Published:Updated:

தவறான தகவல்; ஒருமணி நேரத்தில் நீக்கம்?! -ரஜினியைத் தொடர்ந்து சர்ச்சையான ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு

ஸ்டாலின்
ஸ்டாலின்

ரஜினியைப் போலவே தி.மு.க தலைவர் ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில் தவறான தகவலைப் பதிவிட்டதாகவும், அது சர்ச்சையை ஏற்படுத்த பின்னர் ஒரு மணிநேரத்தில் அவரே அந்தப் பதிவை நீக்கியதாக கூறப்படுகிறது.

உலகமெங்கும் கொரோனா பாதிப்புகள் தீவிரமாகி வருகின்றன. சீனா, இத்தாலி போன்ற நாடுகளின் நிலை இந்தியாவுக்கும் வந்துவிடக்கூடாதென முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கைக் (Janta Curfew) கடைப்பிடிக்கக் கோரி நடிகர் ரஜினி வீடியோ வெளியிட்டார். அதில் ரஜினி, ``கொரோனா பாதிப்புகளில் இந்தியா இரண்டாம் கட்டத்தில் இருக்கிறது அது மூன்றாவது கட்டத்திற்குப் போய்விடக்கூடாது. பொது இடங்களில் இருக்கும் கொரோனா வைரஸ், 12-14 மணிநேரங்கள் பரவாமல் இருந்தாலே இந்த மூன்றாவது கட்டத்தை அடையாமல் தடுத்து நிறுத்திவிடலாம். இதற்காகத்தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சுய ஊரடங்கு உத்தரவைக் கொடுத்துள்ளார். இதே போன்று இத்தாலியிலும் கொரோனா இரண்டாவது கட்டத்தில் இருக்கும்போதே அரசால் இப்படியான சுய ஊரடங்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் அந்த மக்கள் அலட்சியமாக இருந்துவிட்டனர். ஆயிரக்கணக்கில் உயிர்கள் பறிபோகியுள்ளன. இதனால் இதை நாம் நிச்சயம் கடைப்பிடிக்கவேண்டும்." என்று பேசியிருந்தார்.

ரஜினி வீடியோவை நீக்கிய ட்விட்டர்
ரஜினி வீடியோவை நீக்கிய ட்விட்டர்

சில மணிநேரங்களில் இந்த வீடியோவை ட்விட்டர் நீக்கியது. அதற்கு காரணமாக 'தங்களது விதிமுறைகளை இந்தப் பதிவு மீறுகிறது' என்று ட்விட்டர் குறிப்பிட்டது. 'கொரோனா வைரஸ், 12-14 மணிநேரங்கள் பரவாமல் இருந்தாலே அது செயலிழந்துவிடும்'என்னும் நோக்கில் ரஜினி பேசிய கருத்து தவறானது என்பதால்தான் அந்தப் பதிவு நீக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரிதாக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே, ரஜினியைப் போலவே தி.மு.க தலைவர் ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில் தவறான தகவலைப் பதிவிட, அது சர்ச்சையை ஏற்படுத்த பின்னர் ஒரு மணிநேரத்தில் அவரே அந்தப் பதிவை நீக்கியதாக கூறப்படுகிறது.

ட்விட்டரில் உலா வரும் அந்தப் பதிவில், ஸ்டாலின் நேற்று டுவீட் பதிவிட்டுள்ளதாக காட்டுகிறது. அதில், ``தமிழகத்தில், கொரோனா வைரஸ் காரணமாக 9 பேர் உயிரிழப்பு; 8,000 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு; சென்னை உள்ளிட்ட, மூன்று மாவட்டங்களைத் தனிமைபடுத்த, மத்திய அரசு அறிவுறுத்தல் ஆகியவை, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. எனவே மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளில் அரசு செயல்பட வேண்டும்" என்று பதிவிட்டதாக காட்டுகிறது. அதாவது 9 பேர் பாதிப்பு என்பதற்குப் பதிலாக 9 பேர் உயிரிழப்பு எனப் பதிவிட்டதாக காட்டுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்த சில மணிநேரங்களில் அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார் என்றும், தவறான தகவலால் அவரின் பதிவு விமர்சனத்தைச் சந்தித்தது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தவறான தகவல்; ஒருமணி நேரத்தில் நீக்கம்?! -ரஜினியைத் தொடர்ந்து சர்ச்சையான ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு

உறுதிப்படுத்த முடியாத இந்த தகவல் குறித்த ஸ்க்ரீன் ஷாட் வைரலாகி வரும் நிலையில், அதை ஷேர் செய்து எதிர்வினையாற்றும் விதமாக கருத்து பதிவிட்டுள்ள தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, ``தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் இறந்ததாக தி.மு.க தலைவர் ட்விட்டரில் வதந்தி பதிவு செய்து நீக்கியுள்ளது, பதற்றம் உண்டாக்கும் முயற்சியா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. சுகாதாரப் பேரிடர் தகவல் பரிமாற்றத்தை குறிப்பாக தலைவர்கள் மிகவும் கவனமுடன் கையாள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு