Published:Updated:

பீகார்:`மருத்துவர்கள், ஆக்ஸிஜன் இல்லை; திணறும் நோயாளிகள்!’ - அதிரவைக்கும் வீடியோக்கள்

``இருமல் மற்றும் வயிற்றுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு பல மணி நேரம் ஆனபோதிலும், நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை.”

இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகள் மீது கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்தே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதிக குற்றச்சாட்டுகள் எழுந்த மாநிலங்களில் பீகாரும் ஒன்று. இந்த மாநிலத்தில் தொடர்ந்து வைரஸ் பாதிப்புகளும் அதிகமாகி வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1,500 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 25,000-த்தைக் கடந்துள்ளது. 200-க்கும் அதிகமானவர்கள் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், அம்மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் நிலவும் குறைந்த வசதிகள் தொடர்பாகவும் அலட்சியங்கள் தொடர்பாகவும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

கொரோனா நெருக்கடியை கையாள்வது தொடர்பாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாரை விமர்சிக்கும் வகையில் ராஷ்ட்ரிய ஜனதாதளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில், சிவான் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத நிலைமை சுட்டிக் காட்டப்படுகிறது. வீடியோவில் பெண் ஒருவர் படுக்கையில் எந்தவித கவனிப்பும் இல்லாமல் படுத்துக்கிடப்பதும் காட்டப்படுகிறது.

``எங்களுக்கு முறையாக சிகிச்சையளிக்க மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை. மருத்துவர்கள் வந்து ஊசிகளை போட்டுவிட்டு உடனடியாக வெளியேறி விடுகிறார்கள்” என வீடியோவில் ஒருவர் கூறுகிறார். வைரஸ் அதிகமாகப் பரவி, பல மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள் இல்லை என தகவல்கள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில், அந்த மருத்துவமனையில் பெரும்பான்மையான படுக்கைகள் காலியாகவே உள்ளன. பீகார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கல் பாண்டேவின் சொந்த ஊர்தான் இந்த சிவான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா: `போராடிய நோயாளிகள்!’ - சொந்த செலவில் உணவு வழங்கிய கோட்டாறு இன்ஸ்பெக்டர்

தேஜஸ்வி யாதவ் இந்த பிரச்னைகள் தொடர்பாக பேசுகையில், ``முதல்வர் நிதிஷ், 12.6 கோடி பீகார் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடி வருகிறார். கொரோனா தொடர்பான தகவல்களை மறைக்கிறார். மக்களின் வாழ்க்கையைவிட உங்களுடைய பிம்பம்தான் முக்கியமானதா? குறைந்த அளவில் பரிசோதனைகளை தொடர்ந்து செய்து வந்தால், லட்சக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும். பல மாவட்டங்களில் பரிசோதனைகள் முறையாக செய்யப்படவில்லை. கடந்த 15 நாள்களாக முடிவுகள் வெளியாகவில்லை” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். பீகார் ஹாட்ஸ்பாட்டாக மாறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

உறவினருக்கு ஆக்ஸிஜன் கேட்டு செய்வதறியாது கத்திக்கொண்டு ஓடும் பெண் ஒருவரின் வீடியோவைப் பகிர்ந்த தேஜஸ்வி அதன் கேப்ஷனில், ``என்ன நடந்துகொண்டிருக்கிறது நிதிஷ்? உங்கள் சுகாதாரத்துறை அமைச்சர் எங்கே? மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். கதிஹார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். இருமல் மற்றும் வயிற்றுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு பல மணி நேரம் ஆனபோதிலும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

பீகார் மாநில அமைச்சர்களில் ஒருவரான நீரஜ் குமார், தேஜஸ்வியின் குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசும்போது, ``கொரோனா வைரஸ் தொடர்பான நெருக்கடி என்பது கடினமான நிலைமை என்பது பீகார் மக்களுக்குத் தெரியும். மாநில அரசு தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காப்பாற்றி வருகின்றனர். ஆனால், தேஜஸ்வி இதையெல்லாம் பார்க்க மாட்டார்” என்று கூறியுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதாதளம் மட்டுமல்லாது லோக் ஜன்ஷக்தி கட்சியும் கொரோனா நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அரசைக் கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக அக்கட்சி அதலைவர் பஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில், ``கொரோனா வைரஸ் மாநிலத்தில் விரைவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலை உள்ளது. இது மக்களுக்கு மிகவும் கவலை அளிக்கும் விஷயம். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு மாநிலத்தில் உள்ள நிலைமைகளை ஆய்வு செய்ய குழு ஒன்றை அனுப்ப வேண்டும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். குற்றச்சாட்டுகளை அடுத்து, லாவ் அகர்வால் தலைமையிலான குழு இன்று பீகாரில் ஆய்வுகளைச் செய்ய சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“நடப்பாண்டில் கொரோனா தடுப்பூசி வர வாய்ப்பில்லை..!” - மருத்துவ ஸ்டார்ட்அப் சொல்லும் உண்மை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு