Published:Updated:

நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? -முத்தரையர்களின் அரசியல் உரிமை மீட்பு மாநாட்டில் அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? -முத்தரையர்களின் அரசியல் உரிமை மீட்பு மாநாட்டில் அறிவிப்பு
நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? -முத்தரையர்களின் அரசியல் உரிமை மீட்பு மாநாட்டில் அறிவிப்பு

வீரமுத்தரையர் முன்னேற்றச் சங்கம் நடத்திய முத்தரையர்களின் அரசியல் உரிமை மீட்பு மாநாடு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

வீரமுத்தரையர் முன்னேற்றச் சங்கத்தின் மத்திய மண்டல பொறுப்பாளர் குணா, மாநில வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் வழக்கறிஞர் சந்தர், மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் சிவனேசன், மாநில இளைஞரணி அமைப்பாளர் வைரவேல், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தளவாய் ராஜேஷ், மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் குரு.மணிகண்டன், அச்சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் பெரியண்ணன் அரசு ஆகியோருடன், சிறப்பு விருந்தினர்களாக அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் கே.கே.செல்வகுமார் மற்றும் மன்னார்குடி ஸ்ரீ சென்டலங்கர செண்பக மன்னர் ஜீயர் சுவாமிகள், கும்பகோணம் கோரக்கர் ஞானபீடம் கோரக்கர் சுவாமிகள், துருசுபட்டி சித்த ஆசிரமம்  சிவபிரமானந்தா சரஸ்வதி ஆகியோர்  மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டுக்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து அச்சங்கத்தின் தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய செல்வக்குமார், தனது தொண்டர்கள் சகிதமாக ஊர்வலமாக வந்து மேடை ஏறினார்.

மாநாட்டில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிகளில் வீரமுத்தரையர் முன்னேற்றச் சங்கத்துக்கு வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிக்கு தங்களின் ஆதரவு வழங்குவது என்றும், முத்தரையர் சமுதாயத்தின் நீண்டகால கோரிக்கையான பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவ சிலையைத் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நிறுவ வேண்டும் என்றும், 1970-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சட்டநாதன் குழுவின் பரிந்துரைபடி வலையர் புனரமைப்பு வாரியம் உடனடியாக அமைத்து அந்த வாரியத்தின் மூலம் வலையர் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களை நிறுவ வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் சமூக மக்களுக்குச் 20 சதவிகித இட ஒதுக்கீடு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேடையில் பேசிய மன்னார்குடி ஸ்ரீ சென்டலங்கர செண்பக மன்னர் ஜீயர், ``இந்தியா ஒரு விவசாய நாடு என நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அப்படிப்பட்ட விவசாயத்தை காக்குற மக்களாக முத்தரையர் சமூக மக்கள் விளங்குகிறார்கள். விவசாயத்தைப் பாதுகாக்க இந்த மக்கள்,  இந்து தர்மத்தை காக்கின்றவர்களாக வாழ்கிறார்கள் என்பதுதான் உண்மை. இந்தச் சமூகம் ராணுவக் கட்டுப்பாடு போன்ற ஒரு சமூகமாக விளங்குகிறது. அரங்கனைக் காத்தவர்கள். இப்படிப்பட்ட நீங்கள், சாதி பேத பாரபட்சம் இல்லாமல் இந்து மதத்தைக் காக்க முன்வரவேண்டும்.

தமிழகத்தில் மாற்று மதத்தைச் சார்ந்தவர்களின் திருமண விழாக்களில் சிலர் இந்து மதச் சடங்குகளை அவமதிக்கும் விதமாகவும், இந்து மதக் கடவுள்களைக் கேலி செய்யும் விதமாகச் பேசி வருகிறார்கள். அப்படிப் பேசுபவர்களை முத்தரையர் சமுதாய மக்கள் விட்டு வைக்கக் கூடாது. பேசுபவர்களை இடத்திலேயே காலி செய்ய வேண்டும். நாம்தான் நம் கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும். இந்து ராஸ்டிரத்துக்கு எதிராகவும், இந்து தர்மத்துக்கு எதிராகப் பேசியவர்களை, அந்த இடத்திலிருந்து நகரவிடாமல் செய்து அடக்க வேண்டும்" என ஷாக் கொடுத்தார்.

அடுத்துப் பேசிய மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன், ``தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் சமூகம், ஓரம் கட்டப்படுகிறது. திராவிட கட்சிகள் தொடர்ச்சியாக இந்த சமுதாயத்தைப் புறக்கணிக்கிறார்கள். தமிழகத்தில் எல்லா சாதிகளுக்கும் தமிழக அமைச்சரவையில் பெரும்பான்மை இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நமது சமூகத்துக்கு அப்படியான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. நம் சமூகத்தின் பிரதிநிதி ஒருவருக்கு மட்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரும் பேசத் தெரியாதவர். இனியும் இதுபோன்ற சித்து வேலைகளை இந்தச் சமூகம் நம்பாது.

தமிழகத்தில் 5 தலைவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `ஒருகோடி மதிப்பில் பெரும்பிடுகு முத்தரையருக்கு மட்டும்தான் நூலகத்துடன் மணிமண்டபம் அமைக்கப்படும்' என அறிவித்திருக்கிறார். நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட பேரரசின் வரலாற்றை அந்த நூலகத்தில் வைத்து பொதுமக்கள் படிக்கும்படி செய்ய வேண்டும்.

மேலும், தமிழகத்தில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளிலும், 15 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் எங்கள் சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் கட்சிகளுக்கு எங்கள் ஓட்டு. அப்படி வழங்கத் தவறினால் இந்தத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவோம்" என எச்சரித்தார்.

இறுதியாக கே.கே செல்வகுமார், "இந்த மாநாட்டை நடத்துவதற்குக் காவல்துறை மிகக் கடுமையான நெருக்கடிகளைத் தந்தார்கள். அவற்றையெல்லாம் இந்த மாநாட்டைச் சிறப்புடன் நடத்துவதற்காகத் தாங்கிக்கொண்டும் இனிவரும் காலங்களில் எங்களை ஏளனமாக நினைத்து நெருக்கடியைக் கொடுத்தால் தக்கப் பதிலடி கொடுப்போம்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டதற்கு எங்களின் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழக முதல்வர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களைச் செய்துவிட்டு எங்களின் ஒட்டுமொத்த ஓட்டுகளை அறுவடை செய்வது இனி நடக்காது. அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். வரும் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் எங்கள் வீர முத்தரையர் முன்னேற்றச் சங்கத்துக்கு வாய்ப்பு வழங்கினால் அந்தக் கட்சிகளுக்கு எங்களின் ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருக்கிறோம்." என அறிவித்தார்.