சபரிமலை விமானநிலையம்: `அரசு நிலத்தை அரசே பணம் கொடுத்து வாங்குகிறது!’ - பா.ஜ.க போர்க்கொடி

`சபரிமலையில் விமானநிலையம் அமைக்க அரசு நிலத்தை அரசே பணம் கொடுத்து வாங்கும்போது, வனத்தை ஏற்கெனவே ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்குச் சாதகமாக அமையும் என்கிறார்’ கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்.
கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்றது சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில். அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை சந்நிதானத்தில் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக பா.ஜ.க உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தின. சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிப்பது குறித்த தீர்ப்பு குறித்து மீண்டும் விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து கேரள அரசு 10 வயதுக்கு மேல், 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பது இல்லை என முடிவு செய்தது. அதன்பிறகே பா.ஜ.க போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்தநிலையில் சபரிமலையில் விமான நிலையம் அமைக்க செறுவள்ளி எஸ்டேட்டின் 2,226.13 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளுக்கு கோட்டயம் கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் கிரீன் ஃபீல்டு விமானநிலையம் அமைக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த நிலையில் செறுவள்ளி எஸ்டேட் அரசுக்கு சொந்தமான நிலம் என்றும், அதைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி அரசு ஊழல் செய்ய முயல்வதாகவும் கேரள பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், ``செறுவள்ளி எஸ்டேட் அரசு நிலம் என்பதற்கான ஆவணங்கள் உள்ளன. அதில், விமான நிலையம் அமைக்க அரசே பணம் கொடுத்து வாங்குவதாகச் சொல்கிறார்கள். அரசு நிலத்தை அரசே பணம் கொடுத்து வாங்கும்போது, வனத்தை ஏற்கெனவே ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு சாதகமாக அமையும். செறுவள்ளி எஸ்டேட் உரிமையாளர் பிலிவர்ஸ் சர்ச் நிர்வாகத்துடன் வெளிநாட்டில் வைத்து ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சபரிமலையில் விமான நிலையம் அமைக்க 700 ஏக்கர் நிலம் போதும். ஆனால், 2,200 ஏக்கர் நிலம் எடுக்க கலெக்டரை தலைமையாக நியமித்துள்ளார்கள். அரசு நிலத்தையே விலைக்கு வாங்கி நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்ய முயல்கிறது. இதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். இல்லையென்றால் பி.ஜே.பி சார்பில் போராட்டம் நடத்துவோம். வனத்துறையை கையில் வைத்திருக்கும் சி.பி.ஐ கட்சி மற்றும் எதிர்கட்சியான காங்கிரஸ் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.

கொரோனா காலத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற ஊழல் மூலம் பணம் சம்பாதிக்க அரசு முயல்கிறது. அரசு பூமி என்பதற்கான ஆவணங்கள் ஏற்கெனவே உள்ளன. கேரள பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் வரும் 27-ம் தேதி நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் விமான நிலையம் தொடர்பான போராட்டங்கள் குறித்து முடிவு செய்வோம்" என்றார்.
சபரிமலை விமான நிலையத்துக்கு எதிராக பா.ஜ.க களம் இறங்கியுள்ளதால் சபரிமலை மீண்டும் போராட்டக்களம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.