Published:Updated:

புதுச்சேரி: எம்.எல்.ஏ தகுதி நீக்கம்; வியூகம் வகுக்கும் பி.ஜே.பி! - கவிழ்கிறதா காங்கிரஸ் ஆட்சி?

புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை

கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்கீழ் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரின் பதவி பறிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் பி.ஜே.பி-யின் மறைமுகத் திட்டம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கட்சித் தாவல் தடைச்சட்டம்:

புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் கட்சியின் பாகூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தவர் தனவேலு. ஆனால், முதல்வர் நாராயணசாமியையும் அவரது தலைமையிலான ஆட்சியையும் தொடர்ந்து விமர்சித்து வந்த எம்.எல்.ஏ தனவேலு, தனது ஆதரவாளர்களுடன் அரசுக்கு எதிராகப் பல்வேறு பேரணிகளை நடத்தினார். ஒருகட்டத்தில் ஆளுநர் கிரண் பேடியைச் சந்தித்து ஆட்சியாளர்கள் மீது ஊழல் புகாரை அளித்ததுடன், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், அவரின் பாப்ஸ்கோ வாரியத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. அதையடுத்து கடந்த ஜனவரி மாதம் அரசு கொறடா அனந்தராமன், சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அளித்த கடிதத்தில், ``தனவேலு எம்.எல்.ஏ கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், ஆளும் காங்கிரஸ் அரசை கலைக்க முயற்சி செய்திருக்கிறார். உண்மைக்குப் புறம்பான பொய்க் குற்றச்சாட்டுக்களைக் கூறி காங்கிரஸ் அரசை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு
தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு

அதனால் அவர் மீது கட்சித்தாவல் தடைச்சட்டம் 43, அட்டவணை 10 மற்றும் யூனியன் பிரதேச சட்டம் 14(1)-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். தனது எம்.எல்.ஏ பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக உயர் நீதிமன்றத்தை அணுகிய தனவேலு எம்.எல்.ஏ, ’எனது விளக்கத்தை முழுமையாகக் கேட்காமல் தன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என்று மனுத்தாக்கல் செய்தார்.

அதிருப்தியில் அமைச்சர் நமச்சிவாயம்:

அதனடிப்படையில் தனவேலு எம்.எல்.ஏ-வின் முழுமையான விளக்கத்துக்குப் பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சபாநாயகருக்கு உத்தரவிட்டிருந்தது உயர் நீதிமன்றம். அதன்படி சபாநாயகர் முன் நேரில் ஆஜரான எம்.எல்.ஏ தனவேலு, தனது வழக்கறிஞர் முன்னிலையில் சாட்சிகளிடம் தான் விசாரணை செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில்தான் நேற்று இரவு, ‘கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்கீழ் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டதாக’ எம்.எல்.ஏ தனவேலுக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து கடிதம் அனுப்பியிருக்கிறார். அதையடுத்து அந்தத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

`எந்த அடிப்படையிலும் கேள்வி எழுப்ப முடியாது!' -நாராயணசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த கிரண்பேடி #CAA

புதுச்சேரியில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினார் முதல்வர் நாராயணசாமி. ஆனால், தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதும் முன்னணித் தலைவர் அனைவரும் முதல்வர் பதவிக்கு அடித்துக்கொள்ள, தனது டெல்லி லாபியின் மூலம் முதல்வரானார் நாராயணசாமி. அதிருப்தியடைந்த நமச்சிவாயத்தை சமாதானப்படுத்துவதற்காகப் பசையுள்ள துறைகளான பொதுப்பணி மற்றும் கலால் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டன. ஆனாலும், தற்போது வரை அவர் பட்டும்படாமலும்தான் இருந்துவருகிறார்.

அதேபோல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், யூனியன் பிரதேசத்தில் யாருக்கு அதிகாரம் என்ற விவகாரத்தில் கிரண் பேடிக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகியவர் லட்சுமி நாராயணன். சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்டதால், அந்தப் பதவி லட்சுமி நாராயணனுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரியல் எஸ்டேட் தொழில் கோலோச்சிவிட்டு கடந்த தேர்தலில் காங்கிரஸில் கட்சியில் சீட் வாங்கி எம்.எல்.ஏ-வாகி, துணை சபாநாயகரான சிவக்கொழுந்துவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது. இந்த அதிருப்தியில் கட்சி மற்றும் ஆட்சி நடவடிக்கைகளில் ஒதுங்கியிருக்கிறார் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

இந்த வரிசையில் நெட்டப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ விஜயவேணி, ஊசுடு தொகுதியின் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான், மங்களம் தொகுதி எம்.எல்.ஏ பாலன், தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் தனவேலு போன்றவர்கள் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களாகக் கூறப்பட்டனர். காங்கிரஸ் ஆட்சி எங்கிருந்தாலும் அதைக் கட்டம்கட்டிக் கவிழ்த்துவிடும் பி.ஜே.பி-யின், கவனம் புதுச்சேரி மீது திரும்பியதாக சொல்லப்படுகிறது.

30 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 3 நியமன எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆட்சி அமைப்பதற்கு 17 எம்.எல்.ஏ-க்கள் தேவை. காங்கிரஸ் 15, தி.மு.க 3, சுயேட்சை 1 என 19 எம்.எல்.ஏ-க்களுடன் ஆட்சியில் இருக்கிறது காங்கிரஸ் கட்சி. எதிரணியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் 7, பா.ஜ.க நியமன எம்.எல்.ஏக்கள் 3, அ.தி.மு.க 4 என 14 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். அதனால் எதிரணியில் இருந்து 3 எம்.எல்.ஏ-க்களை இழுத்து ரங்கசாமி ஆட்சி அமைத்துவிடுவார் என்று நான்கு வருடங்களாகப் பேசிப் பேசி ஓய்ந்துவிட்டனர் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க மற்றும் பி.ஜே.பி தரப்பினர். ஆனால், தற்போது எதிரணியான காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை கூடியிருப்பதால் தற்போது மீண்டும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறது பி.ஜே.பி.

முன்னாள் முதல்வர் ரங்கசாமி
முன்னாள் முதல்வர் ரங்கசாமி

காங்கிரஸ் தரப்பில் இருந்து எம்.எல்.ஏ-க்களை மொத்தமாக இழுத்தால் கட்சித்தாவல் தடைச்சட்டத்திலும் தப்பிப்பதுடன், கட்சியையும் உடைத்துவிடலாம் என்று நினைக்கும் பி.ஜே.பி தரப்பு அதற்கான வேலைகளை கடந்த சில நாள்களாக ரகசியமாக முன்னெடுத்து வருகிறது. அப்படி வெளியே வரும் எம்.எல்.ஏ-க்கள் மூலம் காலாவதியான எதாவது ஒரு கட்சிக்கு உயிர் கொடுத்து, அவர்களுடன் கூட்டணி வைத்து ஆட்சியை அமைத்துவிடலாம் என்பதுதான் பி.ஜே.பி-யின் கணக்கு.

நமச்சிவாயத்தை முதல்வராக்க அவரின் மாமனாரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் கூறுகிறார்கள். இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்கும் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு தொடர்ந்து தூது அனுப்பி வரும் எதிரணி, எம்.எல்.ஏ-க்களிடமும் தொடர் பேரத்தை நடத்தி வருகிறதாம். புதுச்சேரி அரசின் இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இதுவரை அனுமதி வழங்காமல் காலதாமதப்படுத்தி வருவதற்கும் இதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்த மூவ்கள்தான் எம்.எல்.ஏ தனவேலுவின் தகுதி நீக்கத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அதிருப்தியாக இருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கு எச்சரிக்கை கொடுத்திருப்பதுடன், எதிரணிக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறோம் என்று குதூகலிக்கின்றனர் காங்கிரஸ் தொண்டர்கள். அதேபோல காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களான விஜயவேணி மற்றும் தீபாய்ந்தான் இருவரையும் பேரம் பேசியக் குற்றச்சாட்டில் ஏற்கெனவே சிக்கியிருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபால் மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் இருவரின் தனவேலு எம்.எல்.ஏ-வைப் போன்று கணக்கு தீர்த்துவிட்டால், எதிரணி எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையும் குறைத்துவிடலாம் என்று ஆலோசனை நடத்தி வருகிறதாம் காங்கிரஸ் தரப்பு.

அமைச்சர் நமச்சிவாயம்
அமைச்சர் நமச்சிவாயம்

``காங்கிரஸ் கட்சிக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக சபாநாயகர் மீதே நம்பிக்கை இல்லாத தீர்மானத்தைக் கொண்டு வரும் முடிவில் இருக்கிறதாம் எதிரணியான என்.ஆர்.காங்கிரஸ். அப்படியான சூழல் ஏற்பட்டு, காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கும். 4 வருட காங்கிரஸ் ஆட்சியில் பொதுமக்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், தொண்டர்கள் என அனைவருமே அதிருப்தியில்தான் இருக்கிறார்கள்.

அதனால்தான் பி.ஜே.பி-யின் ஆட்சிக் கவிழ்ப்பு மூவ்களைக் கண்டு அஞ்சுகிறது காங்கிரஸ். அதன் வெளிப்பாடுதான் இந்தப் பதவி பறிப்பு. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான தனவேலுவை காங்கிரஸ் தரப்புதான் கடந்த தேர்தலில் வலுக்கட்டாயமாக இழுத்துவந்து தேர்தலில் நிறுத்தியது. தற்போது அவரை தகுதி நீக்கம் செய்து சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களையே மிரட்ட நினைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு உண்மையில் இது போதாத காலம்தான்” என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்... தமிழகத்தின் 11 எம்.எல்.ஏ-க்கள் பதவி தப்புமா?

ஆட்சி முடிய ஆறு மாதங்களே இருக்கும் நிலையில் சூடுபிடித்திருக்கிறது புதுச்சேரி அரசியல்.

அடுத்த கட்டுரைக்கு