Published:Updated:

'கோட்டை அமீர்' விருதை நிறுத்தியதன் உள்நோக்கம் என்ன? குடும்பத்தினர் தவிப்பு!

குடியரசு தின விழாவில் கோட்டை அமீர் விருது வழங்கப்படவில்லை. இது பல்வேறு தரப்பில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

'கோட்டை அமீர்' விருதை நிறுத்தியதன் உள்நோக்கம் என்ன? குடும்பத்தினர் தவிப்பு!
'கோட்டை அமீர்' விருதை நிறுத்தியதன் உள்நோக்கம் என்ன? குடும்பத்தினர் தவிப்பு!

மேடைகளிலும், சட்டமன்றத்திலும், ஊடகங்கள் முன்னாலும் பேட்டியளிக்கும் தற்போதைய அ.தி.மு.க-வினர், ``இது அம்மாவின் அரசு. அவரின் வழியில் சிறப்பாக ஆட்சி செய்துவருகிறோம்" என்று வார்த்தைக்கு வார்த்தை கூறி வருகின்றனர். ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு, ஜெயலலிதா காலத்திலும் வழங்கப்பட்டு வந்த கோட்டை அமீர் விருதை, திடீரென்று புறக்கணித்துள்ளது தமிழக அரசு.

கோவையில் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கோட்டை அமீர். பிறப்பால் இஸ்லாமியர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மத நல்லிணக்கத்துக்காக வாழ்ந்தவர். நாட்டையே அதிரவைத்த பாபர் மசூதி சம்பவத்தின்போது, தன்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி யோசிக்காமலும் மத நல்லிணக்கத்துக்காகப் பாடுபட்டவர். இந்து – முஸ்லிம் கலவரத்தைக் கட்டுப்படுத்த அமைதிக் குழு அமைத்து, அதற்கு அவரே தலைவராகவும் இருந்தார். மசூதி மட்டுமல்ல, இந்து கோயில்களிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும்கூட அமீருக்கு நல்ல மரியாதை இருந்தது.

இது பிடிக்காத சிலர், 1994-ம் ஆண்டு அவரைக் கொடூரமாக கொலைசெய்தனர். இதையடுத்து, கோட்டை அமீரின் பெயரில், ``ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கப்படும்" என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி, 2001-ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும், சமூக ஆர்வலர்களைத் தேடித்தேடி, ஒரு பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டு வந்தது. தி.மு.க ஆட்சியில் வெளியிட்ட அறிவிப்புகளை வேரோடு பிடுங்கி எறியும் ஜெயலலிதா ஆட்சியில்கூட, கோட்டை அமீர் பெயரில் விருது தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கோட்டை அமீர் விருது வழங்கப்படவில்லை. இது பல்வேறு தரப்பில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அமீர் குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமீரின் குடும்பத்தைச் சந்தித்துப் பேசினோம். அவரது மகன் ஜலீல், ``சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பெருந்தலைவர் காமராஜரின் கொள்கைகளால் என் தந்தை ஈர்க்கப்பட்டார். பாபர் மசூதி இடிப்பு சமயத்தில், தன்னுடைய உயிரைப் பணயம்வைத்து மத நல்லிணக்கம் தொடர்பாக விழிப்புஉணர்வு செய்தார். தீவிரவாத கும்பலைக் கடுமையாக எதிர்த்தார். அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும் சந்தித்து அமைதிக் குழு அமைத்து வழிநடத்தினார். இவர் உயிருடன் இருந்தால், தங்கள் ஆசை நிறைவேறாது என்று எண்ணியவர்கள், ஒருநாள் என் தந்தை வாக்கிங் செல்லும்போது கொடூரமாகக் கொலைசெய்தனர்.

கருணாநிதி அரசில், எங்கள் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் நிதி கொடுத்தார்கள். என் அம்மாவுக்கு பென்ஷன் கொடுத்தனர். என் தங்கைக்கு வேலை கொடுத்தனர். எங்கள் தந்தை பெயரில் விருது அறிவித்தனர். ஒவ்வோர் ஆண்டும், அந்த விழாவுக்கு, எங்களைக் கௌரவ விருந்தாளிகளாக அழைத்துவந்தனர். ஆனால், இந்த ஆண்டு விருது வழங்கவில்லை. இந்த விருதை நிறுத்தாமல் வரும் காலங்களில் தொடர்ந்து வழங்க வேண்டும். மேலும், வருகிற மார்ச் 18-ம் தேதி என் தந்தையின் 25-வது ஆண்டு நினைவு நாள் வருகிறது. அன்றைய தினம், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலும், என் தந்தையின் உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும். இதன்மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டும்" என்றார்.

கோட்டை அமீர் மருமகன் ஜலாலுதீன், ``மத ஒற்றுமைக்காகப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார் கோட்டை அமீர். அனைத்து மத ஊர்வலங்களுக்கும் தடை வாங்கினார். கோவை கோணியம்மன் கோயில் தேர் வடம் பிடித்தபோது, அவருக்குப் பரிவட்டம் கட்டினர். கோணியம்மன் கோயிலைப் பொறுத்தவரை, ஒவ்வோர் ஆண்டுமே அவருக்குப் பரிவட்டம் கட்டுவார்கள். இது, சில பழைமைவாதிகளுக்குப் பிடிக்கவில்லை. காந்தியடிகளுக்குச் சமமானவர் என்று ஒப்பிட்டு, இவரது கொலை வழக்கில் தீர்ப்பளித்தனர். சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி விருது வழங்கிவந்தனர். இந்த விருதை நிறுத்தியதற்கான உள்நோக்கம் தெரியவில்லை. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விருதை நிறுத்தி வைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது" என்றார்.

``என் கணவர் நாட்டுக்காகப் பாடுபட்டுத்தான் உயிரை விட்டிருக்கார். 25 வருஷமா அந்தச் சங்கடத்தை அனுபவிச்சிட்டு இருக்கிறேன். இந்த விருதைத் தொடர்ந்து வழங்குவதுதான் என் கணவருக்குச் செய்யும் கௌரவம். அதை, ஆண்டவனின் அருளால் தொடர்ந்து வழங்குவார்கள் என்று நம்புகிறேன்" என்று கண்ணீர் சொட்டச் சொட்ட முடித்தார் கோட்டை அமீரின் மனைவி ஜியானா. 

இதுகுறித்து தமிழக அரசின் பொதுத் துறை உயர் அதிகாரிகளிடம் பேசினோம். ஆனால் அவர்கள், அதற்கான எந்த விளக்கத்தையும்  தரவில்லை.

நாட்டுக்காக உழைத்தவர்களைக் கௌரவிப்பதைவிட வேறு என்ன கடமை இருக்கிறது, இந்த அரசாங்கத்துக்கு?