Published:Updated:

பிரதமர் மோடியே... ராமானுஜம், பாரதி போன்றோர் `டிஸ்லெக்சியா’வைக் கடந்து சாதித்தவர்களே... தெரியுமா!

``டிஸ்லெக்சியா என்னும் கற்றல் குறைபாடு பாதிப்பு, வெளிப்படையாகத் தெரியாது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடல்ரீதியாக எந்தக் குறைபாடும் இருக்காது. கற்றலில் இருக்கும் குறைபாட்டைத்தவிர, மற்ற திறமைகள் அனைத்தும் மற்ற குழந்தைகளைப்போலவே இருக்கும். ஆனால், அவர்களுக்கு கற்பதில் மட்டுமே சிரமம் இருக்கும்.’’

பிரதமர் மோடியே... ராமானுஜம், பாரதி போன்றோர் `டிஸ்லெக்சியா’வைக் கடந்து சாதித்தவர்களே... தெரியுமா!
பிரதமர் மோடியே... ராமானுஜம், பாரதி போன்றோர் `டிஸ்லெக்சியா’வைக் கடந்து சாதித்தவர்களே... தெரியுமா!

மேற்கு வங்க மாநிலம், காரக்பூர் ஐ.ஐ.டி மாணவர்களுடன் `ஸ்மார்ட் இந்தியா ஹெக்கத்தான் 2019’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அந்த நிகழ்ச்சியில் 48 மையங்களைச் சேர்ந்த 1,300 மாணவர்கள் கலந்துகொண்டனர். அப்போது ஒரு மாணவி, `டிஸ்லெக்சியா’ என்னும் கற்றல் குறைபாடு குறித்தும், அந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் செய்யும் உதவிகள் குறித்தும் மோடியிடம் விளக்கினார்.

`அறிவார்ந்த மற்றும் படைப்புத்திறனுடைய மாணவர்களாக இருந்தபோதும் அவர்களுக்கு வாசிப்பு மற்றும் எழுதுவதில் குறைபாடு இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. அத்தகைய குறைபாடுடையவர்களே டிஸ்லெக்சியா குறைபாடால் பாதிக்கப்பட்டவர்கள். இத்தகையட மாணவர்களுக்கு நான் பல்வேறு வகையில் உதவி செய்துவருகிறேன்’ என அந்த மாணவி விளக்கிக்கொண்டிருந்தார். அவரது பேச்சை இடைமறித்த மோடி, கிண்டலான தொனியில், ``40 - 50 வயதுக் குழந்தைகளுக்கும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுமா?’’ எனக் கேட்டார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைத்தான் மோடி மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார் என்பதைப் புரிந்துகொண்டவர்கள் சிரித்தனர். ஆனால், மோடி பேசியதன் உள் அர்த்தம் அந்த மாணவிக்குப் புரியவில்லை. அதனால், ``இந்த வகையான பாதிப்பு 40-50 வயதுடையவர்களுக்கும் வரும்'' என்று அக்கறையுடன் பதிலளித்தார் அந்த மாணவி. இருந்தும் மோடி தொடர்ந்து, ``இப்படியானவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவிகள் குறித்து அறிந்தால், அவரின் தாய் மிகவும் சந்தோஷப்படுவார்'' என்று மீண்டும் கிண்டல் செய்தார்.

ராகுல் காந்தியைக் கேலிசெய்யும் நோக்கில் `டிஸ்லெக்சியா’ குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களைக் கிண்டல் செய்த மோடியின் பேச்சுக்கு, பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பின. `டிஸ்லெக்சியா’ என்பது உலகம் முழுக்கப் பரவலாக இருப்பது. இந்த குறைபாடால் பாதிக்கப்பட்ட பலரும், படிக்கும் காலத்தில் மக்கு என்றும், சோம்பேறி என்றும் பள்ளியிலும், சமூகத்திலும் அவமானப்படுத்தப்பட்டவர்கள்தாம். இருந்தும் அந்த அவமானங்களைக் கடந்து பலர் சாதித்துள்ளனர். 

இந்தி நடிகர் அபிஷேக் பச்சன், ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், அமெரிக்க நடிகர் டாம் குரூஸ், நடிகை சல்மா ஹெய்க், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் சாதனைகள் படைத்த மைக்கேல் பெல்ப்ஸ் மற்றும் அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் என `டிஸ்லெக்சியா’ பாதிப்பிலிருந்து மீண்டு சாதனை படைத்தவர்களின் பட்டியல் நீளம்.  

கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்காக `நிறைவகம்’ என்ற அமைப்பின் மூலம் பயிற்சிகள் அளித்து வருபவரும், அந்தக் குழந்தைகளுக்கான கற்பிக்கும் முறைகள்குறித்து `கற்றல் குறைபாடுகள் - கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்' என்ற நூலை எழுதியவருமான பிரியசகியிடம் பேசினோம்.

``டிஸ்லெக்சியா என்னும் கற்றல் குறைபாடு பாதிப்பு, வெளிப்படையாகத் தெரியாது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடல்ரீதியாக எந்தக் குறைபாடும் இருக்காது. கற்றலில் இருக்கும் குறைபாட்டைத்தவிர, மற்ற திறமைகள் அனைத்தும் மற்ற குழந்தைகளைப்போலவே இருக்கும். ஆனால், அவர்களால் கற்பதில் மட்டுமே சிரமம் இருக்கும். இந்த மாணவர்களை, மரமண்டை, மக்கு, சோம்பேறி என லேபிள் குத்தி அவமானப்படுத்துகிறார்கள். 

இந்தக் குறைபாடுகளில் பல வகை உண்டு. ஒரு மொழியைக் கற்பதில் இருக்கும் குறைபாட்டை `டிஸ்லெக்ஸியா’ என்பார்கள். ஒரு மொழியை எழுதுவதில் மட்டும் இருக்கும் குறையை `டிஸ்கிராபியா’ என்பார்கள். சில மாணவர்களுக்குக் கணக்குப்போடுவதில் மட்டுமே சிரமம் இருக்கும். அந்தக் குறைபாட்டை `டிஸ்கால்குலியா’ என்பார்கள். இந்த குறைபாடு குறித்த விழிப்புணர்வு தற்போதுதான் அதிகரித்துவருகிறது.

நம் முன்னோர்களில் பலருக்கும் இதுபோன்ற குறைபாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால், அது கண்டறியப்பட்டதில்லை. மகாகவி பாரதியாரின் கவிதைகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆனால், அவருக்கு கணக்குப்பாடம் பிடிக்காது. கணிதமேதை ராமானுஜன், கணிதத்தில் ஜீனியஸ். ஆனால், அவர் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சிபெறவில்லை. வின்ஸ்டன் சர்ச்சில் பள்ளிப் பாடங்களைப் படிக்கச் சிரமப்பட்டார். ஆனால், பிற்காலத்தில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். ஐன்ஸ்டீன், எடிசன்  போன்ற அறிவியல் மேதைகள், படிப்பதற்கே லாயக்கில்லை என முத்திரை குத்தப்பட்டவர்கள்தான். எடிசனுக்கு அவருடைய அம்மாதான் ஆதரவாக இருந்தார். அப்துல் கலாமே தன்னை ஒரு ஆவரேஜ் மாணவர் என்றுதான் கூறியிருந்தார்.

`டிஸ்லெக்சியா’ குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது பெற்றோர்களாலேயே அடையாளம் காண முடியாததுதான் வருத்தமான உண்மை. அவர்களை அடையாளம் கண்டு, சிறப்புப் பயிற்சிகள் அளித்து, பொதுத்தேர்வில் சிறப்புச் சலுகைகள் பெற்றுத்தருவது வரையிலான பணிகளை, கடந்த 8 ஆண்டுகளாகச் செய்துவருகிறோம். அந்த மாணவர்களின் ஐ.க்யூ அளவைப் பரிசோதனை செய்து, அதிலிருக்கும் குறைபாட்டுக்கு மருத்துவச் சான்றிதழ் பெற்று, அவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வின்போது கூடுதல் நேரம் ஒதுக்குவது, தேர்வு எழுத உதவியாளர் வைத்துக்கொள்ளப் பரிந்துரைப்பது போன்ற பணிகளைச் செய்துவருகிறோம்.

கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்கு தான் செய்துவரும் உதவிகளைக் கேட்டு, தன் சேவையை பிரதமர் பாராட்டுவார் என்றுதான் அந்த மாணவி எதிர்பார்த்திருப்பார். உண்மையில், அந்தச் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால், அதையும் அரசியலாக்கி, பிரதமர் கிண்டலடித்திருப்பது வேதனையளிக்கிறது. இது அந்த மாணவியை மட்டுமல்ல, அப்படி பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரையுமே அவமானப்படுத்தும் செயல். ஆனாலும், டிஸ்லெக்சியா குறைபாடால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தகைய அவமானங்களையெல்லாம் தாண்டித்தான் சாதித்துவருகிறார்கள்" என்றார்.