Published:Updated:

`மருத்துவக் கல்லூரி வரட்டும்.. ஆனால்?' - 26 ஏக்கர் சர்ச்சையில் அரியலூர்

அரியலூர் அரசு கலைக்கல்லூரி வளாகம்
அரியலூர் அரசு கலைக்கல்லூரி வளாகம்

நகரில் நெருக்கடியான, ஏற்கெனவே இயங்கி வரும் ஓர் அரசுக்கல்லூரி வளாகத்தில் புதிய மருத்துவக் கல்லூரியை உருவாக்காமல் அரியலூர், ஜெயங்கொண்டம் இடையே ஓர் இடத்தை தேர்வு செய்யலாம்.

அரியலூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், 26 ஏக்கர் பரப்பளவில், மருத்துவக்கல்லூரி மற்றும் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, அலுவலகங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தங்களது மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி உருவாவதை எண்ணி முதலில் மகிழ்ச்சி அடைந்தார்கள் இப்பகுதி மக்கள். ஆனால் இதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம்தான் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. `அரசு கலைக்கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் மருத்துவக் கல்லூரி உருவானால், இந்த இரண்டு கல்லூரிகளுமே பல்வேறு பின்னடைவுகளைச் சந்திக்கும்' என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

ரமேஷ்  கருப்பையா
ரமேஷ் கருப்பையா

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய சமூக ஆர்வலர் ரமேஷ் கருப்பையா ``அரியலூரில் நீண்டகாலத்துக்குப் பின்னர் ஒரு சுகாதாரத் திட்டத்தைக் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. அரியலூர் மக்கள், தங்களது மருத்துவ தேவைகளுக்காக, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர் என அலைந்து திரிந்தார்கள். இனி மக்கள் அலைவது தவிர்க்கப்படும்.

ஆனால், இதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம்தான் மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அரியலூர் நகரத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் இதை உருவாக்குவது சரியல்ல. மருத்துவக்கல்லூரி மற்றும் இதனுடைய மருத்துவமனை, நிர்வாக அலுவலகங்கள், மருத்துவர் குடியிருப்புகள், மாணவர்கள் குடியிருப்புகள் ஆகியவைகளுக்கு இந்த 26 ஏக்கர் பரப்பளவு போதுமானதாக இருக்காது.

இதனால் கடுமையான இடநெருக்கடி ஏற்படும். பெரம்பலூர் மருத்துவக்கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டபோது அரியலூர், பெரம்பலூர் இடைப்பட்ட குன்னம் அருகில் தேர்வு செய்யப்பட்டது. அந்த அகண்ட பகுதி, எதிர்கால விரிவாக்கத்துக்கும் உதவலாம்.

`எல்லோரையும் போல பயப்பட்டோம், ஆனால்?' - மதுரை கொரோனா வார்டை அசத்திய 3 சகோதரிகள்

அதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக்கல்லூரிகள் நகரின் புறநகர் பகுதியில் தேர்வு செய்யப்பட்டன. நீண்ட தொலைநோக்கு பார்வையுடன் இடங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். நகரில் நெருக்கடியான, ஏற்கெனவே இயங்கி வரும் ஓர் அரசுக்கல்லூரி வளாகத்தில் புதிய மருத்துவக் கல்லூரியை உருவாக்காமல் அரியலூர், ஜெயங்கொண்டம் இடையே ஓர் இடத்தை தேர்வு செய்யலாம்.

மக்கள் கருத்துகளை அறிந்து பிற இடங்களையும் தேர்வு செய்யலாம். ஆண்டிமடம், கங்கை கொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டம் பகுதி மக்கள் கிழக்கு எல்லையிலிருந்து, மேற்கு எல்லையில் உள்ள நகருக்குள் வரத்தேவையில்லை. மாவட்டத்தின் அனைத்துப் பகுதி மக்களுக்குமான ஒரு பொது இடமாக இருந்தால் சிறப்பாக இருக்கும்” என்றார்.

இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதி தங்க சண்முக சுந்தரம் நம்மிடம் பேசும்போது, ``இனி வரும் காலங்களில் ஆங்கில அலோபதி மருத்துவம் மட்டும் அல்லாமல், ஒருங்கிணைந்த சித்த, ஆயுர்வேத, அக்குபஞ்சர், யோகா, ஹோமியோ மருத்துவ முறைகளும் ஒரே இடத்தில் வழங்கப்பட வேண்டிய காலத்தேவை ஏற்படும். அப்போது கூடுதலாக, அதிகளவு பரப்பளவு தேவைப்படும். இந்த 26 ஏக்கர் போதுமானதாக இருக்காது.

ஏற்கெனவே இங்கு அரசுக் கலைக்கல்லூரி இயங்குவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கிறது. இதனுடன் மருத்துவக்கல்லூரியும் சேர்ந்து செயல்பட்டால், போக்குவரத்து நெருக்கடி இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். காலப்போக்கில் அரசுக் கலைக்கல்லூரி முடக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

கொரோனா: அடுத்தடுத்த நாள்களில் இருவர் மரணம்! - அதிர்ச்சி தரும் கரூர் நிலவரம்

எனவே, இங்கு மருத்துவக்கல்லுரி அமைப்பதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரியலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, நகரத்திற்கு வெளியே ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் உள்ளது. அங்கு தேர்வு செய்யலாம்” என்றார்.

இதுகுறித்து, அரசுத் தரப்பில் பேசியபோது, ``மக்கள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாகத்தான் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. நகரத்திற்குள் இருந்தால்தான், அவசர மருத்துவத் தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியும். இந்த இடம் போதுமானது” என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு