Published:Updated:

கொரோனா: 273 மருத்துவர்கள் உயிரிழந்தும் அரசிடமிருந்து பதிலில்லை! - இந்திய மருத்துவ சங்கம் வேதனை

மருத்துவர்
மருத்துவர் ( Representational Image/ Pixabay )

`273 மருத்துவர்கள் இதுவரை கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள். இருந்தும், அரசிடமிருந்து எந்தவோர் உதவியும் கிடைக்கவில்லை’ என இந்திய மருத்துவ சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.

பெருந்தொற்று கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன. நாடு முழுவதும் மார்ச் மாத இறுதியில் அமலான ஊரடங்கில், தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுவருகின்றன. ஊரடங்கு இதுவரை முழுமையாக விலக்கிக்கொள்ளப்படவில்லை.

கொரோனா
கொரோனா

இந்தநிலையில், கொரோனாவால் பாதிப்படைந்தவர்களை குணப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என முன்களத்தில் நின்று போராடுபவர்களும் இதனால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துவருகின்றனர். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம், கடந்த 8-ம் தேதி கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில், `மருத்துவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும், `மருத்துவர்களுக்கு ஆயுள் காப்பீடு உள்ளிட்ட வசதிகளையும் அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்’ எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், `இதுவரை இந்தக் கோரிக்கைக்கு அரசு செவிமடுக்கவில்லை’ என்று இந்திய மருத்துவ சங்கம் குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக ஆங்கில ஊடகத்திடம் பேசியுள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் பொதுச் செயலாளரான மருத்துவர் அசோகன், ``பிரதமர் மோடிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடிதம் எழுதியபோது கொரோனாவால் இறந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 196 ஆக இருந்தது. ஆனால், கடந்த இரண்டு வாரங்களில் இந்த எண்ணிக்கை 273-ஆக அதிகரித்துவிட்டது. உயிரிழக்கும் மருத்துவர்களுக்கு அரசு சார்பில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதுவும் இந்த இழப்பீடு அரசு மருத்துவர்களுக்கு மட்டுமே. தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு இந்த இழப்பீடு வழங்கப்படுவதில்லை.

மருத்துவர் அசோகன்
மருத்துவர் அசோகன்

தனியார் மருத்துவம்னைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அத்துடன், மருத்துவர்களுக்கான ஆயுள் காப்பீடு உள்ளிட்டவற்றையும் அரசு செய்துதர வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாகக் கடிதம் எழுதியும், அரசிடமிருந்து எந்தவொரு பதிலும் கிடைக்கப்பெறவில்லை.

புதுக்கோட்டை: `கொரோனாவுடன் தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகன்!' - நெகிழவைத்த மருத்துவர்கள்

இந்திய மருத்துவ சங்கம் நடத்திய ஆய்வில், நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் 3.5 லட்சம் பேரில், ஆகஸ்ட் 24-ம் தேதி வரை 1,096 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதில், 901 பேர் மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள், அவர்களில் 273 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கொரோனாவால் மருத்துவர்களின் இறப்பு சதவிகிதம் தனியார் மருத்துவர்களில் 15 சதவிகிதமாகவும், அரசு மருத்துவர்களைப் பொறுத்தவரை 8 சதவிகிதமாகவும் இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் கூறியிருக்கிறது.

மருத்துவர்
மருத்துவர்
Representational Image

மத்திய அரசு இது குறித்து பதிலளிக்காதநிலையில், சில மாநில அரசுகள் மருத்துவர்கள் விவகாரத்தில் உதவிகள் செய்ய முன்வந்திருப்பதாகவும் இந்திய மருத்துவ சங்கப் பொதுச் செயலாளர் மருத்துவர் அசோகன் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், ``தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் இழப்பீடு அறிவிப்பது மற்றும் மருத்துவர்களுக்கு உதவுவது போன்றவற்றைச் செய்துவருகின்றன.

அதேநேரம், அந்த உதவிகள் குறிப்பிட்ட மருத்துவர்களின் குடும்பங்களைச் சென்றடைந்தனவா என்பது தெரியவில்லை’’ என்றும் அசோகன் கூறியிருக்கிறார். `கொரோனா முன்களப் பணியின்போது உயிரிழக்கும் மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு அரசுகள் நின்றுவிடக் கூடாது அவர்களின் குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பையும் வழங்க வேண்டும்’ எனவும் இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு