Published:Updated:

`பராமரிக்க முடியல; 600 பேரும் வீட்டுக்குப் போங்க!' - அதிர்ச்சி கொடுத்த அரியலூர் அதிகாரிகள்

அரியலூர்
அரியலூர்

முகாம்களிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு கிராம நிர்வாக அலுவலர்கள் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பதற்கான அடையாள ஸ்டிக்கரை ஒட்டத்தொடங்கியுள்ளனர்.

கொரோனா முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 600-க்கும் மேற்பட்டவர்களை அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பராமரிப்பு செலவு அதிகமாவதால் அவர்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை
அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை

கொரோனா வைரஸ், ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டம்காண வைத்திருக்கிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, உலக நாடுகள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் அதைத் தடுக்கும் நடவடிக்கையாகப் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் முதல் கட்டமாக 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போதும் இங்கு வைரஸ் பரவலின் வீரியம் குறையாததால் இரண்டாம் கட்டமாக மே 3-ம் தேதி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டைவிட்டு வெளியே வரும் மக்கள், கண்டிப்பாகத் தனிநபர் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து அரியலூர் மாவட்டத்துக்குத் திரும்பிய 2,022 பேரும் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு 28 நாள்களை முடித்துள்ளனர். இதில் அவர்கள் யாருக்கும் காய்ச்சல் அறிகுறிகள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் கேரளா, பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த 800 நபர்களைக் காவல்துறையினர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம், தனியார் கல்லூரி உள்ளிட்ட எட்டு இடங்களில் தங்க வைத்திருந்தனர்.

தனிமைபடுத்தப்பட்டவர்கள்
தனிமைபடுத்தப்பட்டவர்கள்

தினந்தோறும் இவர்களை தெர்மா மீட்டர் மூலம் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்று மருத்துவக் குழுவினர் கண்காணித்து வந்தனர். இதில் 14 நாள்களை நிறைவு செய்தவர்கள் படிப்படியாக வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இதையடுத்து கொரோனா முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த சுமார் 600 பேர் அவர்களது காலம் முடியும் முன்னரே இரவோடு இரவாக அவர்களது சொந்த ஊருக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர்.

முகாம்களிலிருந்து செல்பவர்கள் அனைவரும் மறு அறிவிப்பு வரும்வரை அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். இவர்களின் பராமரிப்பு செலவுகள் அதிகமாகின்றன. எனவே, நிர்வாகச் செலவுகளை குறைப்பதற்காக முகாம்களில் உள்ளவர்களையும் இனி வருபவர்களையும் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக அலுவலர்கள் வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. முகாம்களிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு கிராம நிர்வாக அலுவலர்கள் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பதற்கான அடையாள ஸ்டிக்கரை ஒட்டத்தொடங்கியுள்ளனர்.

அரியலூர் ஆட்சியர் அலுவலகம்
அரியலூர் ஆட்சியர் அலுவலகம்

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ``தனிமைப்படுத்தப்பட்டவர்களில் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என்ற காரணத்தால்தான் அவர்களை வீட்டுக்கு அனுப்பினோம். அவர்கள் வீட்டில் உள்ளவர்களோடு பழகக்கூடாது என்றும் 15 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி சொல்லி அனுப்பியிருக்கிறோம். கொரானோவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறோம். மற்றபடிப் பராமரிப்பு செலவு காரணங்களுக்காக அனுப்பவில்லை. அது தவறான தகவல்" என்று முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு