Published:Updated:

போலீஸாரைத் தொடர்ந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்! - புதுக்கோட்டையை அதிரவைத்த `மான்வேட்டை'

மான் வேட்டையாடிய சம்பவம் தொடர்பாக, போலீஸ்காரர் ராமச்சந்திரனைத் தொடர்ந்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


துணைவட்டார வளர்ச்சி அலுவலர்
துணைவட்டார வளர்ச்சி அலுவலர்

புதுக்கோட்டை மறைமலைநகர் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் ராபின்சன் (46). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகம் அருகே காரில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது கார் மோத இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு ஆட்சியர் அலுவலகம் அருகே பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் இதுபற்றி விசாரிக்கும்போது, ராபின்சன் காரின் பின்பகுதியில் ரத்தக்கறை இருப்பதைப் பார்த்தனர். இதுபற்றி ராபின்சனிடம் கேட்கவே, முன்னுக்குப்பின் முரணாகப் பதில் சொன்னதால், சந்தேகமடைந்த போலீஸார், கார் டிக்கியைத் திறந்து பார்க்கும்போது, துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன.

பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் தோட்டாக்கள்
பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் தோட்டாக்கள்

இதையடுத்து, திருக்கோகர்ணம் போலீஸார், ராபின்சனைக் கைதுசெய்து, காரை கைப்பற்றி, அதிலிருந்த 3 துப்பாக்கிகள் மற்றும் 20 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, ராபின்சனிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் போலீஸாருக்கும், அரசு அலுவலர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ராபின்சன் கொடுத்த தகவலின் பேரில், பூங்குடியைச் சேர்ந்த ராமன், கரூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் ராமச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், திருவப்பூரைச் சேர்ந்த ராஜேஷ், சுரேஷ், வெங்கடாஜலபதி, சாமுவேல் பிரின்ஸ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவுசெய்து வெங்கடாஜலபதி, சாமுவேல், பிரின்ஸ் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள காவலர் ராமச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், சுரேஷ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். மூன்று பேரும் முன் ஜாமீனுக்கு முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, போலீஸ்காரர் ராமச்சந்திரனை, மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில்தான், தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய துணை வட்டார வளர்ச்சி அலுவலரை, மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்ட திட்ட அலுவலருக்குச் சென்ற தகவலின் பேரில், மாவட்ட ஆட்சியரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள காவலர் ராமச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், சுரேஷ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

மூன்று பேரும் முன் ஜாமீனுக்கு முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, " ராபின்சனும் சிலரும் சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளில் மான் வேட்டை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். சமீபத்தில் சிவகங்கை வனப்பகுதியில் மானை வேட்டையாடி, புதுக்கோட்டையில் உள்ள நண்பர்கள், வி.ஐ.பி-க்கள், அரசு அதிகாரிகளுக்கும் கிலோ கணக்கில் மான் கறியைக் கொடுத்து பங்கு போட்டுக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக, 5 பேரைக் கைது செய்துள்ளோம். மேலும், மூவரைத் தேடி வருகிறோம் தொடர்ந்து, இதுபற்றி விசாரித்து வருகிறோம்" என்றனர்.