Published:Updated:

பிரபாகரன் உயிருடன் இருக்கலாம்: 'ரா' அதிகாரி திடுக் தகவல்!

Vikatan Correspondent
பிரபாகரன் உயிருடன் இருக்கலாம்:  'ரா' அதிகாரி திடுக் தகவல்!
பிரபாகரன் உயிருடன் இருக்கலாம்: 'ரா' அதிகாரி திடுக் தகவல்!

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட உடல், அவருடையதாக இருக்க வாய்ப்பில்லை என 'ரா' முன்னாள் அதிகாரியும், கடற்படை அதிகாரியுமான கார்கில் எம்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் உயிருடன் இருக்கலாம்:  'ரா' அதிகாரி திடுக் தகவல்!

ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "பிரபாகரன் தனக்கு தானே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு உயிரிழப்பதற்கான எந்த விதமான வாய்ப்புகளும் இல்லை. அவ்வாறான நிலையில் இருந்திருந்தால் ஒரு முறையான கைரேகை அல்லது மரபணு பரிசோதனை இருந்திருக்கும். பிரபாகரன் இறப்பு சான்றிதழ் தொடர்பாக, இலங்கை மீதான இந்தியாவின் அழுத்தம் காரணமாக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூலம் சட்ட அமைச்சரால் வெறும் அறிக்கை ஒன்றே வழங்கப்பட்டுள்ளது. அது வெறும் அறிக்கை மாத்திரமே. இந்தியாவிற்கு கொடுக்கப்பட்ட மரண சான்றிதழ் அல்ல. பிரபாகரன் இறந்திருக்கலாம் என ஊகிக்கப்படும் சான்றிதழே வழங்கப்பட்டன.

கொழும்பு மேல் நீதிமன்றம் மூலமாக சட்ட அமைச்சர், பிரபாகரன் இறந்துவிட்டதாக ஊகிக்கப்படுகின்றதென அறிக்கை வெளியிட்டார். இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 -ம் ஆண்டு மே 17 அன்று நந்திக்கடல் முள்ளிவாய்க்காலில் ஈழப் போர் கடைசி நாளில் கொல்லப்பட்டுள்ளார்  என்று கருதப்படுகின்றது. அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதனால் அவர் இறந்திருக்க கூடும் எனவும், இது தொடர்பான வழக்குகள் சட்டப்பூர்வமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிகாரப்பூர்வமாக பிரபாகரனின் மரணம் மே மாதம் 19-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

பிரபாகரனின் பெயர், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பட்டியலில் இருந்து அழிக்கப்பட வேண்டும் என்று இந்தியா, இலங்கையிடம் ஒரு மரண சான்றிதழ் கேட்ட பின்னர், பிரபாகரனின் மரண அறிக்கை இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.

இலங்கையினால் பெறப்பட்ட பிரபாகரனின் மரபணு அவர் இன்னும் இருக்கிறார் என்பதனை உறுதிப்படுத்தும். மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான பரிசோதனை வசதிகள் கூட இலங்கையில் இல்லை. நாங்கள் கேட்ட போது, பிரபாகரனின் உடலில் இருந்து ராணுவத்தினர் மாதிரிகள் எடுத்ததை பொது மக்கள் பார்த்தார்கள். பின்னர் அது பிரபாகரன்தான் என உறுதி செய்தார்கள். இந்தியா அந்த மரபணு மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கு இலங்கையிடம் கோரிய போது இலங்கை அதனை வழங்கவில்லை.

இந்தியா மரபணு பரிசோதனைகளை செய்யவில்லை என்றால் யார் அதனை செய்திருப்பார்கள். எந்தப் பரிசோதனை கூடத்தில் செய்யப்பட்டிருக்கும்? ஏன் கைரேகை மற்றும் மரபணு பரிசோதனை முடிவுகளை இன்னும் வெளியிடவில்லை? பிரபாகரனின் மரணத்திற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை, அத்துடன் மரணித்ததற்கான சான்றிதழ்களும் இல்லை. இந்த உண்மைகள் அது பிரபாகரனின் உடலாக இல்லாமல் இருப்பதற்கு காரணமாக உள்ளது. அவர் போர் முடிவுக்கு முன்பு, இந்த தாக்குதல்களினால் கொல்லப்படுவதற்கான எந்த தடயமும் அவரது உடம்பில் இல்லை. எனினும், பொதுமக்களை சமாதானப்படுத்த அவர்கள் தோற்றமுடைய மற்றொரு மனிதனின் உடல் காட்டப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா,  பிரபாகரனின் மரண அறிக்கையில் திருப்தியடைகின்றதா என்ற கேள்விக்கு பதில் அளித்த சுப்ரமணியம், "பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை எதிர்நோக்க வேண்டும் என்பதனால் இந்தியா இனி அதை பற்றி கவலைப்படவில்லை. அதேவேளை, பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் இறுதி யுத்தத்தின் ஒரு சில நாட்களுக்கு முன்னர் இலங்கை படையினரால் வெள்ளை வேனில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மீண்டும் பெரும் குழப்பம் ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்படைவதனால் இன்று யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழீழம் வருவதை யாரும் விரும்பவில்லை. ஈழம் வேண்டும் என விரும்புபவர்கள் இலங்கைக்கு வெளியில் வாழும் மக்கள்" என்று கூறியுள்ளார்.