Published:Updated:

பா.ஜ.க அமைச்சர்- காங்கிரஸ் எம்.எல்.ஏ இடையே நடந்த வார்த்தைப் போர்!- என்ன காரணம்?

சத்யா கோபாலன்

ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி பா.ஜ.க அமைச்சர் பேசிய கருத்து சர்ச்சையாகியுள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ - பா.ஜ.க அமைச்சர்
காங்கிரஸ் எம்.எல்.ஏ - பா.ஜ.க அமைச்சர்

மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களை `ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்லச் சொல்லி தாக்கும் செய்திகள் தொடர் கதையாகி வருகின்றன. இந்தத் தாக்குதலால் சிலர் உயிரிழக்கவும் நேர்ந்துள்ளது. ஆனால், கோஷம் சொல்லச் சொல்லும் கும்பல் மீது இதுவரை பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ - பா.ஜ.க அமைச்சர்
காங்கிரஸ் எம்.எல்.ஏ - பா.ஜ.க அமைச்சர்

இந்த நிலையில், ஜார்க்கண்டைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சர் ஒருவர், காங்கிரஸின் இஸ்லாமிய எம்.எல்.ஏ-வை `ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் சொல்லச் சொல்லி வற்புறுத்தியுள்ள சம்பவம் பெரும் விமர்சனமாகியுள்ளது. ஜார்க்கண்ட் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி சிங் நேற்று அம்மாநில சட்டமன்ற வாயிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தனக்கு அருகில் நின்றிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏவான இர்ஃபான் என்பவரின் கையை வலுக்கட்டாயமாகத் தூக்கி, ``இர்ஃபான் பாய், ஜெய் ஸ்ரீ ராம் சொல்லுங்கள். உங்கள் முன்னோர் ராமர்தான்” எனக் கூறுகிறார்.

இதற்குப் பதிலளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ, `` ராமரின் பெயரால் என்னை அச்சம் கொள்ளச் செய்கிறீர்கள். அவரின் பெயரைக் கெடுப்பதே நீங்கள்தான். நமக்கு வேண்டியதெல்லாம் மின்சாரம், வேலைவாய்ப்பு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள். இது இல்லை” எனத் தெரிவிக்கிறார்.

பா.ஜ.க அமைச்சர் சி.பி சிங்
பா.ஜ.க அமைச்சர் சி.பி சிங்

தொடர்ந்து, ``உங்களை அச்சப்படுத்தச் சொல்லவில்லை. உங்களின் முன்னோர்கள் ஜெய் ஸ்ரீராம் சொன்னதை மறக்க வேண்டாம். தய்மூர், பாபர், கஜினி ஆகியோர் உங்களின் மூதாதையர்கள் இல்லை. உங்கள் முன்னோர் ராமர் தான்” எனக் கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து செல்கிறார். அமைச்சர் சி.பி சிங் பேசியிருப்பது அந்த மாநிலம் உட்பட நாடு முழுவதும் சர்ச்சையாகியுள்ளது. இதற்கிடையில், ``சி.பி சிங்கின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக” அம்மாநில பா.ஜ.க விளக்கமளித்துள்ளது.