Published:Updated:

ஆந்திரா: பெல்ட்டால் அடித்து மொட்டையடித்த போலீஸார்! - பட்டியலின இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

தாக்கப்பட்ட இளைஞர்
தாக்கப்பட்ட இளைஞர் ( HT )

``இளைஞர்களைக் காவல்துறையினர் அவமானப்படுத்திய சம்பவத்துக்காக நாங்கள் வருந்துகிறோம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.”

உலகளவில் காவல்துறை அதிகாரிகள் மக்களிடம் நடந்து கொள்ளும்விதம் குறித்தும் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்துவது குறித்தும் விவாதங்கள் நடந்து வருகின்றன. அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட சம்பவம், சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் காவலர்கள் தாக்கியதை அடுத்து உயிரிழந்த சம்பவம் ஆகியவை இந்த விவாதங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பான பதற்றங்களே இன்னும் முடியாத நிலையில், ஆந்திர மாநிலத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவலர்கள் கடுமையாகத் தாக்கி அவரது தலையை மொட்டையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை
காவல்துறை

ஆந்திராவில் உள்ள ஹைதராபாத் பகுதியில் இருந்து சுமார் 271 கி.மீ தொலைவில் கோதாவரி என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள வேதுல்லப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வரபிரசாத் என்ற இளைஞர். பட்டியலினத்தைச் சேர்ந்த இந்த இளைஞரை அம்மாநில ஆளும்கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவருக்கு ஆதரவாகச் செயல்படும் காவலர்கள் இணைந்து கடுமையாகத் தாக்கியதோடு அவரது தலையை மொட்டையடித்து மீசையையும் மழித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் கடந்த திங்கள்கிழமை நடந்துள்ளது. அவர் தாயின் கண்முன் வைத்தே காவலர்கள் அவரை தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலத்த காயங்களுக்கு ஆளான இளைஞர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கர்நாடகா அதிர்ச்சி: பைக்கை தொட்ட இளைஞர்! - சாதியைக் காரணம் காட்டி தாக்கிய கும்பல்?

வரபிரசாத் வசித்து வரும் பகுதியில் மரணம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இதனால், அவ்வழியாக வரும் வாகனங்களை மாற்றுப் பாதையில் அனுப்பி வைக்கும் பணியில் வரபிரசாத் அவர் நண்பர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அந்த வழியாக மணல் லாரி ஒன்றும் வந்துள்ளது. இதனை, வரபிரசாத் தடுத்து நிறுத்தி வேறு வழியில் செல்லுமாறு கூறியுள்ளார். இந்தத் தகவல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸைச் சேர்ந்த அரசியல் பிரமுகருக்குச் சென்றுள்ளது. கோபமடைந்த அவர் அப்பகுதிக்குச் சென்று காரை வைத்து வரபிரசாத்தை இடித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இருவருக்கும் இடையில் வார்த்தை மோதல்கள் நடந்துள்ளன. இந்தச் சம்பவத்தில் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவலின்படி, உள்ளூர் காவல்நிலையத்தில் உள்ள சப்- இன்ஸ்பெக்டரிடம் சட்டமன்ற உறுப்பினர், `பிரசாத் என்ற இளைஞனுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதனையடுத்து நடந்த சம்பவங்கள் குறித்து பிரசாத் பேசும்போது, ``வாக்குவாதம் நடந்ததற்கு அடுத்தநாள் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் இரண்டு கான்ஸ்டபிள்களும் எங்கள் கிராமத்துக்கு வந்து என்னையும் என்னுடன் இருந்த இருவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கண்மூடித்தனமாக பெல்ட்டை வைத்து என்னை தாக்கினார். உதைத்தார். பின்னர், ஒரு முடிதிருத்தும் நபர் ஒருவரை அழைத்து என் தலையை மொட்டையடித்து மீசையையும் மழித்தார். நான் அவர்களிடம் கெஞ்சினேன். ஆனாலும் விடவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தாக்கப்பட்ட இளைஞர்
தாக்கப்பட்ட இளைஞர்

பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் நடத்தி மொட்டையடிக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இளைஞரை தாக்கிய காவலர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டங்களின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி மோகன் ராவ் தெரிவித்துள்ளார்.

``இளைஞர்களை காவல்துறையினர் அவமானப்படுத்திய சம்பவத்துக்காக நாங்கள் வருந்துகிறோம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்வோம்” என்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் இந்த சம்பவத்துக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ குமார் கூறியுள்ளார். ``நீதி வழங்கத் தவறினால் கடுமையான போராட்டங்கள் தொடங்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சாத்தான்குளம்: அடுக்கடுக்கான கேள்விகள்; திணறிய காவலர்கள்! - சி.பி.ஐ விசாரணையில் என்ன நடந்தது?
அடுத்த கட்டுரைக்கு