Published:Updated:

முதல்வர் விசிட்; காலியான சேர்கள்; வீடியோ எடுத்த செய்தியாளரைத் தாக்கிய அ.தி.மு.க-வினர்! கரூர் சர்ச்சை

காலியான சேர்கள்
காலியான சேர்கள் ( நா.ராஜமுருகன் )

அமைச்சர் பேசும்போதே, கூட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட சேர்களில் அமர்ந்திருந்தவர்கள் நடையைக் கட்டினர். இதனால், சேர்கள் காலியாகக் கிடந்தன. அதை கவனித்த செய்தியாளர் ஒருவர் வீடியோ எடுக்க, அவரை அமைச்சரின் ஆதரவாளர்கள் தாக்கினர்.

கரூருக்கு விசிட் அடித்த முதல்வரின் நிகழ்ச்சியில் காலியாகக் கிடந்த சேர்களை வீடியோ எடுத்த செய்தியாளரை, அ.தி.மு.க-வினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், முதல்வர் விவசாயிகள் மாநாட்டில் பேசும்போது, செய்தியாளர்கள் அனைவரும் செய்தி சேகரிக்காமல் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

உழவன் திருவிழா மாநாட்டில் முதல்வர்
உழவன் திருவிழா மாநாட்டில் முதல்வர்
நா.ராஜமுருகன்
கரூர் காந்தி சிலை அகற்றம்: போராடிய ஜோதிமணி; தரதரவென இழுத்து கைதுசெய்த போலீஸ்!

பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பிரசாரத்துக்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரூர் வருகை தந்தார். கரூர் வந்தடைந்த முதல்வருக்கு, தமிழக போக்குவரத்துத் துறைஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அ.தி.மு.க நிர்வாகிகளும் வரவேற்பு அளித்தனர். கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைக்கப்பட்ட தமிழகத்தின் மூன்று முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை என நான்கு சிலைகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார்.

முதல்வரின் பிரசாரம்
முதல்வரின் பிரசாரம்
நா.ராஜமுருகன்

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,``அடிக்கடி கட்சி மாறுகிற பச்சோந்தி செந்தில் பாலாஜி. கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு சின்னங்களில் போட்டியிட்ட ஒரே எம்.எல்.ஏ வேட்பாளர் செந்தில் பாலாஜிதான். அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றவர் அவர்.

அங்கிருக்கும் மக்களுக்கு ஐந்து சென்ட் நிலம் கொடுப்பதாகக் கூறி, மக்களை ஏமாற்றி எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றார். பொய் சொல்வது எப்படி என செந்தில் பாலாஜியிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். காலத்துக்கு ஏற்றவாறு நடிக்கக்கூடியவர் செந்தில் பாலாஜி. கரூர் மாவட்டத்துக்கு எத்தனை தலைவர்களை இறக்குமதி செய்து தி.மு.க பிரசாரம் செய்தாலும், அ.தி.மு.க வேட்பாளர்களை வெல்ல முடியாது. என்றைக்கும் நீதி, தர்மம், உண்மைதான் வெல்லும் என்ற வரலாறுதான் நிலைத்து நிற்கும். நாட்டு மக்கள் நிம்மதியாக உறங்குகிறார்கள் என்றால், அதற்கு தமிழக அரசுதான் காரணம். நாட்டில் எத்தனையோ மாநிலங்களில் ஆளும் அரசு இருக்கிறது.

உழவன் திருவிழா மாநாடு
உழவன் திருவிழா மாநாடு
நா.ராஜமுருகன்

ஆனால், சட்ட ஒழுங்கைப் பேணிக்காப்பதில் முதல் மாநிலம் தமிழ்நாடு என இந்தியா டுடே நாளிதழ் நடத்திய ஆய்வில் தேர்வாகி, கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டம்-ஒழுங்கை பராமரிக்ககூடிய நல்ல அரசு தமிழக அரசுதான் என்று விருதுகளை வழங்கியிருக்கிறது. இந்தியாவிலே அதிக குடிநீர் திட்டங்களைச் செயல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகம்தான்" என்றார்.

தொடர்ந்து, கரூர் அருகேயுள்ள வாங்கல் பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கும் உழவன் திருவிழா மாநாடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடியின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். ஆனால், அமைச்சர் பேசும்போதே, கூட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட சேர்களில் அமர்ந்திருந்தவர்கள் நடையைக் கட்டினர். இதனால், சேர்கள் காலியாகக் கிடந்தன. அதை கவனித்த செய்தியாளர் ஒருவர் வீடியோ எடுக்க, அவரைச் சூழ்ந்துகொண்ட அமைச்சரின் ஆதரவாளர்கள்அவரைத் தாக்கினர்.

காலியான சேர்கள்
காலியான சேர்கள்
நா.ராஜமுருகன்

வீடியோ எடுக்கப் பயன்படுத்திய செல்போனையும் பறித்துக்கொண்டனர். இதனால் கோபமடைந்த கரூர் மாவட்ட செய்தியாளர்கள் அனைவரும், முதல்வரின் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டு மாநாட்டு திடலைவிட்டு வெளியேறினர். இதனால், முதல்வர் பேசும்போது முக்கியச் செய்தியாளர்கள் யாரும் செய்தி சேகரிக்கவில்லை. தனது நிகழ்ச்சியில் இப்படி நடந்ததால், முதல்வர் அப்செட்டானதாகச் சொல்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு