Published:Updated:

`ஓட்டுக்குப் பணமா; ஆனைக்கொம்பனுக்கு இழப்பீடா?’ - அ.தி.மு.க-வினரின் செயலால் கொதிக்கும் தி.மு.க

`ஆனைக்கொம்பன் தாக்குதலுக்கான இழப்பீடுங்கற பேர்ல வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறதுக்கான ஏற்பாடுகள் தீவிரமா நடந்துக்கிட்டு இருக்கு.

ஆனைக்கொம்பன் தாக்குதல்
ஆனைக்கொம்பன் தாக்குதல்

தேர்தல் சமயத்தில், ஓட்டுக்கு பணம் கொடுக்க, அரசியல் கட்சிகள் விதவிதமான வியூகங்களை வகுத்து அசத்துவது வழக்கம். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அ.தி.மு.க பிரமுகர்கள், தற்போது நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில், நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன் பூச்சித்தாக்குதலை வைத்து வாக்காளர்களை வளைக்க முயல்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தாக்குதலுக்குள்ளான நெற்பயிர்கள்
தாக்குதலுக்குள்ளான நெற்பயிர்கள்

காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி நெற்பயிரில் யானைக்கொம்பன் பூச்சித்தாக்குதல் ஒரு முக்கிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இந்நிலையில்தான் பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள மக்களிடம், ஆனைக்கொம்பன் பூச்சித்தாக்குதலுக்கு இழப்பீடு வழங்க இருப்பதாகவும், இதற்காக, ஆதார் கார்டு, பேங்க் பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களின் நகலை அ.தி.மு.க பிரமுகர்கள் பெறுவதாகவும் தி.மு.க-வினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க. பிரமுகர் வீரசேனன், ``ஆனைக்கொம்பன் தாக்குதலுக்கான இழப்பீடுங்கற பேர்ல வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறதுக்கான ஏற்பாடுகள் தீவிரமா நடந்துக்கிட்டு இருக்கு. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிச்ச பிறகு, தமிழக அரசு, சட்டப்படி இழப்பீடு கொடுக்க முடியாது. இது விதிமுறை மீறல். ஒருவேளை அப்படிக் கொடுக்கிறதா இருந்தாலுல்கூட, உண்மையாகவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குதான் கொடுக்கணும்.

ஆனைக்கொம்பன் பூச்சித்தாக்குதல்
ஆனைக்கொம்பன் பூச்சித்தாக்குதல்

இதுக்கு வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரடியாக விவசாயிகளோட வயலைப் பார்வையிட்டு தேர்ந்தெடுக்கணும். அதுமாதிரி எதுவும் நடக்கலை. வருவாய்த்துறையினர் மூலமாகதான், இதற்கான ஆவணங்களை விவசாயிகளிடம் இருந்து வாங்கணும். இதுமாதிரி எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் தங்களுக்கு வரவில்லைனு கிராம நிர்வாக அலுவலர்கள் சொல்றாங்க. ஆளுங்கட்சியினர், வாக்காளர்களை வளைக்குறதுக்கு, இழப்பீட்டைக் குறுக்கு வழியில பயன்படுத்துறாங்களா? இல்லைனா, இழப்பீடுங்கற பேர்ல, ஒட்டுக்கு பணம் கொடுக்கப் போறாங்களானு தெரியலை. எப்படிப் பார்த்தாலும் இது விதிமுறை மீறல்” என்றார்.

இக்குற்றச்சாட்டு குறித்து அ.தி.மு.க தரப்பில் கேட்டபோது ``ஆனைக்கொம்பன் இழப்பீடுக்குக்கு எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்த ஒரு ஆவணத்தையும் நாங்க வாங்கலை. வாக்காளர்களுக்கு நாங்க பனம் கொடுக்கப் போறதா சொல்றதும் பொய்யான குற்றச்சாட்டு. அதுமாதிரியான எண்ணமே எங்களுக்கு இல்லை” என்றார்கள்.

இழப்பீடுங்கற பேர்ல வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கிறதுக்கான ஏற்பாடுகள் தீவிரமா நடந்துக்கிட்டு இருக்கு - தி.மு.க குற்றச்சாட்டு

இந்த விவகாரம் தொடர்பாக, உண்மை நிலை அறிய வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, ``உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான், ஆனைக்கொம்பன் பூச்சித்தாக்குதல் பெரிய அளவுல விஸ்வரூபம் எடுத்துச்சி. விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்காங்க. இவங்களுக்கு இழப்பீடு கொடுக்க தமிழக அரசு முடிவு செஞ்சிருக்குறது உண்மைதான். இதற்கான கணக்கெடுப்பு பணிகளை வேளாண்மைத்துறையினரும் வருவாய்த்துறையினரும் இனிமே தான் தொடங்கப்போறோம். இது தொடர்பான ஆவணங்களை, சட்டப்படி நாங்கதான் வாங்கணும். தனிநபர்கள் வாங்கியிருந்தா, அது சட்டப்படி குற்றம். இப்போதைக்கு ஆனைக்கொம்பன் தாக்குதலுக்கான கணக்கெடுப்பு பணிகள் மட்டும்தான் நடக்கும். உள்ளாட்சித் தேர்தல் முடிஞ்சப் பிறகுதான் இழப்பீடு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.