Published:Updated:

அரசு வைக்கும் பேனர்கள் விழாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

சுபஸ்ரீ மரணம் நிகழ்ந்து ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், இந்தியப் பிரதமரையும் சீன அதிபரையும் வரவேற்று பேனர் வைப்பதற்காகச் சென்னை உயர் நீதிமன்றத்திடம் தமிழக அரசு அனுமதி கோரியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Narendra Modi with China's President
Narendra Modi with China's President

திருமணம் மற்றும் காதுகுத்து விழாக்கள், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் என எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தமிழ்நாட்டின் கலாசாரமாக மாறியிருக்கிறது. அது, மனித உயிரைக் குடிக்கும் அளவுக்கு ஆபத்து மிகுந்ததாகவும் ஆகிவிட்டது.

ADMK's Digital Banners
ADMK's Digital Banners

சென்னையில், ஆளும் கட்சியான அ.தி.மு.க-வின் நிர்வாகி ஒருவரின் குடும்ப விழாவுக்காகச் சாலையின் நடுவில் வைக்கப்பட்ட ஒரு பேனரால் இளம்பெண் சுபஸ்ரீயின் மரணம் நிகழ்ந்தது. அதனால், பேனர் கலாசாரத்துக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் கடும் கோபம் எழுந்தது.

இந்தப் பிரச்னை நீதிமன்றத்திலும் எதிரொலித்தது. ‘அரசு அதிகாரிகள், ரத்தத்தை உறிஞ்சும் நபர்களாக மாறிவிட்டனர். இன்னும் எவ்வளவு ரத்தம்தான் உங்களுக்குத் தேவைப்படும்? காத்துகுத்து, கிடா வெட்டு என அனைத்துக்கும் பேனர் வைக்கிறார்கள். விவாகரத்துக்கு மட்டும்தான் இன்னும் பேனர் வைக்கவில்லை’ என்று உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. அத்துடன், ‘தலைமைச் செயலகத்தை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு மட்டும்தான் தாங்கள் மாற்றவில்லை. ஆளும் கட்சியினர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல் சட்டவிரோதமாக பேனர்களை வைக்கிறார்கள்’ என்றும் நீதிமன்றம் சாடியது.

Edappadi Palaniswami
Edappadi Palaniswami

அந்த நேரத்தில், பேனர் கலாசாரத்துக்கு எதிராகத் திரைத்துறையினர் பலரும் குரல் கொடுத்தனர். தங்கள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்க மாட்டோம் என்று அரசியல் கட்சிகள் அறிக்கை வெளியிட்டன. ‘பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன்’ என்று தன் கட்சியின் தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

சுபஸ்ரீ மரணம் நிகழ்ந்து ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், அரசு சார்பில் பேனர் வைப்பதற்கு அனுமதி கேட்டு, உயர் நீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. அந்தச் சமயத்தில், இரு நாடுகளின் தலைவர்களுக்கும் வரவேற்பு பேனர்கள் வைப்பதற்கான அனுமதிக்காகத்தான் நீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது.

Subashree
Subashree

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை அரசியல் கட்சியினரும் சமூகச் செயற்பாட்டாளர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். ‘தலைவர்களை வரவேற்க உங்களுக்கு வேறு வழியே இல்லையா? ஏன், மீண்டும் பேனர் கலாசாரத்தை ஊக்குவிக்கிறீர்கள்?’ என்று தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன். அவர், ‘பேனர் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியை பிரதமர் மோடி ஒரு முன்னோடியாகச் செய்தால், தமிழக மக்களின் உணர்வுகள் மீதான அக்கறையைப் பிரதிபலிக்கும்’ என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

`பேனர் வைத்தது தவறுதான்’ - நீதிபதியிடம் ஒப்புக் கொண்ட அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால்

‘சீனாவிலேயே சிறிய கொடிகளை வைத்துத்தான் தலைவர்களை வரவேற்பார்கள். இங்கு ஏன் பேனர் வைக்க அனுமதி கேட்கிறீர்கள்?’ என்று உயர் நீதிமன்றத்தில் தி.மு.க வாதிட்டது. தமிழக அரசோ, ‘சட்டத்துக்கு உட்பட்டு பேனர் வைப்பதில் தவறில்லை’ என்று நீதிமன்றத்தில் தன் வாதத்தை எடுத்துவைத்தது.

இந்தியப் பிரதமர், சீன அதிபர் ஆகியோருக்கு வரவேற்பு பேனர் வைப்பதற்கு அனுமதி கோரி, உயர் நீதிமன்றத்தைத் தமிழக அரசு நாடியதில் ஒரு திருப்பம். பேனர் வைப்பதற்கான தடை என்பது அரசியல் கட்சிகளுக்குத்தான் என்றும், தலைவர்களை வரவேற்பதற்கான பேனர்களைப் பொது இடங்களில் வைப்பதற்கு மாநில அரசோ, மத்திய அரசோ அனுமதி கோரத் தேவையில்லை என்றும் கூறியது, சென்னை உயர் நீதிமன்றம்.

Narendra Modi
Narendra Modi

போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் பேனர்கள் வைக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றத்தில் மட்டுமல்லாமல், வீதியிலும் இறங்கிப் போராடுபவர் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், "தமிழ்நாட்டில் விவசாயிகளின் நிலை கவலைக்கிடமாக இருக்கும்போது, மக்களைக் காக்க வேண்டிய பிரதமருக்கு பேனர்களா? பேனர் விளம்பரம் இல்லாமல் சென்னைக்கு பிரதமர் மோடி வரமாட்டாரா? மோடி வருகிறார், மோடி வருகிறார் என்று கூறி மாமல்லபுரத்தில் சிறுதொழில் செய்யும் மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துள்ளார்கள். சுபஸ்ரீயின் மரணம் நிகழ்ந்து ஒரு மாதம்கூட முடியாத நிலையில், மீண்டும் பேனர் வைப்பதற்குத் தமிழக ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். பிரதமர் மோடி மக்களை மதிப்பவராக இருந்தால், பேனர் வைக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அவர் வரக்கூடாது" என்று கோபத்துடன் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் பேசினோம். அவர், “சுபஸ்ரீ மரணம் நிகழ்ந்து ஒரு மாதம்கூட முடியாத நிலையில், பேனர் வைப்பதற்காக நீதிமன்றத்தை அரசு நாடியிருப்பது, மக்களின் உணர்வுகளுக்கும் அரசுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது என்பதைக் காண்பித்துள்ளது. அரசைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என்று ஆட்சியாளர்கள் யோசிக்கவில்லை. ஒருவேளை, பேனர் வைத்தால்தான் சீனப் பிரதமர் இங்கு வந்து கையொப்பமிடுவார் என்று ஏதாவது சட்டவிதி இருந்தால், பேனர் வைக்கலாம். அப்படி எதுவும் இல்லை. நம் பிரதமர் அடிக்கடி வெளிநாடு செல்கிறார். நம் முதல்வர் சமீபத்தில் வெளிநாடுகளுக்குச் சென்றுவந்தார். அப்போது, அங்கெல்லாம் இவர்களுக்கு பேனர்கள் வைத்தார்களா? தமிழக அரசின் இந்த நடவடிக்கை தவறான முன்னுதாரணம்.

நரேந்திர மோடி மற்றும் ஷி ஜினபிங்
நரேந்திர மோடி மற்றும் ஷி ஜினபிங்

‘சென்னை மாநகராட்சி சட்டப்படி, பேனர் வைப்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. நீங்கள் எதற்காக நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டுவந்தீர்கள்’ என்று நீதிமன்றம் கேட்டிருக்கிறது. அப்படியொரு சட்டம் இருப்பதுகூடத் தெரியாமல் நீதிமன்றத்துக்கு அரசு சென்றுள்ளது.

மேலும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் பேசியிருக்கிறார். பேனரும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பொருள்தான். அனுமதி பெற்று வைக்கப்படும் பேனர்கள் விழாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அரசால் வைக்கப்பட்ட பேனர் என்பதால், கீழே விழமாட்டேன் என்று அந்த பேனர் உறுதியெடுத்துக்கொள்ளுமா?

தயவுசெஞ்சு பேனர்   வைக்காதீங்கய்யா! - கதறும் சுபஸ்ரீ பெற்றோர்...

அரசு முற்றிலும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் நடந்துகொள்கிறது. சென்னை மாநகராட்சி, தமிழக அரசு ஆகியவற்றுடன் நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகமும் சேர்ந்து இதற்காக நீதிமன்றம் சென்றிருக்கிறது. இரண்டு தலைவர்களும் மீனம்பாக்கத்திலிருந்து ஹெலிகாப்டரில்தான் போகப்போகிறார்கள். அப்படியிருந்தும், இவர்கள் ஏன் சாலையில் பேனர்களை வைக்கிறார்கள் என்பது புரியவில்லை” என்றார்.