Published:Updated:

`மூடப்பட்ட ஆலை சார்பில் நிவாரணம்; தன்னார்வலர்கள் மிரட்டல்!’- ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகள் புகார்

உண்ணாவிரதம்
உண்ணாவிரதம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், சிலர் மீது போலீஸார் போடப்பட்ட வழக்குகளைத் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வீடுகளில் கிராம மக்கள் ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100-வது நாள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் இன்றளவும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. ``மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை இனி எந்த ரூபத்திலும் தமிழகத்தில் செயல்படாது, அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்” என சட்டமன்றத்தில் ஆவேசமாக கர்ஜித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் ஆலை நிர்வாகம் நேரடியாகவும், பிற தனியார் தொண்டு நிறுவனங்களின் மூலமும் நிவாரணப் பொருள்களை வழங்கி வருவதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் குற்றம் சாட்டினார்கள்.

உண்ணாவிரதம்
உண்ணாவிரதம்

இதையடுத்து, அரசின் கொரோனா நிவாரணப் பணிகளில் தன்னார்வலர்களாக ஈடுபடுத்திக்கொண்ட அதிகாரிகள், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் அடையாள அட்டையை மட்டும் மிரட்டி வாங்கியதாகவும் குற்றம் சாட்டினார்கள் போராளிகள். இதையடுத்து ஐ.டி கார்டுகளையும் திரும்ப ஒப்படைத்தனர். இந்நிலையில், ஆலை தரப்பில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்களை வழங்கிட எதிர்ப்பு தெரிவித்த சிலர் மீது, போலீஸார் பதிவு செய்த வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பண்டாரபட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள், பதாகை ஏந்தி ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இதுகுறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம், ``தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் வடு இன்னும் மறையவில்லை. அந்தப் படுகொலை சம்பவத்துக்குக் காரணமான அதே ஆலை நிர்வாகத்திடமிருந்து கொரோனா தடுப்பு நிவாரணமாக ரூ.5 கோடியை அரசு பெற்றிருப்பது, தூத்துக்குடி மக்கள் மீது கொடிய கொரோனா வைரஸை பாய்ச்சியதற்குச் சமமாகும்.

தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஐ.டி கார்டுகள்
தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஐ.டி கார்டுகள்

இதை நிவாரணமாகப் பார்க்க முடியாது, ஊழல் பணமாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் யாருக்குமே மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட அனுமதி அளிக்கப்படாத நிலையில், அரசால் சட்டமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு மூடப்பட்ட ஆலைக்கு மட்டும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கலெக்டர் அனுமதி அளித்துள்ளது நியாயமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆலைக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராட்டம் நடைபெற்ற கிராமங்களில் ஸ்டெர்லைட் சார்பில் இரண்டாம் கட்டமாக அரிசி, மளிகைப் பொருள்களை நேரடியாகவும், சில தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமும், சில ஒப்பந்தக்காரர்கள் மூலமும் விநியோகித்து வருகின்றனர். இதுகுறித்து கலெக்டர், எஸ்.பி-யிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஸ்டெர்லைட் நிவாரணப் பணிகளுக்கு மக்களுடன் சேர்ந்து நாங்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், அரசின் நிவாரணப் பணிகளில் 15 நாள்கள் ஈடுபடுத்திக்கொண்ட எங்களது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் 10 பேருக்கு மட்டும் தாலுகா ஆபீஸிலிருந்து போன் செய்து காரணம் ஏதும் சொல்லாமல் `தன்னார்வலர்களுக்கான உங்க ஐ.டி கார்டை திரும்ப ஒப்படையுங்கள்’ எனச் சொல்லி அதிகாரிகள் பலமுறை போன் செய்தார்கள்.

வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம்
வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம்

ஊரடங்கு மூன்றாம்கட்டமாக வரும் 17-ம் தேதி நீட்டிக்கப்பட்டு நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் எங்களிடம் மட்டும் ஐ.டி கார்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. `உங்களால்தான் ஆலை மூடப்பட்டு எங்களோட வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது’ என ஆலைத்தரப்பிலிருந்து பகிரங்கமாக மிரட்டல்கள் வருகின்றன. `நீங்கதான் மக்களுக்கு நல்லது செஞ்சி கிழிக்கப்போறீங்களா?’ன்னு அதிகாரிகளும் பேசுகிறார்கள்.

மூடப்பட்ட ஒரு ஆலைத்தரப்பில் இருந்து மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கி வரும் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்புவதற்காகக் குமரெட்டியாபுரத்தில் ஊர்மக்களிடம் வீடுவீடாகச் சென்று கையெழுத்து வாங்கிய வெள்ளத்தாய் என்ற பெண் மீது ஊரடங்கை மீறியதாகப் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. நிவாரணப் பொருள்கள் வழங்குவதுக்கு தொடர்ந்து நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், தற்போது அந்தந்தக் கிராமங்களில் உள்ள ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் மூலம் தனிநபரே வழங்குவதைப்போல வழங்கப்பட்டு வருகிறது.

உண்ணாவிரதம்
உண்ணாவிரதம்

சில நாள்களுக்கு முன்பு பண்டாரம்பட்டியில் ஆளும்கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டில் வைத்து நிவாரணத் தொகுப்புப் பைகள் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாரியம்மாள் என்பவரை அந்த நிர்வாகி தாக்கியுள்ளார். ஆனால், அந்த நிர்வாகி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மாரியம்மாள் உள்ளிட்ட 9 பேர் மீதுதான் பொய்வழக்கு போடப்பட்டுள்ளது.

நிவாரணப் பொருள்கள் வழங்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போடப்பட்ட பொய்வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். மூடப்பட்ட ஆலைக்கு நிவாரணப் பொருள் வழங்கிட அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரத்தை மேற்கொண்டோம்” என்றார்.

இதுகுறித்து தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமாரிடம் பேசினோம். ``தன்னார்வலர்கள் தனித்தனி குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டன.

உண்ணாவிரதம்
உண்ணாவிரதம்

இதில், பல குழுவினருக்கு பணிகள் முடிவடைந்ததன் அடிப்படையில்தான் ஐ.டி கார்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. நாங்கள் யாரையும் மிரட்டவில்லை” என்றார்.

மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரியிடம் கேட்டோம். ``மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்கு குறித்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் இருந்து நேரடியாக என்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. இதுகுறித்து விசாரிக்கிறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு