Published:Updated:

இந்தி எதிர்ப்பு: `அன்று தியாகம் இருந்தது, இன்று!' - பாலமுருகன் ஐ.ஆர்.எஸ்.

அரசாங்க விதிகளை மீறுவதை நானும் உணர்கிறேன். ஒன்று, விதிகளை மீறுவது. இரண்டாவது, ஒரு தமிழனாகக் குரல் கொடுப்பது. `ஒரு லட்சம் பேர் சாகும்போது அமைதியாகப் பதவியில் நீடிக்க வேண்டுமா?' என்று மனம் வெதும்பிப்போய்த்தான் ராஜினாமா கடிதம் அனுப்பினேன்.

`இந்தி மொழி தெரியாத என்னை, இந்திப் பிரிவில் பணியமர்த்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது' என மத்திய அரசுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பியிருக்கிறார் ஐ.ஆர்.எஸ் அதிகாரி பாலமுருகன். `இந்தி தெரியாது போடா’. `தி.மு.க வேணாம் போடா' என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகிவரும் நேரத்தில், ஓர் ஐ.ஆர்.எஸ் அதிகாரியின் `இந்தி எதிர்ப்பு' கருத்துகள் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

அரசுக்கு அனுப்பிய கடிதம்
அரசுக்கு அனுப்பிய கடிதம்

சென்னை அண்ணாநகரிலுள்ள ஜி.எஸ்.டி அலுவலகத்தில் உதவி ஆணையராகப் பணியாற்றிவருகிறார் பாலமுருகன். தனது எதிர்ப்பை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரி வாரியத்துக்குக் கடிதம் மூலமாகப் பதிவுசெய்திருக்கிறார்.

பாலமுருகனிடம் பேசினோம்.

`` ஐ.ஆர்.எஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்கும்போதே, `இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்பது விதியாக இருக்கும்போது, அதை எதிர்ப்பது எந்த வகையில் சரி?"

அரசுக்கு அனுப்பிய கடிதம்
அரசுக்கு அனுப்பிய கடிதம்

``நான் தேர்வாகும்போது அந்த விதிகள் இல்லை. யு.பி.எஸ்.சி தேர்வில் 92-ம் ஆண்டு வெற்றி பெற்று, `கஸ்டம்ஸ் அப்ரைஸிங் சர்வீஸ்’ என்ற பதவிக்குத் தேர்வானேன். 2003-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ் ஆனேன். நான் தேர்ச்சி பெற்றபோது, இந்தி படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை."

கனிமொழி கேட்ட 600 டி-ஷர்ட், பற்றவைத்த யுவன்... `இந்தி தெரியாது' டி-ஷர்ட் வைரல் பின்னணி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஜி.எஸ்.டி இந்தி செல் பிரிவில் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பொறுப்பில் இருக்கிறீர்கள். இவ்வளவு நாள் இல்லாமல், இப்போது புகார் எழுப்ப வேண்டிய அவசியம் என்ன?"

`` இவ்வளவு நாள் இந்த விஷயங்கள் அனைத்தும் யதேச்சையாக நடந்திருக்கலாம் என நினைத்தேன். அப்போதே கோப்புகளில் என்னுடைய கையொப்பத்தைத் தமிழில் போடுவது எனவும் முடிவெடுத்திருந்தேன். என்னுடைய பிரிவில் உதவி ஆணையாளர், கண்காணிப்பாளர் என தமிழ் பேசக் கூடியவர்களாக இருந்தோம். அண்மையில் இன்ஸ்பெக்டராக இருந்த இந்திக்காரரை எடுத்துவிட்டு, தமிழ்க்காரரை நியமித்தனர். இதன் பிறகுதான் திட்டமிட்டே செய்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. இந்தத் துறையில் தமிழ் உணர்வாளர் என அறியப்பட்டவன் நான்.’’

பாலமுருகன் ஐ.ஆர்.எஸ்
பாலமுருகன் ஐ.ஆர்.எஸ்

``அதைப் பற்றி விளக்க முடியுமா?’’

``2009-ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில், பிப்ரவரி 3 முதல் 9-ம் தேதி வரை இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தேன். அதற்காக என்னை சஸ்பெண்ட் செய்தார்கள். அவ்வாறு நான் உண்ணாவிரதம் மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் இந்நேரம் கமிஷனராகியிருப்பேன். அதன் பிறகு என்னுடைய தமிழ் உணர்வைச் சிறுமைப்படுத்தும் வேலைகளையும் தொடர்ந்து செய்தார்கள்."

`` அரசின் நன்னடத்தை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது ஒவ்வோர் அரசு ஊழியரின் கடமை. அதை மீறுவது சரியானதா?"

`` உண்மைதான். இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தபோது, `ஓர் அரசு அதிகாரியாக இருந்து கொண்டு விதிகளை மீறி, தொடர்ந்து பணியாற்றுவதற்கு என்னுடைய மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. எனவே, இப்படியொரு சூழலில் இங்கே பணியாற்ற விரும்பவில்லை, பணியை ராஜினாமா செய்கிறேன்' என்று அரசுக்குக் கடிதம் எழுதினேன். இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, விதிகளை மீறுவது. இரண்டாவது ஒரு தமிழனாகக் குரல் கொடுப்பது. `ஒரு லட்சம் பேர் சாகும்போது அமைதியாகப் பதவியில் நீடிக்க வேண்டுமா?' என்று மனம் வெதும்பிப் போய்த்தான் ராஜினாமா கடிதம் அனுப்பினேன். அதை அரசு கண்டுகொள்ளவில்லை. 2014, 2016 ஆகிய ஆண்டுகளிலும் இரண்டு முறை ராஜினாமா கடிதம் கொடுத்தேன். அப்போதும் அவர்கள் என்னை வெளியே அனுப்ப மறுத்துவிட்டனர். என்னை அடிமைத்தனத்தோடு வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை".

`இந்தி தெரியாது போடா...', `தி.மு.க வேணாம் போடா' - டிரெண்டாகும் ஹேஷ்டேக் பின்னணி சீக்ரெட்!

`` அரசுக்கு நீங்கள் எழுதியுள்ள கடிதத்தில், `புரியாத ஒன்றைத் திணிக்கிறார்கள்' என்கிறீர்கள். உங்களுக்கு மட்டும்தான் இது நடக்கிறதா?"

பாலமுருகன்
பாலமுருகன்

`` இந்தி செல் என்று வரும்போது இந்தி தெரிந்திருக்க வேண்டும். மற்ற பிரிவுகளில் இது போன்ற பிரச்னைகள் இல்லை. எனக்கு ஒதுக்கப்பட்ட பிரிவில், நான் முன்மாதிரியாக இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்தியில் நோட்ஸ் வரும்போது அது என்னவென்று தெரியாது. ஆனால், அதில் கையொப்பமிட வேண்டும். கையொப்பம் போடக்கூடிய அளவுக்காவது இந்தி தெரிந்திருக்க வேண்டும். நான் அதையும் கற்றுக்கொள்ளவில்லை. இப்போதும் ஆங்கிலத்தில்தான் கையொப்பம் போடுகிறேன்.

என்னுடைய பிரிவில் நான், கண்காணிப்பாளர், இன்ஸ்பெக்டர் என மூவருமே தமிழ் பேசக் கூடியவர்கள். எங்கள் மூவருக்கும் இந்தி தெரியாது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் 70 சதவிகிதம் பேர் வட இந்தியர்கள். உதவி ஆணையர் பிரிவிலும்கூட ஒரு வட இந்தியர் இருக்கிறார். அவருக்கு இந்தப் பொறுப்பைக் கொடுக்காமல் எனக்குக் கொடுக்கிறார்களென்றால், இதை எப்படி எடுத்துக்கொள்வது?"

`` சில நாள்களாக `இந்தி தெரியாது' என்ற வாசகம் அணிந்த பனியன்கள் டிரெண்ட் ஆகி வருகின்றனவே?"

`` பார்த்தேன். நான் அரசியல் கட்சியைச் சார்ந்தவன் இல்லை. தனிப்பட்ட முறையிலும் என்னால் இந்தியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு உலகத்தை அடையாளம் காட்டியது என்னுடைய தாய்மொழிதான். அதைத் தவிர்த்துவிட்டு வேறு மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறுவதை ஏற்க முடியவில்லை.

நான் நேர்மையாக இல்லாவிட்டால் அரசுக்கு எதிராகப் பேச முடியாது. இதுவே, 1970-களில் இது போன்ற சம்பவம் நடந்திருந்தால், போராட்டத்தின் வடிவம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அப்போது தியாகத்தோடு போராடினார்கள். இப்போது அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பவே கட்சிகள் தயங்குகின்றன. அவ்வாறு தயங்க வேண்டிய சூழலிலும் அவர்கள் இருக்கிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட எந்தவிதத் தயக்கமும் இல்லை. என்னுடைய தந்தையும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்தவர்தான். நான் பிறந்த அன்றுகூட என் தந்தை இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்தான் இருந்தார்.

அடிப்படையில் அவர் ஒரு மருத்துவர். போராட்டக்களத்தில் இருந்ததால், நான் பிறந்ததுகூட அவருக்குத் தெரியாது. மூன்று நாள்கள் கழித்துதான் அவருக்குத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. பிறந்ததிலிருந்தே இன்னும் எத்தனை காலம்தான் மொழிக்காக நாம் போராட வேண்டும்?"

இந்தி எதிர்ப்பு
இந்தி எதிர்ப்பு

ஆனால், `எட்டு வருடங்கள் மும்பையில் பணியாற்றிய பாலமுருகனுக்கு இந்தி மொழி குறித்த அடிப்படை அறிவு இருந்திருக்கும்' என்கிறாரே உங்கள் துறையின் கமிஷனர்?

``நான் மராட்டிய மாநிலத்தில் பணிபுரிந்தபோது, மராட்டியத்தை கற்றிருக்கக் கூடாதா... இந்தியைத்தான் கற்றுக்கொள்ள வேண்டுமா... என்னால் கற்றுக்கொள்ள முடிந்திருந்தால் கற்றிருப்பேன். எனக்கு அறிவுரை கூற இவர் யார்? `நீ கற்றுக்கொள்ள வேண்டும்’ என்பதுதான் அவருடைய எண்ணம்.

என்னுடைய கமிஷனர் அளித்த அதே பேட்டியில், `இந்தியைத் தாய்மொழியாகக்கொண்ட அதிகாரி ஒருவர், தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றிவிட்டு ஓய்வு பெறவிருக்கிறார்' என்கிறார். அந்த அதிகாரிக்குத் தமிழ் தெரியுமா... அதைப் பற்றி கமிஷனர் கேட்பாரா... அதற்கு அந்த அதிகாரி என்ன பதில் சொல்வார் என எனக்குத் தெரியும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்."

அரசுக்கு எதிராகப் பேசுவதன் மூலம், பதவியை இழக்க வேண்டிய சூழல் வருமே?

`கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் இந்தி ஆசிரியரே இல்லை!’ - சர்ச்சைக்கு ஆணையாளர் விளக்கம்

`` வரட்டும். என்னுடைய எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் சுதந்திரமாகச் செயல்பட விரும்புகிறேன். வேறு ஏதாவது ஒரு வேலை செய்து பிழைக்க முடியும் எனவும் உறுதியாக நம்புகிறேன்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு