்கள்தான் முதல்வர்கிட்ட ரோடு வேணும்னு மனு கொடுக்கிறாங்க. அதனாலதான் அரசாங்கம் இதைச் செய்யணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு இருக்குன்னு சொல்லுறாங்க. நான் ஒண்ணு சொல்றேங்க முதல்வர் எடப்பாடியை எங்க சேலம் மக்கள்கிட்ட வந்து நேருக்கு நேரா மக்கள்தான் ரோடு வேணும்னு சொல்லுறாங்கன்னு சொல்லச் சொல்லுங்க. அப்பறம் பாத்துக்கிறோம் அவங்களா நாங்களான்னு” ஆக்ரோஷத்தோடு பேசுகிறார் சின்னப்பொண்ணு. 

“இப்பத்தான் தம்பி கொஞ்ச நாளா இங்க பிரச்னை இல்லாம இருக்கு. மக்கள் எல்லாருமா சேர்ந்து போராட்டம் நடத்தினதால அரசாங்கம் இதை கைவிட்டுடுச்சு. நம்ம நிலத்துக்கு சேதாரம் இல்லைன்னு நினைச்சுட்டு இருந்தோம். ஆனா, நடக்கிறதைப் பார்த்தா அப்படி எதுவும் நல்லது நடக்கும்னு தெரியலைங்க தம்பி. ரோடு வருதுன்னும் சொல்றாங்க. வரலைன்னும் சொல்றாங்க. ஒருசிலருங்க எலக்‌ஷன் முடிஞ்சதும் கண்டிப்பா நம்மளை அடிச்சு வெரட்டிட்டு ரோடு போட்டுடுவாங்கன்னு பயம் காட்டுறாங்க தம்பி. அதிகாரிங்க எப்ப வருவாங்களோ என்ன பண்ணுவாங்களோன்னு எந்நேரமும் கவலையாத்தான் தம்பி இருக்க வேண்டியிருக்கு. போன வாரம்கூட போராட்டத்துக்கு கூப்பிட்டாங்கன்னு சொல்லி குடும்பத்தோட போய் உண்ணாவிரதம் இருந்துட்டு வந்தோம். ஏற்கெனவே நடத்துன போராட்டத்தைப் பார்த்துட்டு சின்னப் புள்ளைங்கள்லாம் பயந்து கெடக்குதுங்க. எங்களுக்கும் நிம்மதியான தூக்கமே கிடையாது. எந்நேரமும் வயித்துல புளியக் கரைக்கிது. பொம்பளைங்க எல்லாரும் கூடி பிரச்னை எதுவும் இல்லாம இந்த அரசாங்கம் ரோடு போடுற திட்டத்தை நிரந்தரமா கை விட்டுடுச்சுன்னா குலசாமிக்கு பொங்க வெச்சு கெடா வெட்டுறதா நேந்துருக்கோம் தம்பி. ஆளுறவங்களே எங்கள அழிக்க நினைக்கும்போது எங்க குலசாமிதானுங்களே எங்களுக்கு கை கொடுக்கணும்” கண்ணீரும் வேதனையும் நிரம்பிய வார்த்தைகளை உதிர்க்கிறார் அச்சன்குட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அமுதா. 

“போராட்டம் நடத்தினத்துக்கு அப்பறமா யாரும் நிலம் அளக்க வரலைங்க. ஆனாலும், இப்போ புது மேப் போட்டுருக்கிறதா சொல்றாங்க. அதுல யாரோட இடமெல்லாம் வந்துருக்குன்னு எல்லாரும் பயந்துக்கிட்டே போய் பார்க்கிறாங்க. தமிழ்நாட்டுல எங்க போராட்டம் நடந்தாலும் யாராவது பெரிய ஆளு அந்த மக்களுக்குக் குரல் கொடுப்பாங்க. ஆனா, எங்களுக்குன்னு யாருமே இல்லைங்க. நாளைக்கே நான் போராட்டம் பண்ணி செத்துப் போயிட்டாலும் அது ஒருநாள் செய்தியாவே போயிடும். அதுமட்டுமில்ல, என் வயசுப் பசங்கள்ல சிலர் ஆளுங்கட்சியோட இளைஞர் அணியில இருக்கிறாங்க. அவங்க பத்துப் பதினைஞ்சு பேரு டீமா சேர்ந்துக்கிட்டு வீடு வீடா போய் பெரியவங்ககிட்ட பேசி அவங்க மனசை மாத்துறாங்க. நீங்க பிடிவாதம் பிடிச்சா உங்க பிள்ளைங்களோட வாழ்க்கை பறிபோயிடும். நிலத்தைக் கொடுத்துட்டா வெளியூர்ல வேலை வாங்கிக் கொடுத்துடுவாங்கன்னு சமாதானம் பண்ணுறாங்க. இதையெல்லாம் வெச்சுப் பாக்கும்போது திரும்பவும் எங்களைப் பழி வாங்கிடுவாங்களோன்னு தோணுது ப்ரோ. ஆனா, அவங்க என்ன சதி பண்ணினாலும் நாங்க எங்க உரிமையையும் நிலத்தையும் விட்டுக் கொடுத்துடவே மாட்டோம்” ஆளும் அரசுக்கு எதிராக தில்லாகக் குரல்  கொடுக்கிறார் தமிழ். 

எட்டு வழிச்சாலை போராட்டம் அடங்கிவிட்டது. மக்கள் சோர்ந்து விட்டார்கள் என்ற நினைப்பில் ஆளும்கட்சி மீண்டும் அதிகாரத்தைக் கையிலெடுக்க நினைத்தால், நம் மக்களுக்காக நாம் அனைவரும் சேர்ந்து குரலெழுப்பவும் கரம் கொடுக்கவும் தயாராகவும் விழிப்போடும் இருப்போம்.