Published:Updated:

ஓ.பி.எஸ் தம்பிக்குக் கிடைக்கும் ராணுவ விமானம், ராணுவ வீரருக்காகக் கிடைக்காதா?!

ராணுவ விமானம் சேவை கிடைக்காத நவ்ஜோத் சிங்
ராணுவ விமானம் சேவை கிடைக்காத நவ்ஜோத் சிங்

நவ்ஜோத் சிங்கின் உடலை விமானம் மூலம் பெங்களூருவிலிருந்து டெல்லிக்குக் கொண்டுவர ராணுவ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், மத்திய உள்துறை அமைச்சகம்தான் அதற்கான அனுமதியைப் பிறப்பிக்க வேண்டும்.

அம்ரிஸ்தர் நகரைச் சேர்ந்தவர் நவ்ஜோத் சிங் பாய். பெங்களூருவில் ராணுவ வீரராகப் பணியாற்றிவந்தார். கடந்த 2002- ம் ஆண்டு, ராணுவத்தின் சிறப்புப் பிரிவில் சேர்ந்த இவர், ஜம்மு-காஷ்மீரில் வீரதீரச் செயல் புரிந்ததற்காக, 'சௌர்யா சக்ரா' விருதைப் பெற்றவர். இந்திய ராணுவத்தில் வழங்கப்படும் மூன்றாவது பெரிய விருது இது. நவ்ஜோத் சிங்குக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உண்டு. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு, அவரை புற்றுநோய் தாக்கியது. பெற்றோர் அம்ரிஸ்தரில் வசித்து வந்ததால், பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனையிலேயே நவ்ஜோத்சிங் சிகிச்சைபெற்றுவந்தார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, நவ்ஜோத் சிங்கும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். மகனின் இறப்புகுறித்து அம்ரிஸ்தரில் உள்ள நவ்ஜோத் சிங்கின் பெற்றோருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், ஊரடங்கு காரணமாக, நவ்ஜோத் சிங்கின் பெற்றோரால் உடனடியாக பெங்களூரு புறப்பட முடியவில்லை. இதனால், இறந்துபோன மகனின் உடலைப் பார்க்க முடியாமல் பெற்றோர் கதறினர்; அழுது புரண்டனர்.

lock down days
lock down days
Vikatan team

நவ்ஜோத் சிங்கின் உடலை விமானம் மூலம் பெங்களூருவிலிருந்து டெல்லிக்குக் கொண்டுவர ராணுவ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், மத்திய உள்துறை அமைச்சகம்தான் அதற்கான ஆணையைப் பிறப்பிக்க வேண்டும். ஆனால், உள்துறை அமைச்சகம் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்ததே தவிர, எழுத்துபூர்வமாக எந்தக் கடிதத்தையும் அளிக்கவில்லை. அனுமதி கிடைக்காத நிலையில், நவ்ஜோத் சிங்கின் பெற்றோர், கார் மூலம் பெங்களூருக்குச் செல்ல முடிவு செய்தனர்.

`WHO’-வுடன் முட்டிமோதும் அமெரிக்கா... இந்திய மருத்துவ கவுன்சிலைப் பின்பற்றும் இந்தியா!

இதற்காக, அம்ரிஸ்தரிலிருந்து புறப்பட்ட அவர்கள், சுமார் 2,000 கிலோ மீட்டர் தொலைவு காரில் பயணிக்கவேண்டியிருந்தது. தங்கள் மகனுக்கு இறுதிச்சடங்கு செய்யவும் கடைசியாக ஒருமுறை மகனின் முகத்தைப் பார்க்கவும் அவர்கள் இத்தனை தூரம் பயணிக்கவேண்டிய சூழலை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ வீரர் நவ்ஜோத் சிங்
ராணுவ வீரர் நவ்ஜோத் சிங்

இதுகுறித்து ராணுவத் தரப்பில் கூறுகையில், ''ராணுவ விமானத்தில் நவ்ஜோத் சிங்கின் பெற்றோரை பெங்களூருக்கு அழைத்துச்செல்ல பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது ஊரடங்குக் காலம் என்பதால், இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகம்தான் முடிவு எடுக்க வேண்டும். இதனால், ராணுவ அதிகாரிகளின் கோரிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. உள்துறை அமைச்சகம், இந்த விஷயத்தில் முடிவெடுக்கத் தாமதித்ததால், நவ்ஜோத் சிங்கின் பெற்றோர் காரிலேயே சாலை வழியாக பெங்களூருக்குப் புறப்பட்டனர்'' என்கின்றனர்.

அம்ரிஸ்தரில் இருந்து புறப்பட்ட நவ்ஜோத்தின் பெற்றோருடன் சகோதரர் நவ்தெஸ் சிங்கும் வந்தார். காரில் பயணித்தபடியே நவ்தெஸ் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டில், ''எங்களுக்கு வழிநெடுகிலும் போலீஸாரும் மற்றவர்களும் ஆதரவுக் கரம் நீட்டிக்கொண்டிருக்கின்றனர்" என்று நேற்று பதிவிட்டார்.

சட்டம் ஒன்றும் கற்களில் எழுதி வைக்கப்படவில்லை. இக்கட்டான சூழலில் விதிகள் தளர்த்தப்பட வேண்டும்.
வி.பி. மாலிக், முன்னாள் ராணுவ தளபதி

அரசின் இத்தகைய அலட்சியமான செயல்பாட்டுக்கு பல முன்னாள் ராணுவ அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவ முன்னாள் தளபதி வி.பி. மாலிக் தன் ட்விட்டரில், ''நவ்தெஸ் சிங், உங்கள் சகோதரரின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதுகாப்பாக நீங்கள் சென்றடைவீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு இந்திய அரசு உதவாதது துரதிருஷ்டவசமானது. விதிமுறைகளும் சட்டமும் கற்களில் எழுதிவைக்கப்படவில்லை. இக்கட்டான சூழல்களில் சட்டம் தளர்த்தப்பட்டிருக்க வேண்டும்'' என்று வேதனை தெரிவித்துள்ளார்.

நாட்டுப் பற்றையே மூச்சாகக் கொண்டிருப்பதாகக் கூறி, அதிகாரத்தில் அமர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக் காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது, மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'நாட்டுக்காகப் போராடிய ராணுவ வீரரின் உடலைப் பார்க்கக்கூட அவரின் பெற்றோருக்கு ராணுவ விமானம் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பிக்கு சிகிச்சைக்காக ராணுவ விமானத்தைப் பயன்படுத்தியது எப்படி? அதற்கு மட்டும் அனுமதி கிடைப்பதில் சிக்கல் இருக்கவில்லையே' என்று சமூக வலைதளங்களில் பலர் கொந்தளிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு