Published:Updated:

கழிப்பறையில் பாரதியார் படம்! - திருச்சி மாநகராட்சிக்கு எதிராகக் கொதிக்கும் தமிழ் உணர்வாளர்கள்

திருச்சி ஸ்மார்ட் கழிப்பறை
திருச்சி ஸ்மார்ட் கழிப்பறை

திருச்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்க் கட்டப்பட்ட ஸ்மார்ட் கழிப்பறையில் ஆண்கள் கழிப்பறைக்கு அடையாளம் காண்பிக்க பாரதியார் படம் பயன்படுத்தப்பட்டிருப்பது தமிழ் உணர்வாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை அருகே வயலூர் சாலைப் பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு நாள்தோறும், சோமரசன்பேட்டை, அல்லித்துறை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் ஏராளமான பயணிகள் பேருந்துக்காகக் காத்திருக்கும் நிலை உள்ளது.

திருச்சி ஸ்மார்ட் கழிப்பறை
திருச்சி ஸ்மார்ட் கழிப்பறை

பயணிகளின் சிரமத்தைப் போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயணிகளின் சிரமத்தைப் போக்க, பல்வேறு அமைப்பினரும் அந்தப் பகுதியில் கழிப்பறைக் கட்டித்தர கோரிக்கை வைத்து வந்தனர்.

`உங்க ஊருக்கும் வருகிறது திருச்சி சிறைச்சாலை செங்கரும்பு!’- அரசின் முடிவால் சிறைவாசிகள் உற்சாகம்

அதையடுத்து திருச்சி மாநகராட்சி, வயலூர் சாலைப் பேருந்து நிறுத்தம் அருகே நவீன கழிப்பறை அமைத்தது. அதன் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் வளர்மதி, திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

திருச்சி ஸ்மார்ட் கழிப்பறை திறப்புவிழா
திருச்சி ஸ்மார்ட் கழிப்பறை திறப்புவிழா

இந்நிலையில், கழிப்பறை பெயர் தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அடுத்து கழிப்பறையின் ஆண்களுக்கான வழியைச் சுட்டிக்காட்ட, பாரதியார் படம் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராகப் பல்வேறு அமைப்பினர் புகார் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் திருச்சி மாவட்டச் செயலாளர் கவித்துவன், ``பெரும் முயற்சியின் பயனாகக் கழிப்பறைக் கட்டப்பட்டது என்பது மகிழ்ச்சிதான். ஆனால், அதைவிடக் கழிப்பறையின் ஆண்களுக்கான வழியைச் சுட்டிக்காட்டும் படத்துக்குப் பாவலர் பாரதியார் படத்தை வரைந்துள்ளது மிகப்பெரிய அவலம். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி ஏராளமான பாடல்களை எழுதி மக்களுக்கு விழிப்புணர்வூட்டி எழுச்சி பெறச் செய்த மக்கள் பாவலரான பாரதியாரை இழிவுபடுத்தும் செயல் இது.

திருச்சி ஸ்மார்ட் கழிப்பறை
திருச்சி ஸ்மார்ட் கழிப்பறை

அந்தக் கழிவறையில் வைக்கப்பட்டுள்ள பாரதியின் படங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், கழிப்பறை அறிவிப்புப் பலகையைத் தமிழில் எழுத வேண்டும். இல்லையெனில் அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுப்போம்'' என்றார் கொதிப்பாக.

ஸ்மார்ட் கழிப்பறையில் அடையாளத்துக்கு பாரதியார் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பது தமிழ் உணர்வாளர்களை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தொடர்ந்து, பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். எதிர்ப்புகள் வலுத்ததை அடுத்து ஸ்மார்ட் கழிப்பறையில் இருந்த பாரதியார் புகைப்படம் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு