Published:Updated:

`63 மீனவர்கள் எங்கே... கப்பலில் வந்தவர்கள் யார்?' - இரானில் தவிக்கவிட்ட இந்திய அதிகாரிகள்

இரானில் விடப்பட்ட மீனவர்கள்
இரானில் விடப்பட்ட மீனவர்கள்

சுமார் 650-க்கும் குறைவான மீனவர்கள்தான் இரானிலிருந்து கப்பலில் வந்திருக்க வேண்டும். ஆனால், தூத்துக்குடி துறைமுகத்துக்கு 750 பேர் வந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக மீன்பிடிக்கச் செல்ல முடியாமலும், சொந்த ஊர் திரும்பிவர முடியாமலும் 745 இந்திய மீனவர்கள் இரானில் தவித்து வந்தனர். இரானில் கொரோனா ஊரடங்கு காரணமாகவும், அரபி முதலாளிகள் உதவாததாலும் உணவு உள்ளிட்டவை கிடைக்காமல் மீனவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். அதிலும் பெரும்பாலான மீனவர்கள் விசைப்படகிலேயே சமைத்து, சாப்பிட்டு, உறங்கி வந்தனர்.

பல்வேறு மீனவ அமைப்புகள் கோரிக்கையின் பலனாக மத்திய அரசு மீனவர்களை இந்தியா அழைத்துவர தனிக் கப்பலை இரானுக்கு அனுப்பியது. இரானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் கப்பலில் தமிழகம் செல்வதற்காக முன்பதிவு செய்த அனைத்து மீனவர்களின் விசாக்களையும் கேன்சல் செய்து, அவரவர்களது அரேபிய முதலாளியிடம் இருந்து கிளியரன்ஸ் பெற்று 24.6.2020 அன்று பந்தர் அப்பாஸ் கப்பல் துறைமுகத்துக்கு வர வேண்டும் என்று கூறினார்கள்.

அதன்பேரில் சுமார் 50 மீனவர்களை தவிர மற்ற அனைத்து மீனவர்களும் தங்களது விசாவை கேன்சல் செய்து பாஸ்போர்ட்டுக்கு எக்ஸிட் செய்து, அரேபிய முதலாளிகளுக்குச் செலுத்த வேண்டிய கடனைச் செலுத்திவிட்டு கப்பல் பயணத்துக்காக மூன்று நாள்களுக்கு முன்பே சென்றுள்ளனர்.

அந்தக் கப்பலில் பயணிக்க தயாராக வந்த 43 தமிழக மீனவர்கள் மற்றும் 20 கேரள மீனவர்கள் உட்பட 63 மீனவர்களைக் கப்பலில் அனுமதிக்கவில்லை. கப்பலில் போதிய இடவசதி இல்லை என்று இந்திய தூதரக அதிகாரிகள் 63 மீனவர்களின் கப்பல் பயணத்துக்கு மறுத்துள்ளனர்.

சர்ச்சில்
சர்ச்சில்

இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த மீனவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டதன்பேரில் அந்த மீனவர்கள் தங்களது விசாவை கேன்சல் செய்து, பாஸ்போர்ட்டில் எக்ஸிஸ்ட் செய்ததுடன், அரேபிய முதலாளியிடமிருந்து கிளியரன்ஸும் பெற்றார்கள். இதனால் அவர்களை அரேபிய முதலாளிகள் மீண்டும் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாகவும் மீனவர்கள் தங்கியிருந்த விசைப்படகு தற்போது அரபி முதலாளியின் கைவசம் சென்றுவிட்டதால் அவர்கள் தங்குவதற்கு இடமின்றியும் உணவின்றியும் இரான் தெருக்களில் தவித்துக் கொண்டிருப்பதாகவும் மீனவ அமைப்புகள் குற்றம்சாட்டின. எனவே, அவர்களை இரானில் உள்ள இந்திய தூதரகத்தில் தங்குவதற்கு இடம் அளிக்க வேண்டும் எனவும் மீனவ அமைப்புகள் கோரிக்கை வைத்தன.

`7 நாள்களுக்கான உணவுப் பொருள்கள் கிடைத்திருக்கிறது!’- இரானில் தவிக்கும் 721 இந்திய மீனவர்கள்

இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி இரானில் இருந்து மீனவர்களுடன் புறப்பட்ட கப்பல் இன்று காலை தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. அந்தக் கப்பலில் 750 பேர் வந்துள்ளதாகவும் மீனவர்களுக்காக அனுப்பப்பட்ட கப்பலில் மீனவர்களை விட்டுவிட்டு வேறு நபர்களை அழைத்து வந்ததாக மீனவ அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

இதுகுறித்து தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில் கூறுகையில், ``தமிழக மீனவர்களுக்காக அனுப்பப்பட்டது அந்தக் கப்பல். இரானில் 745 மீனவர்கள்தான் இருந்தார்கள். அதிலும் சுமார் 50 மீனவர்கள் கொரோனா முடிந்த பிறகு ஊர் திரும்புவதாகக் கூறி அங்கேயே தங்கியுள்ளனர். எனவே சுமார் 700 மீனவர்கள் மட்டுமே கப்பலில் பயணிக்க வந்தார்கள். அதில் 65 மீனவர்களை விட்டுவிட்டு வந்ததால் சுமார் 650-க்கும் குறைவான மீனவர்கள்தான் கப்பலில் வந்திருக்க வேண்டும்.

இரானில் தவிக்கும் மீனவர்கள்
இரானில் தவிக்கும் மீனவர்கள்

ஆனால், இரானிலிருந்து இன்று காலை 9 மணியளவில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த கப்பலில் 750 பேர் வந்துள்ளார்கள். அப்படியானால் மீனவர்கள் அல்லாத 150 பேரை அந்தக் கப்பலில் அழைத்து வந்துள்ளார்கள். கப்பலில் பயணிக்க 2,400 ரூபாய்தான் கேட்டார்கள். இரானில் தவிக்கும் மீனவர்கள் இனி விமானத்தில்தான் இந்தியா வர முடியும். அதற்கு 35,000 ரூபாய் செலவாகும். அதிலும் இரானில் இருந்து டெல்லிக்குத்தான் விமானம் உள்ளது. அங்கிருந்து அவர்கள் குமரி மாவட்டம் வர வேண்டும். எனவே, மீனவர்கள் தங்கும் செலவு, உணவு மற்றும் விமான செலவை மத்திய மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு