Election bannerElection banner
Published:Updated:

’நமோ டிவி’ எப்போது உருவானது.. யாருக்குச் சொந்தம்? - ஃப்ளாஷ்பேக் ரகசியங்கள் #NamOTv

’நமோ டிவி’ எப்போது உருவானது.. யாருக்குச் சொந்தம்? - ஃப்ளாஷ்பேக் ரகசியங்கள் #NamOTv
’நமோ டிவி’ எப்போது உருவானது.. யாருக்குச் சொந்தம்? - ஃப்ளாஷ்பேக் ரகசியங்கள் #NamOTv

இதற்கிடையேதான் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் வலைதளத்தில் 2019 மார்ச் 30-ம் தேதி தொடங்கி 'NaMO TV' பற்றி சத்தமில்லாமல் பதிவுசெய்துவந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிஸோடியா, மாநிலப் பள்ளிகளின் தரம் உயர்ந்திருப்பது பற்றி டெல்லி மக்களுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். டெல்லி எதிர்க்கட்சியான பி.ஜே.பி, 'ஒரு துணை முதல்வர் தேர்தல் விதிகளுக்கு முரணாக அனுமதியின்றிப் பிரசார முறையைச் செயல்படுத்தியிருக்கிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அளித்திருந்தது. இதற்கிடையேதான் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் வலைதளத்தில் 2019 மார்ச் 30-ம் தேதி தொடங்கி 'NaMO TV' பற்றி சத்தமில்லாமல் பதிவுசெய்துவந்தார். நமோ டி.வி, அந்த டி.வி-க்கான தனி ஆப், அது மட்டும் இல்லாமல் டாடா ஸ்கை, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் டி.டி.ஹெச் சேவை வழியாக அந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பப்படும் என்று அவரது பதிவுகளில் தொடர்ந்து குறிப்பிடப்பட்டுவந்தது. டாடா ஸ்கை முதலில், இதை இந்தி செய்தித் தொலைக்காட்சி என்று குறிப்பிட்டாலும், பிறகு செய்தித் தொலைக்காட்சி இல்லை, டி.டி.ஹெச் உபயோகம் தேவையில்லாத ஒரு வகை ஒளிபரப்பு என அறிவித்து குழப்பத்தை ஏற்படுத்தியது.

நமோ டி.வி பற்றி அந்தக் குறிப்பிட்ட தொலைக்காட்சியின் தளத்தில், “நமோ டி.வி ஓர் இந்தி மொழி செய்தி நிறுவனம். இதில், நரேந்திர மோடியின் நேரலைகள், அவருடைய காணொளிகள், செய்திகள், பேச்சுகள் உள்ளிட்டவை இடம்பெறும். இந்திய அரசியல்குறித்த சமீபத்திய செய்திகளை நீங்கள் இந்தத் தளத்தில் காணலாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையே, சுபாஷ் சந்திர போஸ் குறித்த திரைப்படம் ஒன்றை நேற்று திரையிட்டிருந்த, ’நமோ டி.வி’, இடையில் ஒரு நீண்ட இடைவெளிவிட்டு, அதில் நரேந்திர மோடி குறித்தான செய்திகளை மட்டும் தொடர்ந்து பகிர்ந்துவந்தது. 

உலகின் எந்த நாட்டுத் தலைவருக்குமே அவர்களுக்கென தனியாக ஒரு தொலைக்காட்சி இல்லாத நிலையில், முதல்முறையாக நரேந்திர மோடி தனக்கென தொலைக்காட்சி உருவாக்கியிருக்கும் முயற்சி, எவ்வகையிலும் குற்றம் இல்லை. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில், ஒரு துணை முதல்வர் கடிதம் எழுதியதற்கே கொதிக்கும் பி.ஜே.பி கட்சி உறுப்பினர்கள், தங்களது தலைவர் சொந்தமாக ஒரு தொலைக்காட்சி கம்பெனியே உருவாக்கியிருக்கிறார் என்பதற்கு எவ்வித சலனமும் இல்லாமல் இருக்கின்றனர். மற்றொரு பக்கம், நரேந்திர மோடி குறித்த செய்திகள் மட்டுமே அந்தத் தொலைக்காட்சியில் இடம்பெறுவதால், பி.ஜே.பி-யும் தங்களது ஒட்டுமொத்த கட்சிக்கான அதிகாரபூர்வ செய்தித் தொலைக்காட்சி என்று அறிவிக்க முடியாத சங்கடத்தில் உள்ளனர். 

இந்தத் தொலைக்காட்சிச் சேனலின் வரலாறும் ஒரு புதிர்ப் பக்கமாகவே இருக்கிறது. சேனலின் முன்னாள் உரிமையாளரான குஜராத்தின் சுஜாய் மேத்தா, ஒரு ஹோமியோபதி மருத்துவர். 2012-ம் வருடம் ரசிக்லால் என்பவருடன் இணைந்து, ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் New Hope Infotainment  என்கிற நிறுவனத்தை உருவாக்கி, அதன்கீழ் இந்தச் சேனலை உருவாக்கினார். அப்போது, குஜராத் தேர்தல் சமயத்தில் இந்தத் தொலைக்காட்சி உருவாக்கப்பட்டதால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் வழக்கு தொடுத்தது. அதனால், தேர்தலை ஒட்டி ஒரே ஒரு நாள் மட்டும் ஒளிபரப்பு ரத்துசெய்யப்பட்ட இந்த செய்திச் சேனல், மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. ஒரே வருடத்தில் 65 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியிருந்தாலும், அதன்பிறகு செயல்படாமலேயே போனது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பட்டியலிலும் இந்த நிறுவனம் இடம்பெறவில்லை.

தற்போது சுஜாய் மேத்தாவைத் தொடர்புகொண்டு பேசியபோது, “எனக்கு ஒன்றும் தெரியாது, என்னை விட்டுவிடுங்கள்” என்று கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டார். ஆனால், இந்த செய்திச் சேனல் தற்போது யாரால் இயக்கப்படுகிறது, சேனலுக்கான முதலீடு யார் தருகிறார்கள் என்பதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை. இந்த செய்திச் சேனல், நரேந்திர மோடியின் இணையதளத்திலும் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. செய்திச் சேனலுக்கான அப்ளிகேஷன் யாரால் உருவாக்கப்பட்டது என்கிற தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால், கவனிக்கப்படவேண்டிய விஷயமாக,  அதில் தொடர்பு எண் தரப்படவேண்டிய பகுதியில், தீனதயாள் மார்க் என பி.ஜே.பி மத்திய அலுவலகத்தின் முகவரி கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம்குறித்து விளக்கிப் பேசிய, பெயர் வெளியிட விரும்பாத தொழிற்சங்கத் தலைவர் ஒருவர், “ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் இயங்கும் சேனல்கள் மிகமிகக் குறைவு. வேறு ஒரு சேனல் பெற்ற உரிமத்துடன் சிலர் தங்களது சேனலை ஒளிபரப்புவார்கள். ஆனால், மிக வெளிப்படையாகச் சில கருத்துகளுடன் ஒரு தொலைக்காட்சி எவ்வித அனுமதியும் பெறாமல் இயங்கும்போது, இந்தத் தொலைக்காட்சி சேனலை ஒளிபரப்பிய டாடா ஸ்கை உள்ளிட்ட நிறுவனங்களின்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க நுகர்வோர்களுக்கு முழு உரிமை உண்டு” என்றார்.

சர்ச்சைக்குரிய இந்தச் சேனல்குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் புகார் அளித்துள்ள நிலையில், ஆணையம் வழக்கம் போல் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.   

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு