Published:Updated:

துப்பாக்கி... மது... ஃபேன்சி நம்பர்! `மரண மாஸ்’ பா.ஜ.க எம்.எல்.ஏ

ஆ.பழனியப்பன்

இரண்டு கைகளிலும் துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு பாலிவுட் குத்தாட்டப் பாடலுக்கு நடனமாடிய பா.ஜ.க எம்.எல்.ஏ., "மது அருந்துவது குற்றமா?... `லைசென்ஸ்’ பெற்ற துப்பாக்கி வைத்திருப்பது குற்றமா? என்ன குற்றம் கண்டீர்கள்?” என்று சீறியிருக்கிறார்.

குன்வர் பிரணவ் சாம்பியன்
குன்வர் பிரணவ் சாம்பியன்

இரண்டு கைகளிலும் துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு பாலிவுட் குத்தாட்டப் பாடலுக்கு நடனமாடிய பா.ஜ.க எம்.எல்.ஏ., "மது அருந்துவது குற்றமா?... `லைசென்ஸ்’ பெற்ற துப்பாக்கி வைத்திருப்பது குற்றமா? என்ன குற்றம் கண்டீர்கள்?” என்று சீறியிருக்கிறார்.

குன்வர் பிரணவ் சாம்பியன்
குன்வர் பிரணவ் சாம்பியன்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவார் தொகுதி எம்.எல்.ஏ-வான குன்வர் பிரணவ் சாம்பியன், பா.ஜ.க-வைச் சேர்ந்தவர். ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், இப்போது பா.ஜ.க-வில் இருக்கிறார். முறுக்கு மீசையும் முரட்டுத் தேகமும் கொண்ட குன்வர் பிரணவ் சாம்பியன், இதற்கு முன்பும் சர்ச்சைகளில் சிக்கியவர்.

அவர், இடது கையில் ஒரு துப்பாக்கியையும், வலது கையில் ஒரு துப்பாக்கியையும் தூக்கிப்பிடித்து, அது போதாதென்று வாயிலும் ஒரு துப்பாக்கியைக் கவ்விக்கொண்டு ஆட்டம் போடுகிறார். இடையே மது அருந்துகிறார். கூடவே வேறு சிலரும் ஆட்டம் போடுகிறார்கள். இந்த இரண்டு நிமிட வீடியோ வைரலாகி, அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

குன்வர் பிரணவ் சாம்பியன்
குன்வர் பிரணவ் சாம்பியன்

இதுகுறித்துப் பேசிய உத்தரகாண்ட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான அனில் பலுனி, "அந்த வீடியோ கொடூரமானது. ஏற்கெனவே எங்கள் கட்சியின் உத்தரகாண்ட் மாநிலத் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்மீது மேலும் நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி முடிவுசெய்யும்” என்றார்.

துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு அவர் ஆட்டம் போடும் வீடியோ, சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல், பல தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டது. இதனால் கடுப்பான அந்த எம்.எல்.ஏ., தனக்கு எதிராகச் சதி நடக்கிறது என்று பொங்கியிருக்கிறார்.

"பத்திரிகைகளும், ஊடகங்களும் தேவையில்லாமல் என்னைக் குறிவைக்கின்றன. என் விரோதிகளின் தூண்டுதலால்தான் இது நடக்கிறது. 2015-ம் ஆண்டு பஞ்சாயத்துத் தேர்தலில் என் மனைவி போட்டியிட்டார். தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பாக, பெண்களுடன் நான் நடனமாடுவதுபோல ஒரு வீடியோ வெளியாகி, வைரலானது. என்னுடன் நடனமாடிய பெண்களை `பார் டான்ஸர்ஸ்’ என்று சொன்னார்கள். ஆனால், என் மனைவியுடன்தான் நான் நடனமாடினேன். இப்படித்தான் என்னைப் பற்றித் தவறாகக் குற்றம்சாட்டுகிறார்கள். அதேபோலத்தான் இப்போதும் ஒரு வீடியோவை வைரலாக்கியிருக்கிறார்கள்” என்று கொந்தளித்திருக்கிறார், பிரணவ் சாம்பியன். ஊடகங்கள் மீதும் அவர் பாய்ந்திருக்கிறார்.

குன்வர் பிரணவ் சாம்பியன்
குன்வர் பிரணவ் சாம்பியன்

"இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வீடியோவை எங்கிருந்தோ எடுத்து இப்போது வைரலாக்குகிறார்கள். நான் நல்லது செய்யும்போது அதை யாரும் கண்டுகொள்வதில்லை. இது மிகவும் தவறு. ஒருவரைப் பற்றிய கெட்ட விஷயங்களைப் பார்க்கும்போது, அவரைப் பற்றிய நல்ல விஷயங்களையும் பார்க்க வேண்டும். சமீபத்தில், நான் சம்பந்தப்பட்ட ஒரு நல்ல விஷயம் தொடர்பான வீடியோ ஒன்றை போஸ்ட் செய்தேன். அதை ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களால் எனக்கு எதிராகத் திட்டமிட்டுச் சதிசெய்கிறார்கள். இந்தச் சதியில் பலருக்கும் பங்கு இருக்கிறது. எனக்கு எதிரான வீடியோவை வைரலாக்கியதால், அதைப் பார்த்துவிட்டு நூற்றுக்கணக்கான பேர் என்னைத் தொலைபேசியில் அழைக்கிறார்கள். ஊடகத்தின் இந்த நடவடிக்கை மோசமானது. எனக்கெதிரான சதி இது. என் வழக்கறிஞரை அழைத்து சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன்” என்றார் பிரணவ் சாம்பியன்.

குன்வர் பிரணவ் சாம்பியன்
குன்வர் பிரணவ் சாம்பியன்

தாம் தவறு எதுவும் செய்யவில்லை என்றும் அவர் ஆவேசமாகியிருக்கிறார். "நான் வைத்திருந்த துப்பாக்கிகளில் குண்டுகள் எதுவும் இல்லை. அந்தத் துப்பாக்கியை வைத்து யாரையாவது குறிவைத்தேனா? யாரையாவது மிரட்டினேனா? என்ன குற்றம் செய்தேன்... சொல்லுங்கள். மது அருந்துவது ஒரு குற்றமா? லைசென்ஸ் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பது ஒரு குற்றமா?

என் மக்கள் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்தார்கள். நான்கு முறை எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற வைத்துள்ளார்கள். மூன்று முறை என் மனைவி பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். எனவே, மக்களுக்குத்தான் நான் கடமைப்பட்டுள்ளேன். எனவே, ஊடகங்களைப் பற்றியோ, மற்றவர்களைப் பற்றியோ எனக்குக் கவலையில்லை” என்றார் அவர்.

பிரணவ் சாம்பியன் தன் சொகுசு வாகனத்துக்கு வி.ஐ.பி நம்பர் வாங்குவதற்காக, ரூ.5.5 லட்சம் செலவு செய்துள்ளார் என்கிற செய்தியும் சர்ச்சையாகியிருக்கிறது. `0001’ என்ற பதிவு எண்ணை வாங்குவதற்காக அவ்வளவு பெரிய தொகையை அவர் கொடுத்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ``வி.ஐ.பி நம்பர் வாங்குவற்கு இவ்வளவு பெரிய தொகையை டேராடூன் வட்டாரத்தில் யாரும் இதுவரை செலவுசெய்ததில்லை” என்று கூறியுள்ளனர்.

`சஸ்பெண்டு செய்தும் பயமில்லை!'- துப்பாக்கியுடன் நடனமாடும் சர்ச்சை பா.ஜ.க எம்.எல்.ஏ

கடைசியாக ஒரு தகவல். குண்டுகள் இல்லாத துப்பாக்கிகளை வைத்துக்கொண்டுதான் ஆடினேன் என்றும் சொல்லும் அந்த எம்.எல்.ஏ-வின் மகன் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களைக் குவிக்கும் ஒரு சாம்பியன். அவரின் பெயர் திவ்ய பிரதாப் சிங்.