Published:Updated:

ஜெயலலிதாவுக்குப் பிடிக்காத முஹம்மது ஜானை வேட்பாளராக்கிய எடப்பாடி!

ஜெயலலிதாவுடன் முஹம்மது ஜான்
ஜெயலலிதாவுடன் முஹம்மது ஜான்

அ.தி.மு.கவில் தமிழ் மகன் உசேனுக்கும், முஹம்மது ஜானுக்கும் இடையே 5 ஆண்டு பகை இருந்தது. அந்தப் பகையில் தமிழ் மகன் உசேனை முஹம்மது ஜான் வீழ்த்தியிருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா , 2011-ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த நிலையில், அவரின் அமைச்சரவையில் அடிக்கடி அமைச்சர்கள் பந்தாடப்படுவார்கள். 2011 சட்டசபைத் தேர்தலில் வென்று, ஜெயலலிதா பதவியேற்றபோது சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் மரியம் பிச்சை. அவர் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்பதற்கு முன்பே சாலை விபத்தில் மரணமடைந்தார். இதனால் ராணிப்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்ற இன்னொரு இஸ்லாமியரான முஹம்மது ஜானுக்கு அமைச்சர் சான்ஸ் அடித்தது. 2011 ஜூன் 29-ம் தேதி முகமது ஜான் மாண்புமிகு ஆனார். அப்போது கவர்னராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலாதான், முஹம்மது ஜானுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முஹம்மது ஜான்
முஹம்மது ஜான்

அவர் பதவிக்கு வந்த பிறகு, வக்ஃபு வாரிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ததில் குளறுபடிகள் நடந்தன. இதனை எதிர்த்து, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, 2012-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அமைச்சர் முஹம்மது ஜானுக்கு நோட்டீஸ் அனுப்பியது உயர் நீதிமன்றம்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு முஹம்மது ஜான் மீது பண மோசடி புகார் ஒன்றும் எழுந்தது. ஐந்து லட்சம் ரூபாய் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக முஹம்மது ஜான் மீது, ராணிப்பேட்டை அ.தி.மு.க நிர்வாகி முனுசாமி போலீஸில் புகார் அளித்தார். 2012 டிசம்பரில் அப்போது எஸ்.பி-யாக இருந்த ஈஸ்வரனிடம் முனுசாமி புகார் அளித்தார். அந்தப் புகாரில், 'ஐந்து லட்சம் ரூபாய் அளித்தால் அ.தி.மு.க வாலாஜா ஒன்றியச் செயலாளர் பதவி தருவதாக முஹம்மது ஜான் சொன்னார். அதனை நம்பி அமைச்சரிடம் 5 லட்சம் ரூபாய் அளித்தேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

`ஜெ.,வால் நீக்கப்பட்டவருக்குப் பதவி கொடுத்த எடப்பாடி!' - எப்படித் தேர்வானார் முஹம்மத் ஜான்?

இப்படி அவர் மீது அடுத்தடுத்து புகார் வந்த நிலையில், 2013 ஜூன் 17-ம் தேதி முஹம்மது ஜானை,அமைச்சரவையில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. முஹம்மது ஜானின் பதவி பறிக்கப்பட்ட செய்தி வெளியானபோது, ராணிப்பேட்டையில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் அ.தி.மு.க-வினர். சில இடங்களில் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். "மகனின் தலையீடுதான் அவருடைய பதவிக்கு வேட்டு வைத்தது'' என அப்போது காரணங்கள் சொல்லப்பட்டன. தொண்டர்களிடம் முஹம்மது ஜான் சரியாகப் பழகுவது இல்லை என்ற குற்றச்சாட்டும் இருந்தது. அமைச்சரான பிறகும் அது தொடர்ந்தது.

''முஹம்மது ஜானின் மகன் உமர், அவரின் நண்பரான செந்தில் ஆகியோரை மீறி அமைச்சரைச் சந்திக்க முடியாது. எந்தவொரு புகார் மனுவாக இருந்தாலும், முஹம்மது ஜானிடம் நேரடியாகக் கொடுக்க முடியாது. பினாமி பெயரில் ஏராளமான சொத்துக்களை முஹம்மது ஜான் குவித்துள்ளார்" என்றெல்லாம் கோட்டைக்குப் புகார் வந்ததால் அவரின் பதவியை ஜெயலலிதா பறித்தார். முஹம்மது ஜானின் பதவிப் பறிப்புக்கு இன்னொரு வலுவான காரணமும் இருந்தது. தமிழ்நாடு வக்ஃபு வாரிய சேர்மனாக நியமிக்கப்பட்ட தமிழ் மகன் உசேனை நீக்கிவிட்டு, தனக்கு நெருக்கமான நபரை நியமிக்க முடிவு செய்தார். அதுவும் ஜெயலலிதாவின் கோபத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

குடும்பத்தினருடன் முஹம்மது ஜான் ஜெயலலிதாவை சந்தித்த போது...
குடும்பத்தினருடன் முஹம்மது ஜான் ஜெயலலிதாவை சந்தித்த போது...
விகடன்

அதன்பிறகு முஹம்மது ஜானுக்கு இறங்கு முகம்தான். கடந்த சட்டசபைத் தேர்தலில் அவருக்கு மீண்டும் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு அளிக்கவில்லை. ஜெயலலிதா புறக்கணித்த முஹம்மது ஜானுக்குத்தான் இப்போது முதல்வரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ராஜ்ய சபா சீட் அளித்திருக்கிறார். அன்றைக்கு தமிழ் மகன் உசேனின் பதவி பறிப்புக்குக் குழி பறிக்க நினைத்தார் முஹம்மது ஜான். இன்று ராஜ்ய சபா ரேஸில் இருந்த தமிழ் மகன் உசேனை பின்னுக்குத் தள்ளி, எம்.பியாகப் போகிறார்.

இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த ஐந்து ஆண்டு பகையில் தமிழ் மகன் உசேனை, ராஜ்யசபா வேட்பாளரானதன் மூலம் முஹம்மது ஜான் வீழ்த்தியுள்ளார்.

ஒரு ஜூன் மாதத்தில்தான் முஹம்மது ஜான் மந்திரி ஆனார். இன்னொரு ஜூன் மாதத்தில் அவருடைய பதவி பறிபோனது. ஜூன் கைவிட்டாலும் தற்போது ஜூலையில் யோகம் அடித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு