கர்நாடகாவில் பல மாதங்களுக்கு முன்பு எழுந்த ஹிஜாப் சர்ச்சையில், முடிவாகக் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப்பை பயன்படுத்தத் தடைவிதித்த மாநில அரசின் உத்தரவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. பின்னர் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குத் தடைவிதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த மேல்முறையீட்டு வழக்கில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுதான்ஷு தூலியா, ஹேமந்த் குப்தா ஆகியோர், ஒருவருக்கொருவர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். இதனால் இந்த வழக்கு கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகாவின் மங்களூருவிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த புதன்கிழமை மாணவர் சங்கத்தின் தொடக்கவிழா நடந்திருக்கிறது. அதில் மாணவர்கள் நான்கு பேர், பிரபல பாலிவுட் பாடலுக்கு மேடையில் பர்தா அணிந்துகொண்டு நடனமாடியிருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம், மாணவர்களை இடைநீக்கம் செய்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

இது தொடர்பாக கல்லூரித் தரப்பு, "இது மாணவர்களின் நிகழ்ச்சி நிரலிலேயே இல்லை. சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடக்கிறது. மேலும், முதற்கட்ட நடவடிக்கையாக அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்துக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் கல்லூரி ஆதரிக்கவோ அல்லது மன்னிக்கவோ செய்யாது" எனத் தெரிவித்திருக்கிறது.