Published:Updated:

`அந்த அதிகாரிக்கும் இந்தி தெரியாது!’ - ஜி.எஸ்.டி அலுவலகத்தின் அடுத்த சர்ச்சை?

பாலமுருகன் ஐ.ஆர்.எஸ்
பாலமுருகன் ஐ.ஆர்.எஸ்

ஆணையர் அலுவலகத்தில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட ஓர் உதவி ஆணையருக்கு இந்திப் பிரிவை ஒதுக்காமல், எனக்கு ஒதுக்கியது திட்டமிட்டு செய்யப்பட்ட செயல்.

இந்தித் திணிப்புக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பிய சென்னை ஜி.எஸ்.டி உதவி ஆணையர் பாலமுருகன், தற்போது வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். ` இந்த மாறுதலால் உற்சாகம் எதுவும் இல்லை. அரசின் கொள்கை முடிவில் மாற்றம் வர வேண்டும்' என்கிறார் பாலமுருகன் ஐ.ஆர்.எஸ்.

சென்னை அண்ணாநகரிலுள்ள ஜி.எஸ்.டி ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆணையராகப் பணியாற்றிவருகிறார் பாலமுருகன் ஐ.ஆர்.எஸ். இவர் கடந்த செப்டம்பர் மாதம், 7-ம் தேதி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரி வாரிய தலைவருக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், ` நான் ஜி.எஸ்.டி ஆணையர் அலுவலகத்தில் திறன் வளர்ப்பு மற்றும் இந்திப் பிரிவில் பணிபுரிந்துவருகிறேன். இந்திப் பிரிவின் பணியானது, மத்திய அலுவல் மொழியாக இந்தியைப் பரப்புவதும், அதன் உபயோகத்தைக் கண்காணிப்பதும் போன்றவை.

பணி மாறுதல் உத்தரவு
பணி மாறுதல் உத்தரவு

இந்தப் பிரிவில் கோப்புகளில் எழுதப்படும் குறிப்புகள் இந்தி மொழியில் இருக்க வேண்டும் என்பது சட்டவிதி. எனக்கு இந்தி தெரியாததால், அந்தக் கோப்புகளில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரியாமல் கையெழுத்திடுவது வழக்கம். அத்துடன், கோப்புகளையும் கடிதங்களையும் என்னால் இந்தியில் எழுத முடியாது. ஆணையர் அலுவலகத்தில் இந்தியைத் தாய்மொழியாகக்கொண்ட ஓர் உதவி ஆணையருக்கு இந்திப் பிரிவை ஒதுக்காமல் எனக்கு ஒதுக்கியது திட்டமிட்டு செய்யப்பட்ட செயல். இந்தி தெரியாத எனக்கு அந்தப் பணியை கொடுப்பதை, என் மீது இந்தி மொழியைத் திணிப்பதாகவே கருதுகிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

மத்திய அரசின் ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவர், இந்தித் திணிப்புக்கு எதிராக நேரடியாகக் குரல் எழுப்பியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, தி.மு.க தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில், தற்போது இந்திப் பிரிவிலிருந்து மாற்றப்பட்டிருக்கிறார் பாலமுருகன். தற்போது அவர் அதே ஜி.எஸ்.டி அலுவலகத்தில் ரிவியூ பிரிவில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார். இவர் முன்பு பதவி வகித்த இந்திப் பிரிவுக்கு பிரிஸி என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழரான இவருக்கும் இந்தி தெரியாது எனக் கூறப்படுகிறது.

Vikatan

பாலமுருகனிடம் பேசினோம். `` என்னுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி என்று சொல்லும்படியாக எதுவும் இல்லை. ஒருவரை விருப்பத்தின்பேரில் நியமிக்க வேண்டும். இந்திப் பிரிவில் இந்தி தெரிந்தவர்களை நியமிக்க வேண்டும். தற்போது இந்திப் பிரிவில் நியமிக்கப்பட்டிருக்கும் பிரிஸி என்பவருக்கு இந்தி மொழி தெரியாது. அவரைக் கேட்டுவிட்டு நியமித்ததாகத் தெரியவில்லை. என்னுடைய சிரமத்தை இன்னொருவர் தலையில் கட்டிவிட்டனர். இதுவே, அவர் எழுத்துபூர்வமாகக் கேட்டிருந்தால் நியமிப்பதில் தவறு இல்லை. இந்தித் திணிப்புக்கு எதிராக அரசின் கொள்கை முடிவில் மாற்றம் வர வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு