Published:Updated:

`அரசியல் கருத்து!' - அத்துமீறினாரா ராணுவத் தளபதி பிபின் ராவத்?

குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்த கருத்து கடும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார் ராணுவத் தளபதி பிபின் ராவத். இதற்குப் பல தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

"போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். மக்களைத் தவறாக வழிநடத்துபவர்கள் தலைவர்களே இல்லை” என அரசியல் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிபின் ராவத் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னரும் இதுபோன்ற அரசியல் கருத்துகள் தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிபின் ராவத்
பிபின் ராவத்
`இன்று அரசியல் பேச அனுமதித்தால்.... நாளை?!’ - சர்ச்சையில் சிக்கிய பிபின் ராவத்

ராவத்தின் சர்ச்சைக் கருத்துகள்:

2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அஸ்ஸாமில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிபின் ராவத், "மாநிலக் கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னனியின் வளர்ச்சி பா.ஜ.க-வைவிடவும் வேகமாக உள்ளது. வட கிழக்கில் வெளிநாட்டிலிருந்து ஊடுருபவர்களால் அச்சுறுத்தல் உள்ளது. வட கிழக்கின் வளர்ச்சியில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது” என்றார்.

இதற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், "ராவத்தின் கருத்தில் எந்தவித அரசியல் மற்றும் மத உள்நோக்கம் கிடையாது. வடகிழக்கின் வளர்ச்சி பற்றியே அவர் பேசியிருக்கிறார்” என ராணுவத்தின் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

சமீபத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் பற்றிக் கருத்து தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ராவத். இதற்கு எதிர்க்கட்சிகளிடம் மட்டுமல்லாது பல முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதிகளிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்போதும் ராவத்தின் கருத்து குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களைப் பற்றியது கிடையாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ராவத்தின் கருத்தை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என முன்னாள் ராணுவத் தளபதியும் தற்போதைய மத்திய அமைச்சருமான வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்

ராவத்தின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், "ராணுவத்தை தலைமை தாங்கி நிர்வகிக்க வேண்டியதுதான் உங்களுடைய பொறுப்பு. அரசியலை அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்வார்கள். உங்களை எப்படிப் போர் செய்ய வேண்டும் எனச் சொல்வது எப்படி எங்களுடைய வேலை கிடையாதோ, அதுபோலவேதான் அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் எனச் சொல்வது ராணுவத்தின் வேலை கிடையாது" என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர், "மத்திய பா.ஜ.க அரசு ஜனநாயக வழியில் போராடுகிற மாணவர்களை எதிர்க்க ராணுவத் தளபதிகளையும் காவல் பிரிவு அதிகாரிகளையும் பயன்படுத்துவது வெட்கக்கேடானது!" என்றும் சாடியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னாள் கடற்படைத் தளபதி ராம்தாஸ் பிபின் ராவத்தின் கருத்து மிகவும் தவறானது எனத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் "பாதுகாப்புப் படைகளில் இருப்பவர்கள் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டுமே தவிர எந்த அரசியல் சக்திகளுக்கும் அல்ல” என்றார்.

1954, ராணுவ விதிகள் 21-ன்படி பதவியில் இருக்கக்கூடிய ஒருவர் பத்திரிகை மூலமாகவோ உரையின் மூலமாகவோ அரசியல் கருத்து தெரிவிக்க அரசின் முன் அனுமதி வேண்டும். ஆனால், இவை தெளிவாக வரையறுக்கப்படாததால் அரசியல் கருத்தை சரியாகத் தீர்மானிக்க இயலவில்லை என்று சொல்லப்படுகிறது.

மோடி
மோடி

முப்படைகளுக்கும் ஒரே தளபதி:

பிரதமர் மோடி தன்னுடைய சுதந்திர தின உரையில் முப்படைகளுக்கும் ஒரே தளபதி உருவாக்கப்படும் என அறிவித்தார். கார்கில் போர் சமயத்திலிருந்தே நிலுவையில் இருந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கிறது என்பதை இதன்மூலம் நாட்டுக்கு அறிவித்தார் மோடி.

சமீபத்தில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தலைமையிலான குழு இதற்கான பணிகளை வடிவமைக்க உருவாக்கப்பட்டுள்ளது. ராணுவத் தளபதி பிபின் ராவத் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள பதவிக்கு பிபின் ராவத் நியமிக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

அமித் ஷா மீது வருத்தத்தில் இருக்கிறாரா மோடி?

இதுபற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோபன்னா பேசுகையில், "இந்திய வரலாற்றில் ராணுவத் தலைமை அரசியல் சர்ச்சைகளில் சிக்கியது இல்லை. மோடி ஆட்சியில் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. இது அதிர்ச்சிகரமாக உள்ளது. உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு அதன் தனித்துவத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் உள்ளது. அதை விடுத்து பிபின் ராவத் பாகிஸ்தான் ராணுவத் தளபதிபோல பேசுவது ஆபத்தானது. போராட்டங்கள் நடத்துவது ஜனநாயக உரிமை. பிபின் ராவத் அந்தப் பதவிக்கான மதிப்பை காக்க வேண்டும். அரசியலில் முகஸ்துதி செய்து பிழைப்பு நடத்துபவர்கள் இருக்கிறார்கள். அதேபோல அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களும் பதவி ஆசைக்காக அரசுக்கு உகந்த கருத்துகளை தெரிவிக்கிறார்கள். ப.சிதம்பரம் அவர்களுக்கு ஜாமீன் மறுத்த நீதிபதிக்கு ஓய்வு பெற்ற உடனே பதவி வழங்கப்பட்டது.

2ஜி வழக்கே நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட சூழலில், அதில் தலைமைக் கணக்கு அறிக்கை கொடுத்த வினோத் ராய்க்கு பா.ஜ.க-வால் புதிய பதவி வழங்கப்பட்டது. முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். அதே பாதையை பிபின் ராவத்தும் தொடர்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. அரசுப் பொறுப்புகளில் இருக்கின்ற எல்லோருமே ஓய்வு பெற்று சில ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது விதியாக வகுக்க வேண்டும். பிபின் ராவத் யார் என்பது தற்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. முப்படைகளுக்கும் ஒரே தளபதி உருவாக்கப்படுகிறபோது இவரைப் போன்றவர்கள் நியமிக்கப்பட்டால், அந்தப் பதவியின் மதிப்பையே குறைப்பதாக அமையும். அது தவிர்க்கப்பட வேண்டும்” என்றார்.

கோபன்னா -ஶ்ரீனிவாசன்
கோபன்னா -ஶ்ரீனிவாசன்

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஶ்ரீனிவாசன் பேசுகையில், "சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ராணுவத்துக்கும் உள்ளது. இதனால் அவர்கள் தெரிவிக்கிற கருத்தைப் பெரிதாக அரசியல்படுத்த வேண்டியதில்லை. காங்கிரஸ் கட்சி இதை அரசியல் பிரச்னையாக மாற்ற நினைக்கிறது. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பில் ராணுவம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் ஜனநாயகம் மிகவும் வலிமையானது. இங்கு ராணுவ ஆட்சி போன்று சர்வாதிகார நடவடிக்கைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளே கிடையாது. அதனால் இதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு