Published:Updated:

முதலில் சனி பகவான், அப்போ அஜித் பவார்... இப்போ ஐயப்பன்... யார் இந்தத் திருப்தி தேசாய்?

வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழையும் போராட்டம் நடத்தும் திருப்தி தேசாய், தற்போதைய மகாராஷ்டிர மாநில அரசியல் குழப்பத்துக்குக் காரணமாக அஜித் பவாரையும் எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்தியவர்.

திருப்தி தேசாய்
திருப்தி தேசாய்

சபரிமலை விவகாரம் மீண்டும் விஸ்வருபம் எடுத்துள்ளது. கடந்த முறை சபரிமலை ஏறிய பிந்து, இந்த முறையும் மலை ஏற முயன்றார். இதற்காக, கொச்சி வந்த பிந்து மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்து, இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சபரிமலை விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவாகப் புனா நகரைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் முக்கிய பங்காற்றுகிறார். கடந்த ஆண்டு சபரிமலை செல்லத் திருப்தி வந்தபோது, கொச்சி விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டார். இந்த சீஸனில், சபரிமலை செல்வதற்காக கொச்சிக்கு நேற்று வந்த திருப்தி தேசாயை தடுத்து நிறுத்திய போலீஸார், நேற்றிரவு அவரைச் சொந்த ஊரான புனேவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். சபரிமலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இரட்டை வேடம் போடுவதாகக் கேரள தேவசம் போர்டு அமைச்சர் ஏ.கே.பாலன் கூறியுள்ளார். கேரள அரசுக்கு அவப் பெயரை உருவாக்குவதற்காக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திருப்தி தேசாயைத் தூண்டிவிடுவதாகவும் ஏ.கே.பாலன் குற்றம் சாட்டியுள்ளார்.

சபரிமலை
சபரிமலை
Photo: AP

தொடர்ந்து, சர்ச்சையில் சிக்கிவரும் இந்த திருப்தி தேசாய் யார்?

புனேவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் `பூமாதா பிரிகேட்' என்ற அமைப்பின் தலைவர்தான் திருப்தி தேசாய். கல்லூரிப் படிப்பை பாதியில் கைவிட்ட திருப்திக்கு, திருமணமாகி 8 வயதில் மகனும் உண்டு. குடும்பத்தினரின் முழு ஆதரவு திருப்தி தேசாய்க்கு இருப்பதால் தொடர்ந்து இதுபோன்ற போராட்டங்களில் அவரால் ஈடுபட முடிகிறது.

பூமாதா பிரிகேட் அமைப்பு ஆண் - பெண் சமத்துவத்துக்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது. சபரிமலையில் மட்டுமல்ல இந்தியாவில் இன்னும் சில கோயில்களிலும் பெண்கள் அனுமதிக்கப்படாத நிலை இருந்தது. அவற்றில், சனி ஷிங்னாபூர் கோயில் குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரத்தில் அகமதுநகர் மாவட்டத்தில் ஷிங்னாபூர் என்ற கிராமத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. சனி பகவான்தான் இங்கே முதல் கடவுள். கோயிலுக்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி கிடையாது. முதலில் இந்தக் கோயிலில் பெண்களை அனுமதிக்குமாறு திருப்தி தேசாய் போராடினார்.

சனி பகவான் கோயிலில் திருப்தி
சனி பகவான் கோயிலில் திருப்தி

பம்பாய் உயர் நீதிமன்றம் சனி ஷிங்னாபூர் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க உத்தரவிட்டது. தொடர்ந்து 2015-ம் ஆண்டு இந்தக் கோயிலுக்குள் செல்ல திருப்தி தேசாய் முயன்றார். முதல் முயற்சி தோல்வியில் முடிந்துவிட, 2016-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி மீண்டும் பலத்த பாதுகாப்புடன் சனி பகவான் கோயிலுக்கு திருப்தி தேசாய் சென்றார். இந்த முறை நீதிமன்ற உத்தரவு காரணமாக திருப்தி தேசாய்க்கு பாதுகாப்புடன் அனுமதி கிடைந்தது. இங்கே 4 அடி உயர கருங்கல் ஒன்றுதான் சனி பகவானாகப் பாவிக்கப்படுகிறது. கோயிலுக்குள் சென்ற திருப்தி சனி பகவானுக்கு பூஜையும் செய்தார். 400 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான் கோயிலுக்குள் பெண்கள் முதன்முறையாக அனுமதிக்கப்பட்டனர்.

`சர்ச்சைக்குரிய மாற்றுப்பாலின உரிமை பாதுகாப்பு மசோதா!'- மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

அப்போது, `சனி பகவானின் தீவிர பக்தை நான். என்னை அனுமதிக்க மறுப்பது எந்த விதத்தில் நியாயம்' என்ற கேள்வியை எழுப்பினார் திருப்தி. ``மதங்களை எதிர்த்து நான் போராடவில்லை ஆண் பெண் சமத்துவத்துக்காகவே போராடுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று திருப்தி தேசாய் சொல்வார். மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்கா புகழ்பெற்றது. இந்த தர்காவுக்கும் பெண்கள் செல்ல தடை உள்ளது. இந்தத் தர்காவுக்கு செல்லவும் செல்ல பல முறை அவர் முயற்சி செய்துள்ளார். இது போன்ற முயற்சிகளில் சில நேரம் தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளார் திருப்தி தேசாய்.

ஆண் - பெண் சமத்துவத்துக்காகவே நான் போராடுகிறேன்; மதங்களுக்கு எதிராக அல்ல.
திருப்தி தேசாய்

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, திருப்தி தேசாய் வெற்றி பெற்றார். தர்காவில் இஸ்லாமிய மத குருவின் சமாதி இருக்கும் பகுதியைத் தவிர, மற்ற பகுதிகளுக்குச் செல்ல பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீதிமன்றம் நீக்கியது. தொடர்ந்து, ஹாஜி அலி தர்காவுக்கும் திருப்தி சென்று வழிபாடு நடத்தினார். வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழையும் போராட்டம் மட்டும்தான் அவர் நடத்தியுள்ளாரா என்றால் இல்லை. திருப்தி தேசாய் நடத்திய போராட்டங்களில் முக்கியமானது அஜித் பவாருக்கு எதிரானது.

மகாராஷ்டிர அரசியலில் பெரும் குழப்பத்துக்குக் காரணமாக இருக்கும் அஜித் பவார் அந்த மாநில அமைச்சராக இருந்தபோது, 2007-ம் ஆண்டு அவரைத் தலைவராகக் கொண்ட அஜித் கூட்டுறவு வங்கியில் ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஊழலில் அஜித் பவாருக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வங்கியில் டெபாசிட் செய்த 35,000 மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அஜித் பவார்
அஜித் பவார்
`ட்ரோஜன் குதிரை’ அஜித் பவார்…அமித் ஷாவை உடைத்த சரத் பவாரின் அரசியல்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டி திருப்தி தேசாய் மகாராஷ்டிர மக்களைத் திரட்டி அஜித் பவாருக்கு எதிராக 2009-ம் ஆண்டு முதல், தொடர்போராட்டத்தில் ஈடுபட்டார். தீவிர போராட்டம் காரணமாக 29,000 வாடிக்கையாளர்களுக்கு பணம் திருப்பிக் கிடைத்தது. இந்தப் போராட்டம் வெற்றி பெற்றதால், மகாராஷ்டிராவில் பிரபலமானார். தற்போது பூமாதா பிரிகேட் அமைப்புக்கு மகாராஷ்டிரத்தில் 21 கிளைகள் உள்ளன. 4,000 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.