Published:Updated:

`நீங்க போய் சமாதியில் உட்காருங்க.. வழிபிறக்கும்'- ஆடிட்டர் குருமூர்த்தி மீண்டும் சர்ச்சை!

குருமூர்த்தி
குருமூர்த்தி

`எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆட்சி பாவமான, தவறான ஆட்சி என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.'

அ.தி.மு.க ஆட்சி குறித்தும், அக்கட்சித் தலைவர்கள் குறித்தும் அவ்வப்போது ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையாகி வருகின்றன. ஏற்கெனவே, அ.தி.மு.க தலைவர்களை `திறனற்றவர்கள்' என அவர் கூற அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் அக்கட்சியினர். இதற்கிடையே, நேற்று இரவு திருச்சியில் துக்ளக் இதழின் பொன்விழா சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதில், ``மகாராஷ்டிராவில் தற்போது நடக்கும் நிகழ்வுகள் வெளிப்படையாகவே இல்லை.

குருமூர்த்தி
குருமூர்த்தி

அங்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டதற்கு சரத் பவார்தான் காரணம். அதற்காக பா.ஜ.க செய்தது சரி எனக் கூறவில்லை. மகாராஷ்டிராவில், பா.ஜ.க தர்மசங்கடத்தில் இருக்கிறது. இதை புரிந்துகொள்ள வேண்டும். சிவசேனாவை பா.ஜ.க-வால் மட்டுமே அடக்கி வழிநடத்த முடியும். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்பதாகக் கருதி பா.ஜ.க இப்படியொரு செயலைச் செய்திருந்தால் வரவேற்போம். அதற்குமாறாக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க முயன்றால் ஏற்க மாட்டோம்" என்றவர், ``சசிகலா முதல்வர் ஆவதற்கான பணிகள் நடைபெற்று வந்தபொழுது ஓ.பன்னீர் செல்வம் என்னிடம் வந்தார்.

Vikatan

இப்படி எல்லாம் நடக்கிறது என்று சொன்னபொழுது, அவரிடம் நான் கூறியதை அப்படியே கூற முடியாது. நீங்கள் எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க என்று கேட்டேன். நான் கூறியதால்தான் ஓ.பன்னீர்செல்வம் சமாதியில் அமர்ந்து தியானம் செய்தார். அதன்பிறகு தமிழகத்தில் காட்சிகள் மாறின. ஒரு மாற்றம் ஏற்பட்டது. பிரிந்த அ.தி.மு.க-வை ஒருங்கிணைத்தேன். எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆட்சி பாவமான, தவறான ஆட்சி என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. பா.ஜ.க-விடம் எனக்கு செல்வாக்கு இருப்பதால் அவர்களிடம் சொல்லி ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என இங்குள்ளவர்கள் பேசினார்கள்.

குருமூர்த்தி
குருமூர்த்தி

விஷப்பரீட்சையில் இறங்க நான் தயாராக இல்லை. தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க நான் சொல்ல முடியாது. நான் சொல்லுவதை, அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதும் தெரியவில்லை. பதவியில் இருப்பவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். அரசியல் சாசனப்படி இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்து ஆளுநர் ஆட்சியைக் கொண்டுவந்தால், அடுத்த 6 மாதத்துக்குள் தமிழகத்தை மாற்றிவிட முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. தமிழகத்துக்கு மக்கள் மூலமாகத்தான் மாறுதல் வர முடியும். ரஜினிகாந்த் வந்தால்தான் தமிழகத்தில் மாறுதல் ஏற்படும்.

ரஜினிக்கு... கிருஷ்ணராக மாறுகிறாரா குருமூர்த்தி?- ராஜகுருவின் லாஜிக் அரசியல்!

ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது கேள்விக்குறி. அ.தி.மு.க-வை டிஸ்மிஸ் செய்தபின்பு நிச்சயம் பா.ஜ.கவால் ஆட்சிக்கு வர முடியாது. அதேநேரம் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது. தி.மு.க-வும் அவர்களின் குடும்பமும் தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கக்கூடிய மிகப்பெரிய சக்திகள். லஞ்சம், இந்தி எதிர்ப்பு, தேசிய எதிர்ப்பு, பாரம்பர்ய எதிர்ப்பு ஆகியவை தமிழ்நாட்டின் காயங்களாக உள்ளன" எனப் பேசினார்.

குருமூர்த்தி
குருமூர்த்தி

இவரது பேச்சு அடங்கிய வீடியோ பரவ ஆரம்பிக்க சர்ச்சை ஏற்பட்டது. குருமூர்த்தியின் இந்தப் பேச்சு குறித்து சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ``குருமூர்த்தியின் பேச்சு ஆணவத்தின் உச்சம், திமிர்வாதம். இவ்வளவு திமிர் கூடாது. நாவடக்கம் தேவை, பல சமயங்களில் அ.தி.மு.க-வின் மீது கைவைத்து அதனால் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். ஒருவர் தான் ஆண் மகன் இல்லை என்றால் தான் சந்தேகம் ஏற்பட்டு மற்றவர்களை, நீ ஆம்பளையா...? நீ ஆம்பளையா...? என்று கேட்பார்கள். முதலில் இவர் ஆண் மகனா என்பதற்கு அவர் பதில் சொல்லட்டும்" என ஆவேசமாகப் பதில் கொடுத்துள்ளார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு