Published:Updated:

இடைத்தேர்தல் பொறுப்பாளர் லிஸ்ட்டில் அ.தி.மு.க பிரமுகர் பெயர்.. இது காங்கிரஸ் கலாட்டா..!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாங்குநேரி தொகுதிக்கு காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், அ.தி.மு.க-வைச் சேர்ந்தவரின் பெயர் இடம்பெற்றுள்ளதால் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

nanguneri candidate Ruby Manoharan
nanguneri candidate Ruby Manoharan

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான ஹெச்.வசந்தகுமார், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால், நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இந்தத் தொகுதியில், அ.தி.மு.க சார்பாக அக்கட்சியின் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளரான ரெட்டியார்பட்டி நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக உள்ளூர் நிர்வாகிகளில் ஒருவருக்கே வாய்ப்பளிக்க வேண்டும்
மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்
நாங்குநேரி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் யார்? -
அறிவிப்புக்கு முன்பாகக் கிளம்பிய எதிர்ப்பு!

காங்கிரஸ் கட்சியின் சார்பாக உள்ளூரைச் சேர்ந்தவர்களில் ஒருவருக்கே வேட்பாளருக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. ஆனாலும், உள்ளூர் நிர்வாகிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. நாகர்கோவிலைச் சேர்ந்தவரும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவருமான ரூபி மனோகரனுக்கு நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதற்காக திண்டுக்கல் ஐ.பெரியசாமி தலைமையில் தி.மு.க சார்பாகக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தி.மு.க சார்பாக நிர்வாகிகள் கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம் ஆகியவை நடத்தப்பட்டதுடன் காங்கிரஸ் வேட்பாளரை வெற்ற் பெறச் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

`வசந்தகுமார் அளித்த வாக்குறுதி!’ - நாங்குநேரி வேட்பாளராக ரூபி மனோகரன் தேர்வானது எப்படி?

காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்தல் பணிக்குழுவின் பொறுப்புக் குழுத் தலைவராக ஹெச்.வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்புக்குழுச் செயலாளராக தனுஷ்கோடி ஆதித்தன், பொறுப்பாளராக பீட்டர் அல்போன்ஸ், ஒருங்கிணைப்பாளராக மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான சிறப்புப் பார்வையாளராக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், தொகுதி மேற்பார்வையாளர்களாக 22 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில், காங்கிரஸ் கட்சியின் நாங்குநேரி தொகுதிப் பொறுப்பாளரான கே.பி.கே.செல்வராஜ் நியமிக்கப்படுவதாகக் கட்சியின் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி அறிவித்தார்.

congress in-charge list
congress in-charge list

அந்தப் பட்டியலில் 20-வது பெயராக இடம்பெற்றுள்ள கே.பி.கே.செல்வராஜ் தற்போது காங்கிரஸ் கட்சியில் இல்லை என்பதுடன் அ.தி.மு.க-வில் செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக நாங்குநேரி காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், ‘’கட்சியில் யார் இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் தேர்தல் பொறுப்பாளர்களைக் கட்சி மேலிடம் நியமித்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

கட்சியிலிருந்து மூன்றாண்டுகளுக்கு முன்பே கே.பி.கே செல்வராஜ் வெளியேறி, அ.தி.மு.க-வில் சேர்ந்துவிட்டார். அவர் அ.தி.மு.க நெல்லை புறநகர் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார் ராதாபுரம் தாலுகா வீட்டு வசதி சங்கத் தலைவராக அ.தி.மு.க சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அத்துடன், அ.தி.மு.க சார்பாக மாவட்ட கூட்டுறவு இணைய இயக்குநராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் கட்சியின் தொகுதிப் பொறுப்பாளராக அறிவித்து இருப்பது வேடிக்கையாக உள்ளது
காங்கிரஸ் தொண்டர்கள்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க-வுக்காகப் பணியாற்றி இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் அவரை நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலுக்குக் காங்கிரஸ் கட்சியின் தொகுதிப் பொறுப்பாளராக அறிவித்து இருப்பது வேடிக்கையாக உள்ளது’’ என்று காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் வேதனைப்படுகிறார்கள்.

இந்த விவகாரம் கட்சியினரிடம் பரபரப்பாகப் பேசப்பட்டதால், காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறைத் தலைவரான கோபண்ணா பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ’நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான தொகுதி மேற்பார்வையாளராக கே.பி.கே.ஜெயசிங் தனசிங் என்ற பெயருக்குப் பதிலாக கே.பி.கே.செல்வராஜ் என்று தவறுதலாக இடம்பெற்றுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

change of congress list
change of congress list

நாங்குநேரி இடைத்தேர்தல் காங்கிரஸ் பொறுப்பாளர் அறிவிப்பில் ஏற்பட்ட குளறுபடியால் அ.தி.மு.க வட்டாரம் ஆடிப்போனது. அ.தி.மு.க-வில் இணைந்துசெயல்பட்டுவரும் கே.பி.கே. செல்வராஜ் பெயர் காங்கிரஸ் பட்டியலில் இடம்பெற்றதால், அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டாரோ என அ.தி.மு.க-வினர் அதிர்ச்சி அடைந்தனர்.அதனால் கே.பி.கே.செல்வராஜ், எங்கு இருக்கிறார் என விசாரணையில் இறங்கியது. அவரின் செல்போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்ததுடன், வட இந்தியாவில் இருப்பதாக டவர் காட்டியதாக கூறப்படுகிறது. அதனால் அவர் மீண்டும் டெல்லிக்குச் சென்று காங்கிரஸில் இணைந்துவிட்டாரோ என அ.தி.மு.க-வினர் நினைத்தார்கள். ஒருவழியாக அவரிடம் தொடர்பு கொண்டபோது, மேகலாயாவில் இருப்பது தெரிய வந்ததால் அ.தி.மு.க-வினர் நிம்மதியடைந்தனர்.