Published:Updated:

`தடம் தெரியாமல் அழிப்பேன்' என்றார்! -தி.மு.க எம்.எல்.ஏ மீது பா.ஜ.க நிர்வாகி புகார்

சிவிடிவி காட்சி
சிவிடிவி காட்சி

`அரசியல்ரீதியாக செய்தித்தாள்களில், சமூக ஊடகங்களில் வருகின்ற செய்திகளை என்னுடைய பக்கங்களில் ஷேர் செய்வேன். அப்படித்தான் பி.மூர்த்தி பற்றி வந்திருந்த செய்தியை பதிவு செய்தேன்' என்கிறார் சங்கர்பாண்டி.

பா.ஜ.க நிர்வாகியை வீட்டுக்குச் சென்று மிரட்டியதாக மதுரை கிழக்குத் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.மூர்த்தி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கர் பாண்டி
சங்கர் பாண்டி

பா.ஜ.க இளைஞர் பிரிவில் மதுரை கோட்ட பொறுப்பாளராக இருப்பவர் சங்கர்பாண்டி. இவர் தி.மு.க-வை விமர்சித்து சமூக ஊடகங்களில் அவ்வப்போது பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார். இவர் தொழில்ரீதியாக ஜெர்மனிக்குச் சென்றபோது `முரசொலி மூலப்பத்திரம் எங்கே..' என்று அங்கு போராட்டம் நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். மு.க.ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன் மதுரைக்கு வந்திருந்தபோது அவரின் காரை மறித்து போராட்டம் நடத்த முயற்சி செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் மதுரை புறநகர் மாவட்ட தி.மு.க செயலாளராகவும் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.மூர்த்தியை விமர்சித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற பி.மூர்த்தி, சங்கர்பாண்டியை வீட்டுக்கு வந்து மிரட்டியதாக அது சம்பந்தப்பட்ட சிசிடிவி பதிவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடியோ காட்சி
வீடியோ காட்சி

அதைத் தொடர்ந்து சங்கர்பாண்டி கொடுத்த புகாரில் பி.மூர்த்தி மீது ஊமச்சிகுளம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி சங்கர் பாண்டியிடம் கேட்டோம், ``அரசியல்ரீதியாக செய்தித்தாள்களில், சமூக ஊடகங்களில் வருகின்ற செய்திகளை என்னுடைய பக்கங்களில் ஷேர் செய்வேன். அப்படித்தான் பி.மூர்த்தி பற்றி வந்திருந்த செய்தியை பதிவு செய்தேன். இதற்கு நாகரிகமான முறையில் பதில் சொல்ல முடியாமல் கடந்த 22-ம் தேதி ஆட்களுடன் என் வீட்டுக்கு வந்த மூர்த்தி, மிக அசிங்கமாகத் திட்டியபடி வீட்டுக்குள் நுழைந்தார்.

சாத்தான்குளம்:`அப்பா, மகன் தரையில் புரண்டதால் ஏற்பட்ட காயம்!'- எஃப்.ஐ.ஆர் சர்ச்சை

செருப்பை கழட்டி அடிக்க வந்தார். என் வீட்டில் உள்ளவர்களையும் அடிக்கப் பாய்ந்தார். தடம் தெரியாமல் அழித்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டுச் சென்றார். இது எங்கள் வீட்டில் இருந்த சிசிடிவி-ல் பதிவாகியுள்ளது. இல்லையென்றால் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறிவிடுவார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் இப்படி நடந்து கொள்ளலாமா? நான் போட்ட பதிவு தவறாகவே இருந்தாலும் சட்டரீதியாக புகார் கொடுக்கலாமே.. எனக்கு நேர்ந்தது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளேன்'' என்றார். இதைக்கண்டித்து பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

பி.மூர்த்தி
பி.மூர்த்தி

சங்கர்பாண்டியின் புகாருக்கு எதிராக, மூர்த்தி தரப்பினரும் புகார் கொடுத்துள்ளனர். அதில், `கிழக்குத் தொகுதியில் நல்ல பெயருடன் செயல்பட்டு வரும் எம்.எல்.ஏ-வைப் பற்றி அடிக்கடி அவதூறு பிரசாரம் செய்து வரும் சங்கர்பாண்டியை சந்தித்து கேட்கத்தான் அவர் சென்றார். செருப்பை எடுத்தெல்லாம் மிரட்டவில்லை. சங்கர்பாண்டிதான் அவரை மிரட்டினார். நடவடிக்கை எடுங்கள்' என்று கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை இரண்டு தரப்பும் கவனித்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு