அடர்ந்த முடிதான் அழகு என்பதில்லை; வழுக்கையும் சிலருக்கு அழகையும் அடையாளத்தையும் தரும். ஆனால், வழுக்கையால் சங்கடம் என்றே பலரும் கருதுகின்றனர். காரணம், வழுக்கை விழுந்தவர்கள் சமூகத்தில் கிண்டலுக்கு உள்ளாவதுண்டு.
இப்படி தினமும் பல கேலிகளை எதிர்கொள்வதால், தங்களுக்கு மாதம் 6,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்க வேண்டும் என வழுக்கைத் தலைக்குழு ஒன்று, தெலங்கானா முதல்வருக்கு கோரிக்கை வைத்த சம்பவம், தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.

தெலங்கானா மாநிலம், சித்திபேட் மாவட்டம் தங்கலபள்ளி கிராமத்தில், வழுக்கைத் தலைச்சங்க குழு ஒன்று புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் தலைவராக இருப்பவர் 50 வயதான வெல்டி பாலய்யா. இந்தக் குழுவில் வழுக்கைத் தலை உள்ளவர்கள் ஒன்றுகூடி, கூட்டம் நடத்துவதுண்டு.
அந்த வகையில், தலையில் அடர்த்தியான முடி இல்லாமல் தினமும் சங்கடத்தை அனுபவிப்பதாலும், சிலர் தங்களைக் கேலி செய்து மன வேதனையுறச் செய்வதாலும் அரசிடமிருந்து உதவித்தொகை கோருவது என்று தீர்மானித்தனர். அத்துடன் நிற்காமல், உடனே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்குக் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி வைத்துள்ளனர்.
அதில், ``வழுக்கைத் தலையால் தினமும் கேலி கிண்டலுக்கு உள்ளாக நேரிடுகிறது. சிலரின் கேலி கிண்டல்களால் மனவேதனையுடன் வாழ்கிறோம். தினசரி ஏற்படும் அவமானத்தைச் சமாளிக்க, மாதம் 6,000 ரூபாய் ஓய்வூதியமாக அரசு எங்களுக்கு அறிவிக்க வேண்டும்.
முதியவர்கள், விதவைகள், உடல் ஊனமுற்றோர் மற்றும் பிறருக்கு அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. ஓய்வூதியத்துக்கான எங்களது கோரிக்கையையும் அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். கோரிக்கை வைப்பதற்காக எங்களைக் கேலி செய்வதை விரும்பவில்லை. எங்கள் கோரிக்கையை அனுதாபத்துடன் பரிசீலிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
வழுக்கைத் தலை கொண்டவர்களின் இந்தக் கோரிக்கை தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.