Published:Updated:

புதுச்சேரி: `கொலை வழக்குகளில் சிறை; அரசியல் என்ட்ரி!' பா.ஜ.க-வில் இணைந்த `தாதா’ எழிலரசி யார்?

எழிலரசி
எழிலரசி

உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் உயிர் பிழைத்துவந்த எழிலரசி, தனது கணவரின் கொலைக்குக் காரணமான அனைவரையும் பழிக்குப் பழி வாங்குவேன் என சபதம் எடுத்திருப்பதாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரியான ராமு (எ) ராதாகிருஷ்ணன், தனது முதல் மனைவியான வினோதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திருப்பட்டினத்தைச் சேர்ந்த எழிலரசியை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்ட ராமு, 2012-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

கொலை செய்யப்பட்ட ராமு, வினோதா
கொலை செய்யப்பட்ட ராமு, வினோதா

ராமு மீது கோபத்தில் இருந்த வினோதா அவரைக் கொலை செய்வதற்கு கூலிப் படையை ஏவினார். அதன்படி 2013-ம் ஆண்டு, ஜனவரி மாதம் தனது இரண்டாவது மனைவி எழிலரசியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ராமு, கூலிப் படையினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவருடன் இருந்த எழிலரசி படுகாயங்களுடன் உயிர்பிழைத்தார்.

அந்தச் சம்பவத்தில் ராமுவின் முதல் மனைவி வினோதா, ராமுவின் நண்பர் ஐயப்பன், வைத்தி (எ) வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் மீது அப்போது வழக்கு பதிவு செய்தது காவல்துறை. உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் உயிர் பிழைத்துவந்த எழிலரசி, தனது கணவரின் கொலைக்குக் காரணமான வினோதா மற்றும் அவருக்கு உதவி செய்த ராமுவின் நண்பர் ஐயப்பன், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி சிவகுமார், ராமுவின் சகோதரர் மற்றும் ஒரு வழக்கறிஞர் என அனைவரையும் பழிக்குப் பழி வாங்குவேன் என சபதம் எடுத்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

கொலை செய்யப்பட்ட வி.எம்.சி.சிவக்குமார்
கொலை செய்யப்பட்ட வி.எம்.சி.சிவக்குமார்

அதற்கடுத்த சில மாதங்களில் ராமுவின் நண்பரான ஐயப்பன், காரைக்கால் நிரவி ஓ.என்.ஜி.சி அலுவலகத்துக்கு அருகில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். ராமுவின் கொலைக்குப் பழிவாங்கும்விதமாகவே அந்தக் கொலை நிகழ்த்தப்பட்டதாக தெரிவித்த காவல்துறை, அந்த வழக்கில் முதன்முறையாக எழிலரசியைக் கைதுசெய்தது. அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார் எழிலரசி. சென்னையில் தங்கியிருந்த ராமுவின் முதல் மனைவி வினோதா, 2015, ஏப்ரல் 27-ம் தேதி சொத்து விவகாரம் தொடர்பாக காரைக்கால் வந்துவிட்டு சென்னைக்குக் காரில் திரும்பிக்கொண்டிருந்தார். நாகை மாவட்டம், சீர்காழிக்கு அருகே புறவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவரது காரை மற்றொரு கார் வழிமறித்தது.

அதிலிருந்து இறங்கிய கூலிப் படையினர் காரை ஓட்டிச் சென்ற டிரைவர் ஆரோக்கியராஜ், முன்புற சீட்டில் அமர்ந்திருந்த வினோதாவின் தங்கை கணவர் நவநீதக் கண்ணன் ஆகியோரின் கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டியதுடன், வினோதாவை மட்டும் கீழே இறக்கி நடுரோட்டில் துள்ளத் துடிக்க வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கிலும் காவல்துறை எழிலரசியைக் கைதுசெய்ய, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். (போதுமான சாட்சியங்கள் இல்லாததால், இந்த வழக்கில் காரைக்கால் நீதிமன்றம் எழிலரசியை விடுதலை செய்தது). அதையடுத்து 2017, ஜனவரி 3-ம் தேதி நிரவியில் தான் கட்டிவரும் திருமண மண்டபத்தின் வேலைகளைப் பார்வையிடச் சென்ற புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார், அந்தத் திருமண மண்டபத்துக்குள்ளேயே கூலிப் படையினரால் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி பா.ஜ.க தலைவர் சாமிநாதன் முன்னிலை இணைந்த எழிலரசி
புதுச்சேரி பா.ஜ.க தலைவர் சாமிநாதன் முன்னிலை இணைந்த எழிலரசி

புதுச்சேரியைப் பதறவைத்த இந்தக் கொலையை ராமுவின் கொலைக்கு பழிக்குப் பழியாகவே எழிலரசி செய்திருக்கிறார் என்று கூறிய காவல்துறை அவரைத் தேட ஆரம்பித்தது. அப்போது தலைமறைவாக இருந்த எழிலரசி, சில நாள்களில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர்மீது குண்டர் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறையிலிருந்த தாதா மணிகண்டனைச் சந்தித்து அடுத்த கொலைக்குச் சதித் திட்டம் தீட்டியதாக வெளியான தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதையடுத்து ஜாமீனில் வெளிவந்த எழிலரசி மறைவிடங்களில் தங்கி, காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு வந்தார். பின்னர், புதுச்சேரி விடுதி ஒன்றில் தனது ஆதரவாளர்கள் மற்றும் ரௌடி மணிகண்டன் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எழிலரசியைச் சுற்றிவளைத்தது காவல்துறை. அப்போது கைதுசெய்யப்பட்ட 14 பேர்களில் முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவகுமாரைக் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த விக்ரமனும் ஒருவர்.

புதுச்சேரி: பா.ஜ.க-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி!

மீண்டும் வெளியே வந்த எழிலரசி, நிரவி பகுதியில் சமூக சேவைகளில் ஈடுபட்டுவந்தார். அப்போது, காவல்துறை தனக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்துவருவதாக தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுத்த அவர், காரைக்கால் நிரவி தொகுதியில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகத் தெரிவித்தார். மேலும், `அது கட்சி சார்பாகவா அல்லது சுயேச்சையாகவா என்பது குறித்து அப்போது முடிவெடுப்பேன்’ என்றும் தெரிவித்திருந்தார். அவரின் அரசியல் அறிவிப்பு புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியதால், சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி 2020, ஜனவரி 23-ம் தேதி அவரை மீண்டும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்தது காவல்துறை. அதிலிருந்து தற்போது வெளியில் வந்திருக்கும் எழிலரசிதான், புதுச்சேரி பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு