Election bannerElection banner
Published:Updated:

கட்அவுட், பேனர் குவிப்பு; ஸ்பீடு பிரேக்கர் உடைப்பு - முதல்வர் பழனிசாமி கோவை வருகை அட்ராசிட்டி!

எடப்பாடி பழனிசாமி கட்அவுட்
எடப்பாடி பழனிசாமி கட்அவுட்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகைக்காக, கோவை முழுவதும் கட்அவுட், பேனர்கள் வைக்கப்பட்டிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் தேர்தல் பிரசாரத்துக்காக இன்று மாலை கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு முடிந்தவுடன், பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் தொழில்துறையினருடன் அவர் ஆலோசனையில் ஈடுபடவிருக்கிறார். இரவு அரசு விருந்தினர் மாளிகையில் அவர் தங்கவிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
`கலப்படம், போலி லேபிள்... முதலில் இதை கவனிங்க எடப்பாடி!' - கருப்பட்டி உற்பத்தியாளர்கள்

நாளை, நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாள்களும் கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவர் பிரசாரத்தில் ஈடுபடவிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு, அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அ.தி.மு.க-வினர் ஏற்பாடு செய்துவருகின்றனர்.

கடந்த சில நாள்களாகவே, கோவை முழுவதும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும்விதமாக கட்அவுட், பேனர்கள் வைக்கப்பட்டுவருகின்றன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி வேலுமணி ஆகியோரின் பிரமாண்ட கட்அவுட் - பேனர்கள் மாநகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆங்காங்கே சாலைகளைச் சரிசெய்யும் பணிகளும் நடந்துவருகின்றன.

உச்சகட்டமாக, மசக்காளிபாளையம் அருகே சாலையிலிருந்த ஸ்பீடு பிரேக்கர்களை உடைத்து சாலைகளைச் சீர் செய்து வருகின்றனர். இதற்கு, எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

``கோவை அவிநாசி சாலையில் கடந்த 2017-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்ட அலங்கார வளைவால் ஏற்பட்ட விபத்தில், ரகு என்ற இளம் மென் பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகாவது, இந்த பேனர் கலாசாரம் ஒழியும் என்று எதிர்பார்க்கப்பட்டுவருகிறது.

ஆனால், அது இப்படி தொடர்கதையாகிவருவது வேதனை அளிக்கிறது. முதல்வர் வருவது இரண்டு நாள்களுக்குத்தான். அதற்காக, மக்கள் வரிப்பணத்தில் போட்ட ஸ்பீடு பிரேக்கர்களை உடைப்பதையெல்லாம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

2ஜிபி டேட்டா கார்ட்... பயனளிக்குமா எடப்பாடி அரசின் திட்டம்?!

இது குறித்து தி,மு.க கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான நா.கார்த்திக், ``எல்லாவற்றிலும் அருவருக்கத்தக்க அரசியல் விளம்பரம் தேடும் அமைச்சர் வேலுமணி தலைமையிலான அ.தி.மு.க-வினர் பேனர், கட் அவுட் வைக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டும், கொஞ்சம்கூட திருந்தவில்லை. உங்களின் ஆடம்பரத்துக்கும், வீண் விளம்பரத்துக்கும் இன்னும் எவ்வளவு விபத்துகள் நடக்க வேண்டும்?

முதல்வர் பழனிசாமி அவர்களே... பதில் சொல்லுங்கள். பல பகுதிகளில் சாலைலேயாரங்களில் கடை வைத்திருப்பவர்களை இரண்டு நாள்களுக்கு மூடச் சொல்லியிருக்கிறார்கள். இது எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் செயல். இதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக பேனர், கட்அவுட்களை அகற்றி, சட்டத்தை மீறி அவற்றைவைத்த அ.தி.மு.க-வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு