Published:Updated:

சொத்து முறைகேடு: சத்தியமூர்த்தி பவனிலா, கமலாலயத்திலா? - பரபரக்கும் குற்றச்சாட்டுகள்!

சத்தியமூர்த்தி பவன்
சத்தியமூர்த்தி பவன்

சத்திய மூர்த்தி பவன், கமலாலயம் சொத்துகள் தொடர்பான மோதல் பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

`தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையில் முறைகேடுகள் நடந்துள்ளது. அது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் எழுப்பியுள்ளார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான கே.எஸ்.அழகிரி, ``பா.ஜ.க அலுவலகம் செயல்படும் கமலாலயம் ரூ.30 கோடி மதிப்புடையது. அதை ரூ.3 கோடிக்கு பா.ஜ.க வாங்கியது எப்படி?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

குருமூர்த்தி
குருமூர்த்தி

இந்தச் சர்ச்சையை ஆரம்பித்து வைத்தவர், `துக்ளக்’ ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (த.நா.கா.க) அறக்கட்டளைக்கு ரூ.20,000 கோடிக்குச் சொத்துகள் உள்ளன. தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்துக்கு அருகே இருக்கும் காங்கிரஸ் திடல் மற்றும் சத்தியமூர்த்தி பவன் ஆகியவை குறித்து குருமூர்த்தி சில குற்றச்சாட்டுகளைத் தன் ட்விட்டர் பக்கத்தில் எழுப்பியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை பகுதியில் ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் அமைந்துள்ள சத்தியமூர்த்தி பவன்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைமை அலுவலகம். 20 கிரவுண்டு பரப்பளவிலான சத்தியமூர்த்தி பவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்குச் சொந்தமானது. சத்தியமூர்த்தி பவனை தனது அலுவலகமாகப் பயன்படுத்தும் காங்கிரஸ் கட்சி, அதற்கான வாடகையைச் செலுத்துகிறதா என்று குருமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல, தேனாம்பேட்டை காங்கிரஸ் திடலில் பிரமாண்டமான வணிக வளாகம் கட்டுவதற்குத் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் கூறியுள்ள குருமூர்த்தி, இது அறக்கட்டளையின் சட்டவிதிமுறைகளுக்கு எதிரானது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

குருமூர்த்தியைத் தொடர்ந்து பா.ஜ.க-வின் மாநிலத் தலைவரான எல்.முருகனும் காங்கிரஸ் கட்சி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை `முறைகேடு’ குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார். ``காங்கிரஸ் கட்சி மீது ஏன் இந்தத் திடீர் குற்றச்சாட்டு?” என்ற கேள்வியை பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் முன்வைத்தோம்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

``எழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்வதற்காகக் காமராஜர் உள்ளிட்ட தலைவர்களால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது. அந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான தேனாம்பேட்டை காங்கிரஸ் திடலில் பல அடுக்கு வணிக வளாகம் மற்றும் நட்சத்திர விடுதி கட்டுவதற்கு 1996-ம் ஆண்டு ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். அதன் பிறகு, 2007-ம் ஆண்டு ராகுல் காந்திக்கு நெருக்கமானவரான கனிஷ்க் சிங் என்பவர் சென்னைக்கு வந்து தேனாம்பேட்டைத் திடலைப் பார்வையிட்டு அது தொடர்பான ஆவணங்களையும் கணக்கு வழக்குகளையும் வாங்கிச் சென்றுள்ளார். அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை லாபநோக்கத்துக்காகப் பயன்படுத்துவது, அறக்கட்டளையின் சட்டவிதிகளுக்கு முரணானது.

இன்றைக்கும்கூட, யாரிடம் ஒப்பந்தம் போட்டு பணம் கைமாறியதோ, அவர்களின் கட்டுப்பாட்டில்தான் தேனாம்பேட்டை காங்கிரஸ் திடல் இருக்கிறது என்று கேள்விப்படுகிறோம். ஒப்பந்தம் செய்த நிறுவனத்தின் பெயர், ஒப்பந்தம் போடப்பட்ட தேதி உள்ளிட்ட விவரங்களை ஆதாரங்களுடன் எங்களால் சொல்ல முடியும். இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. காங்கிரஸ் திடலில் அமைந்துள்ள கட்டடத்தில் 22 அறைகளை காங்கிரஸ் புள்ளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். அவற்றுக்கு வாடகை எதையும் அவர்கள் செலுத்துவதில்லை.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இந்த அறக்கட்டளைக்கான டிரஸ்டிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகக் குழுதான் நியமிக்க வேண்டும். ஆனால், மோதிலால் வோராவையும் கேசவனையும் டிரஸ்டிகளாக சோனியா காந்தி நியமித்துள்ளார். இது அறக்கட்டளை விதிமுறைகளுக்கு எதிரானது. இவர்கள் இருவரையும் சோனியா காந்திதான் நியமித்தார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகிறார். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகக் குழுவால்தான் டிரஸ்டிகளை நியமிக்க முடியும் என்று அறக்கட்டளையில் உறுப்பினராக இருக்கக்கூடிய சுதர்சன நாச்சியப்பன் கூறுகிறார். இவற்றுக்கு முற்றிலும் வேறான ஒரு தகவலை, தற்போதைய தலைவரான கே.எஸ்.அழகிரி கூறுகிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களே முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறுகிறார்கள்” என்றார் நாராயணன் திருப்பதி.

``இப்படி நீங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது என்பது, இன்னோர் அரசியல் கட்சி மற்றும் அந்தக் கட்சியுடன் தொடர்புடைய அறக்கட்டளையின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகாதா?” என்ற கேள்வியை நாராயணன் திருப்பதியிடம் முன்வைத்தோம். அதற்கு அவர், ``அரசியல் கட்சி என்பது ஒரு பொதுவான இடம். அதில் எந்த முறைகேடும் நடக்கக் கூடாது. அந்த அடிப்படையில் நாங்கள் கேள்விகளை எழுப்புகிறோம். காங்கிரஸ் அறக்கட்டளையில் முறைகேடு நடந்திருப்பதை நாங்கள் கேட்கக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.

கமலாலயம்
கமலாலயம்

நாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாத கே.எஸ்.அழகிரி, பா.ஜ.க-வின் அலுவலகம் செயல்படும் கமலாலயம் வாங்கப்பட்டது குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறுகிறார். அப்போது அதன் சந்தை மதிப்பு என்ன என்பதை இணையத்தில் தேடினாலே எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். மேலும், சந்தேகம் இருந்தால், முக்தா சீனிவாசனின் மகன்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை குறித்து நாங்கள் சொல்கிற குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக அவர்கள் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு ஊடகப் பிரிவுத் தலைவரான கோபண்ணாவிடம் பேசியபோது அவர் நம்மிடம் நீண்ட விளக்கம் அளித்தார். ``தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் நோக்கங்கள், குறிக்கோள்கள் 1952-ல் பதிவுசெய்யப்பட்டன. அதற்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 1963-ல்தான் சத்தியமூர்த்தி பவன் கட்டப்பட்டது. 1963-லிருந்து காமராஜர் காலத்திலும், காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்ட பிறகும், காங்கிரஸ் இணைப்பு ஏற்பட்ட பிறகும், அங்குதான் அலுவலகம் செயல்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் செயல்படுகிறது. அதற்கு வாடகை கொடுக்கிறோமா இல்லையா என்பதைக் கேட்பதற்கு இவர்கள் யார்?

கோபண்ணா
கோபண்ணா

தேனாம்பேட்டையில் 150 கிரவுண்டு பரப்பளவிலான காங்கிரஸ் மைதானம் வெறும் காலி மைதானமாகக் கிடந்ததால், அதன் மூலம் எந்த வருமானமும் இல்லாமல் இருந்தது. மேலும், காமராஜர் அரங்கம் கட்டுவதற்கு வங்கியில் வாங்கப்பட்டிருந்த ரூ.3 கோடி கடன், அடைக்கப்படாமல் அப்படியே இருந்தது. எனவே, அப்போது அறக்கட்டளையின் அறங்காவலராக இருந்த சி.சுப்பிரமணியம், அந்த மைதானத்தில் கட்டடம் கட்டுவதற்கு சில முயற்சிகளை எடுத்தார். அந்த இடத்தில் 24 அடுக்கு வணிக வளாகம் கட்டுவதற்கு 1995-ம் ஆண்டு ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. சி.சுப்பிரமணியம், ஜி.கே.மூப்பனார், பா.ராமச்சந்திரன் ஆகியோர் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

அது ஒரு கூட்டு முயற்சி (Joint Venture). அந்த முயற்சியில் ஒரு தடங்கல் ஏற்பட்டது. அதாவது, 24 அடுக்கு கட்டடம் என்பதால் எம்.எம்.டி.ஏ அப்ரூவல் கிடைக்கவில்லை. அதனால், அந்த புராஜெக்ட் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அது நிகழ்ந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த ஒப்பந்தமும் காலாவதியாகிவிட்டது. அந்த ஒப்பந்தத்துக்குப் பிறகு எந்த முயற்சியும் நடக்கவில்லை. சி.சுப்பிரமணியம் போன்றவர்கள் முன்னின்று செய்திருக்கிறார்கள் என்றால், சும்மா கிடையாது. சட்ட வல்லுநர்களின் கருத்துகளைப் பெற்று, எல்லாவற்றையும் பக்காவாகச் செய்தார்கள். எம்.எம்.டி.ஏ அப்ரூவல் கிடைக்காததால்தான், மேற்கொண்டு எதையும் செய்யவில்லை. அதன் பிறகு, எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை.

சத்தியமூர்த்தி பவன்
சத்தியமூர்த்தி பவன்

அறக்கட்டளையின் டிரஸ்டிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகக் குழுதான் நியமிக்க வேண்டும். அந்த வகையில் மோதிலால் வோராவையும் கேசவனையும் நிர்வாகக்குழுதான் 2015-ம் ஆண்டு கூடி தீர்மானம் நிறைவேற்றி, நியமனம் செய்தது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் சரி, அதன் செயற்குழுவும் சரி... எல்லாமே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவருக்குக் கட்டுப்பட்டது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை நாங்கள் செயல்படுத்துவோம். அறக்கட்டளையின் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் வோரா நியமிக்கப்பட்டார். மற்றபடி, அறக்கட்டளையின் சொத்துக்களை யாராலும் கைப்பற்றவும் முடியாது, விற்கவும் முடியாது.

``தமிழகத்தில் பா.ஜ.க-வின் கூட்டணி ஆட்சி கனவு“ - சரியான முடிவா... போகாத ஊருக்கு வழியா? #2021TNElection

காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை மூலமாக ஏழை எளியவர்களுக்கும் மாணவர்களின் கல்விக்கும் மருத்துவத் தேவைகளுக்கும் நிறைய உதவிகளைச் செய்துவருகிறோம். கடந்த ஆண்டு 1,500 மாணவர்களின் கல்விக்காக 1 கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளோம். நீட் தேர்வால் மரணமடைந்த மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சத்தை தலைவர் கே.எஸ்.அழகிரி வழங்கிவிட்டு வந்தார். புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.40 லட்சம் அளித்துள்ளோம். ஒவ்வோர் ஆண்டும் அறக்கட்டளையின் கணக்கு வழக்குகளை முறையாக தணிக்கை செய்து சமர்ப்பித்து வருகிறோம். அப்படியிருக்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு இவ்வளவு சொத்துகள் இருக்கின்றனவே என்ற பொறாமையால் இப்படிப்பட்ட வீணான குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்கள்.

முருகன்
முருகன்

பா.ஜ.க மீது நாங்கள் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறோம். சென்னை தி.நகரில் பா.ஜ.க-வின் மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயம் இருக்கிறது. முக்தா சீனிவாசனுக்கு சொந்தமான அந்தச் சொத்தின் மதிப்பு ரூ.30 கோடிக்கும் அதிகம். ஆனால், இவர்கள் ரூ.3 கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள். அதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும், முக்தா சீனிவாசனுக்கு இருந்த கஷ்டமான சூழலைப் பயன்படுத்தி, அவருக்கு அழுத்தம் கொடுத்து மிகக் குறைந்து விலைக்கு அதைச் சொத்தை வாங்கியுள்ளார்கள்” என்றார்.

``காங்கிரஸ் அறக்கட்டளையில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து வருமான வரித் துறையினர் விசாரணை நடத்த வேண்டும்” என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டுள்ள ட்வீட்டுக்கு காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எதிர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

அதில் மாணிக்கம் தாகூர், ``எங்கள் கட்சியின் அறக்கட்டளை வரவு செலவுகளை வருமான வரித்துறையிடம் நாங்கள் தாக்கல் செய்திருக்கிறோம். உங்கள் கட்சியின் வரவு செலவுகளைக்கூட கேட்கவில்லை. மக்கள் வரிப்பணமான பி.எம்.கேர்ஸ் (PM Cares Funds) மற்றும் தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) மூலம் பெற்ற பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான கணக்குகளைக் காண்பிப்பதற்கு பா.ஜ.க தயாரா?” என்று கேட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு