Published:Updated:

`கந்த சஷ்டி' கலகமும்... கழகங்களின் அமைதியும்! - கே.டி.ராகவன் vs சுப.வீ

கறுப்பர் கூட்டம் சுரேந்தர்
News
கறுப்பர் கூட்டம் சுரேந்தர்

கந்தசஷ்டி கவசம் சர்ச்சையில், அ.தி.மு.க, தி.மு.க என இருபெரும் கட்சிகளும் எந்தவித கருத்தும் சொல்லாமல் அமைதிகாப்பது, `ஏன்' என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதுகுறித்து பா.ஜ.க கே.டி.ராகவன் மற்றும் தி.மு.க ஆதரவாளர் சுப.வீ ஆகியோர் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

பலரது வீடுதோறும் ஒலித்துவந்த `கந்தசஷ்டி கவசம்' பாடல், கடந்த சில நாள்களாக தமிழகம் முழுக்க சர்ச்சை ரூபத்தில் ஒலித்துவருகிறது. இந்தநிலையில், மதரீதியிலான குற்றச்சாட்டாகத் தொடங்கிய இப்பிரச்னை திடீரென `யூ-டர்ன்' எடுத்து அரசியல் ரீதியான குற்றச்சாட்டாக உருமாறியிருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

`கறுப்பர் கூட்டம்' எனும் யூடியூப் சேனலில், கந்தசஷ்டி கவசம் பாடல் குறித்தான வீடியோ ஒன்று வெளியானது. கந்தசஷ்டி கவசப் பாடல் வரிகளை விமர்சிக்கும் வகையில் வெளியான `இந்த வீடியோ பதிவு, இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது' எனக் கூறி தமிழக பா.ஜ.க மற்றும் இந்துமக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

கே.டி.ராகவன் பதிவு
கே.டி.ராகவன் பதிவு

இதையடுத்து, கந்தசஷ்டி கவசம் பாடல் வரிகள் குறித்து அவதூறான கருத்துகளை யூடியூப் சேனலில் வெளியிட்டதாகக் கூறி, சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில், சர்ச்சைக்குரிய இந்த வீடியோவை வெளியிட்டவர்களுக்கும் தி.மு.க-வுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் இந்த விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், `தி.மு.க மற்றும் அதன் கூட்டணியைச் சேர்ந்த திருமாவளவன், சுபவீ, கம்யூனிஸ்டுகள் எல்லாம் இந்து மத வெறுப்பைக் கக்கும் கறுப்பர் கூட்டத்தை ஆதரிக்கின்றனர். பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகள் வேண்டும். ஆனால், அவர்களின் நம்பிக்கைகளைத் தொடர்ந்து கொச்சைப்படுத்துவீர்கள். தி.மு.க எப்போது திருந்தும் ஸ்டாலின் அவர்களே...' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதையடுத்து, கே.டி.ராகவனிடம் பேசினோம்... ``தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் கந்தசஷ்டி கவசம் மந்திரத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தவிர பாதயாத்திரைக் குழுவினர், காவடி குழுவினரும் மத நம்பிக்கையோடு உணர்வுபூர்வமாகச் சொல்லி வருகிறவற்றை புண்படுத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்ட்டூனிஸ்ட் வர்மா என்பவர், `கறுப்பர் கூட்டத்தினர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காவிடில், நானும் முகமது நபிகளைப் பற்றி படம் வரைவேன்' என்று கூறியதும் தமிழகக் காவல்துறை அவரைக் கைது செய்துவிட்டது. இந்த விஷயத்தில், கார்ட்டூனிஸ்ட் வர்மா கூறிய இந்தக் கருத்தை நாமும் ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த மத நம்பிக்கை ஆனாலும் யாரும் அதைப் புண்படுத்தக் கூடாது என்பதுதான் எங்கள் வாதமும். ஆனால், கார்ட்டூனிஸ்ட் வர்மா மீது இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, நாங்கள் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதில் மட்டும் ஏன் இத்தனை தாமதம் காட்டுகிறார்கள் என்பது தெரியவில்லை.

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்

ஏனெனில், கந்தசஷ்டி கவசம் பாடலை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டம் `யூடியூப்' சேனலின் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லித்தான் தமிழக பா.ஜ.க சார்பில், கமிஷனர் - டி.ஜி.பி அலுவலகங்களில் புகார் கொடுத்துள்ளோம். ஆனால், நாங்கள் குறிப்பிட்டிருந்த நபரைக் கைது செய்யாமல், செந்தில்வாசன் என்றொரு நபரைக் கைது செய்திருக்கிறார்கள். இது ஏன் என்று தெரியவில்லை.

அடுத்ததாக, `கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் மீது நடவடிக்கை எடுங்கள்' என்று நாங்கள் எல்லோரும் புகார் கொடுத்திருக்கிறோம். ஆனால், தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுபவீ ஆகியோர் அதே கறுப்பர் கூட்டம் சேனலுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழர்களின் நம்பிக்கையைக் கொச்சைப்படுத்துவதும், தமிழ்க் கடவுளை இழிவுபடுத்துவதுமான யூடியூப் சேனலை திருமாவளவன், சுபவீ போன்ற தி.மு.க கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆதரிப்பது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், வாயே திறக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வருவது ஏன் என்று தெரியவில்லை.

கடந்த காலத்தில், தி.மு.க-வைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜ், பண்ணாரி அம்மன் கோயிலில் தீ மிதித்தார் என்பதற்காக, அதைக் `காட்டுமிராண்டித்தனம்... அநாகரிகம்' என்றது தி.மு.க. மேலும், நெற்றியில் பொட்டு வைத்திருந்ததை, `என்ன நெற்றியில் ரத்தம் வழிகிறது... இதற்கு என்ன அர்த்தம்' என்றெல்லாம் கேட்டவர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி. இன்றைய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒரு திருமண நிகழ்வில், கலந்துகொண்டு பேசும்போது `திருமண சடங்கு'களைக் கொச்சைப்படுத்திப் பேசியிருக்கிறார்.

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

தி.மு.க இப்படி என்றால், அ.தி.மு.க-வோ நாங்கள் கொடுக்கும் புகார்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறதே... தமிழ்க் கடவுளை இப்படிக் கீழ்த்தரமாகப் பேசுகின்றவர்கள் மீது, ஒரு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டாமா? எங்கள் மத நம்பிக்கையைக் கொச்சைப்படுத்துகிறவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று பா.ஜ.க கேட்பதையே, `இது அரசியல்' என்று சிலர் சொல்கிறார்கள். அப்படியென்றால், நாங்கள் எதுவும் செய்யாமல் அழுதுகொண்டு இருக்க வேண்டுமா. இது என்ன நியாயம்?'' என்று வெடித்தார்.

இந்தநிலையில், கந்தசஷ்டி கவச விவகாரத்தில் தேடப்பட்டு வந்த கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் சரணடைந்தார். இதைத்தொடர்ந்து அவரைக் கைது செய்த தமிழக போலீஸார், நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். தற்போது சுரேந்திரனை வருகிற 30-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த விஷயத்தில், காவல்துறைக்குப் புகார் வந்ததையடுத்து தமிழக அரசு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை அடுத்தடுத்து எடுத்துவருகிறது. ஆனாலும்கூட, ஊடகம் முழுக்க மத ரீதியிலான பிரச்னையாக இந்த விவகாரம் வெடித்துக் கிளம்புகிறது. கந்த சஷ்டி கவச சர்ச்சையைத் தொடர்ந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தி சமூக வலைதளங்களில் வீடியோ பதிவுகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. இதையடுத்து இஸ்லாமியர் தரப்பிலிருந்து காவல்துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தநிலையில், இஸ்லாமிய மதத்தைப் பற்றிய அவதூறு வீடியோவை வெளியிட்டதாக சென்னை பரங்கிமலையைச் சேர்ந்த மவுண்ட் கோபால் என்பவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், ``கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய செயல் கண்டிக்கத்தக்கது. அவதூறு பரப்பிய கறுப்பர் கூட்டம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ``மதக் கலவரத்தைத் தூண்டிவிடும் வகையில் கருத்து பதிவிடப்பட்டுள்ள யூடியூப் சேனல் பின்னணியில் அரசியல் சதி இருக்கிறது'' என செய்தியாளர்களிடையே கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜேந்திரபாலாஜி - சேவூர் ராமச்சந்திரன்
ராஜேந்திரபாலாஜி - சேவூர் ராமச்சந்திரன்

ஆளும்கட்சி என்ற வகையில் தமிழக அரசு, இந்த விஷயத்தில் எடுத்துவரும் கைது நடவடிக்கைகளைத் தொடர்ந்து அமைச்சர்களின் கருத்துகள் இவை. ஆனால், இந்தப் பிரச்னை குறித்து அ.தி.மு.க, தி.மு.க என இருபெரும் கட்சிகளின் கருத்துகள் எதுவும் அதிகாரபூர்வ செய்தியாக இதுவரை வெளிவரவில்லை. பொதுவாக மத ரீதியிலான இதுபோன்ற பிரச்னைகளில், கருத்துத் தெரிவிப்பதில் இரு கழகங்களும் சுணக்கம் காட்டியே வருகின்றன.

இந்தநிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த கே.டி.ராகவன், தி.மு.க கூட்டணிக் கட்சியினர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு `திராவிட இயக்கத் தமிழர் பேரவை'யின் பொதுச் செயலாளர் சுப.வீயிடம் பேசினோம்...

``நியூஸ் 18, கறுப்பர் கூட்டம், கறுப்பர் தேசம், யூ டு புருட்டஸ் போன்ற சேனல்கள் மிரட்டப்படுகின்றன. இது ஊடக உரிமைகளுக்கு எதிரானது. எனவே, இதைக் கண்டித்து நான் பேசினேன். மற்றபடி, இந்த ஊடகம் சொல்லியிருக்கிறது நியாயமா, நியாயம் இல்லையா என்ற இடத்துக்கெல்லாம் நான் போகவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவர்கள் குறிப்பிடுகிற காணொளியை நான் இன்னும் பார்க்கக்கூட இல்லை. என்னைக் கேட்டால், எந்த ஒரு கருத்துக்கும் எதிரான கருத்துகளைச் சொல்லலாம். ஆனால், நாகரிகமாகச் சொல்லுங்கள் என்பதுதான்.

Suba. veerapandiyan
Suba. veerapandiyan

`கந்தசஷ்டி கவசத்தில், இருப்பதைத்தான் நாங்கள் பேசினோம்; இல்லாதது எதையும் நாங்கள் பேசவில்லை' என்று சேனல் தரப்பில் சொல்கிறார்கள். அது இந்த நேரத்துக்குத் தேவையா, இல்லையா என்பதெல்லாம் வேறு விஷயம். ஆனால், யார் எதிர்க் கருத்து சொன்னாலும் உடனடியாக அவரைக் கைது செய்ய வேண்டும், வெட்டிவிடுவேன், குத்திவிடுவேன் என்றெல்லாம் சொல்வது நியாயமானதுதானா?

உங்களுக்கு எதிராக யார் என்ன பேசினாலும் அவர்களைக் கைது செய்துவிட வேண்டும் என்று சொல்வது பாஸிசம் இல்லையா? ஒரு நாட்டில் ஒரேயொரு கருத்துதான் இருக்க வேண்டுமா... இது என்ன ஜனநாயகம்?

சரி... இப்படியான புகார்களைச் சொல்பவர்களேகூட அடுக்கடுக்கான பொய்களோடு மிக ஆபாசமான வார்த்தைகளைப் பேசி வீடியோக்களையும் வெளியிடுகிறார்களே... அவர்கள் மீதான நடவடிக்கைகள் என்ன?

பா.ஜ.க எப்போதுமே தேர்தல், ஆட்சி, அதிகாரம் ஆகியவற்றில் மட்டுமே நாட்டம் கொண்ட ஒரு கட்சி. எனவே, அவர்களை இந்துமத ஆதரவுக் கட்சி என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதுநாள் வரையில் அவர்கள் இந்துக்களுக்கு ஒரு நன்மையையும் செய்தது இல்லை. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு, நிலச்சீர்திருத்தம் என இந்துக்களுக்கான அனைத்து நன்மைகளும் தி.மு.க ஆட்சியில்தான் கிடைத்தன.

மத்திய பா.ஜ.க ஆட்சியில்தான், மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வைக் கொண்டுவந்து நம் பிள்ளைகளின் மருத்துவக் கனவை சிதறடித்துவிட்டார்கள். அதேபோல், மருத்துவ மேற்படிப்பிலும்கூட இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்கப்பெறாமல், இன்றைக்குப் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்கள் யார்... இந்துக்கள்தானே..? எனவே, முற்று முழுதாக இந்துக்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க.

பா.ஜ.க ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

அப்படியென்றால், பா.ஜ.க யாருக்கான கட்சி... `இந்துக்கள் என்ற பெயரில், எல்லோரையும் அடக்கி வைத்து ஒரு சனாதனத் தலைமையைக் கொண்டு வர வேண்டும்; சனாதன ஆதிக்கம் இங்கே நிலைபெற வேண்டும்' என்று கருதுவோர்களுக்கான கட்சிதான் அது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பிரச்னையை இவர்கள் கையிலெடுப்பார்கள். திடீரென வள்ளுவருக்கு காவி சாயம் பூசிக்கொண்டு, திரும்புகிற இடங்களில் எல்லாம் வள்ளுவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். இப்போது அந்தப் பிரச்னை என்னவாயிற்று? வள்ளுவரை அப்படியே டமாரென்று கீழே போட்டுவிட்டு, திருச்செந்தூர் முருகனைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்ததாகப் பரபரப்பாகச் செய்திகள் வெளிவந்தன. அந்த ஆள் மாறாட்ட வழக்குகள் எல்லாம் இப்போது என்னவாகின என்பதைப் பற்றிய செய்திகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. உத்தரப்பிரதேசத்தில், விகாஸ்துபே என்ற ரவுடி அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார். 20 வருடங்களாக இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை நடத்திவந்த விகாஸ்துபேவை உயிரோடு பிடித்திருந்தால், அவரது பின்னணியில் இருந்தவர்கள் பற்றிய விவரங்களெல்லாம் இன்றைக்குத் தெரிந்திருக்கும். எனவேதான், திட்டமிட்டு எல்லாவற்றையும் மூடி மறைத்துவிட்டார்கள்.

இப்படி நாடு முழுக்க ஆயிரக்கணக்கான பிரச்னைகள் குவிந்துகிடக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் முருகக் கடவுளை நம்புகிற மக்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதற்காக, திடீரென முருகன் மீது பற்றுதல் வந்து `வெற்றிவேல், வீரவேல்' என்று எந்தவொரு வேலையாவது எடுத்து வந்து தி.மு.க-வை சாய்க்க வேண்டும் என வந்து நிற்கிறார்கள்.

அதனால்தான் தேவையே இல்லாமல், இந்தப் பிரச்னையில் தி.மு.க-வை வம்பிக்கிழுத்து பிரச்னை செய்துகொண்டிருக்கிறார்கள். கறுப்பர் கூட்டத்தின் சார்பில், கைதானவருக்கு நான் பெரியார் விருது கொடுத்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியை இணையதளங்களிலே பரப்பிவருகிறார்கள். கலைஞர் கையால், பெரியார் விருதை நான் பெற்றிருக்கிறேனே தவிர, நான் யாருக்கும் இதுவரை விருது எதுவும் கொடுக்கவில்லை... அந்தளவுக்கு நான் பெரிய ஆளாகவும் ஆகவில்லை.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

பின்னர் ஏன் இப்படி பொய் சொல்கிறார்கள்... என்று கேட்டால், நான் தி.மு.க-வை ஆதரிப்பவன். எனவே, இந்தப் பிரச்னையின் பின்னால் சுபவீ இருக்கிறார்; சுபவீயின் பின்னால் தி.மு.க இருக்கிறது என்று சொல்லி அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். ஆக சுற்றிவளைத்து அவர்களது குறி எல்லாம் `தி.மு.க-வை நோக்கியே' இருக்கிறது.

எனவே, தேர்தலுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் பா.ஜ.க-வினரின் கைகளில், இன்றைக்கு முருகன் கிடைத்திருக்கிறார். இந்த முருகரை வைத்துக்கொண்டு தமிழ் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க முடியுமா... இந்துக்கள் என்ற உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, யாரையெல்லாம் இவர்கள் ஒதுக்கினார்களோ... அவர்களையெல்லாம் தங்கள் வாக்குகளாக மாற்றிக்கொள்ள முடியுமா என்றெல்லாம் பார்க்கிறார்கள். அவ்வப்போது இப்படிப்பட்ட உத்திகளை அவர்கள் எடுப்பதும் பின்னர் அதில் தோற்பதுமாகத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அந்தத் தொடர்ச்சியான வரலாற்றில் இதுவும் ஒரு பாகம்... அவ்வளவுதான்'' என்றார் தீர்க்கமாக.

கொரோனா முழு ஊரடங்கு விலக்கப்பட்டு, இயல்புநிலை திரும்பி வருவதற்கான அறிகுறிகளாகத் தமிழக அரசியல் களம் மறுபடியும் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது! இவர்களில், `யார் செய்வது அரசியல்' என்ற கேள்விக்கு `எல்லாம் வல்ல தமிழ்க் கடவுள் முருகன்'தான் விடை சொல்ல வேண்டும்.