Published:Updated:

`குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதா அம்பேத்கர் படம்?!' -கறம்பக்குடி காவல் நிலையத்தை சுற்றும் சர்ச்சை

கறம்பக்குடி காவல் நிலையம்
கறம்பக்குடி காவல் நிலையம்

சுவரில் மாட்டப்பட்டிருந்த அம்பேத்கர் படம் அங்கு இல்லை. அருகே இருந்த குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்பட்டிருந்தது.

திராவிடர் விடுதலைக்கழக மாவட்ட அமைப்புச் செயலாளர் பூபதி கார்த்திகேயன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த மனுவில், ``கடந்த சில நாள்களாகவே கறம்பக்குடி காவல் நிலையத்தில் உள்ள சுவரில் அண்ணல் அம்பேத்கரின் படம் மாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான், காவல் நிலையத்துக்குச் சொந்த வேலையாகச் சென்றேன். அப்போது சுவரில் மாட்டப்பட்டிருந்த அம்பேத்கர் படம் அங்கு இல்லை. அருகே இருந்த குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, இன்ஸ்பெக்டரிடம் கேட்டபோது, ``அம்பேத்கர் போட்டவையெல்லாம், காவல் நிலையத்துக்குள் வைக்கக் கூடாது என்று எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறது.

அதனால், அம்பேத்கர் புகைப்படத்தை எடுத்துவிட்டோம்' என்றார். பதிலுக்கு நான் அந்த உத்தரவு நகலைக் காட்டும்படி கூறினேன். இதையடுத்து, அதையெல்லாம் உங்களிடம் காட்ட முடியாது என்று கூறி அங்கிருந்து விரட்டியடித்தனர். அம்பேத்கர் படத்தை அவமதித்த இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

கறம்பக்குடி காவல் நிலையம்
கறம்பக்குடி காவல் நிலையம்

இதுபற்றி கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனிடம் கேட்டபோது, ``அம்பேத்கரின் படம் என்னுடைய இருக்கைக்கு மேலே உள்ள சுவரில்தான் மாட்டப்பட்டிருக்கிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் தனிப்பட்ட பிரச்னைகளை வைத்துக்கொண்டு, இங்கு தேவையற்ற வீண் வதந்திகளைப் பரப்புகின்றனர். காவல் நிலையத்தில் போலீஸாரின் வேலைகளைச் செய்ய விடாமல், தேவையற்ற கேள்விகள் கேட்டதால், அவர்களைக் காவல் நிலையத்திலிருந்து வெளியே அனுப்பிவிட்டோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு