Published:Updated:

தஞ்சை: `ரூ.20,000 கொடுத்தால்தான் ஒப்பந்தப் பணி!’ - கொதிக்கும் லேப் டெக்னீசியன்கள்

தஞ்சை மாவட்ட துணை இயக்குநர் ரவீந்திரன்
தஞ்சை மாவட்ட துணை இயக்குநர் ரவீந்திரன் ( ம.அரவிந்த் )

லேப் டெக்னீசியன்களிடம், அவர்களைப் பணிக்கு அமர்த்துவதற்கு சுகாதாரப் பணிகள் தஞ்சை மாவட்டத் துணை இயக்குநர் ரவீந்திரன், ரூ.20,000 லஞ்சம் வாங்குவதாகப் புகார் எழுந்துள்ளது.

தஞ்சாவூரில் ஒப்பந்த அடிப்படையில் லேப் டெக்னீசியன்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு வருகின்றனர். ரூ 20,000 லஞ்சம் வாங்கி கொண்டே பணிக்கு அமர்த்தப்படுவதாக சுகாதார பணிகள் மாவட்ட துணை இயக்குநர் மீது எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 சுகாதார பணிகள் அலுவலகம் தஞ்சை
சுகாதார பணிகள் அலுவலகம் தஞ்சை

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் ஒப்பந்தமுறையில் பணி புரியக்கூடிய வகையில் லேப் டெக்னீசியன்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் லேப் டெக்னீசியன்கள் பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பணி புரிய தேர்ந்தெடுக்கப்பட் லேப் டெக்னீசியன்களிடம் அவர்களை பணிக்கு அமர்த்துவதற்கு சுகாதார பணிகள் தஞ்சை மாவட்ட துணை இயக்குநர் ரவீந்திரன் ரூ. 20,000 லஞ்சம் வாங்குவதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தற்போது லேப் டெக்னீசியன் பதவிக்கு அமர்த்தப்பட்ட சிலரிடம் பேசினோம். ``அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் லேப் டெக்னீசியன்கள் தனியார் நிறுவனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிவதற்கு எனச் சுமார் 10 லேப் டெக்னீசியன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுவரை 8 பேர் வரை திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, தாமரங்கோட்டை , அழகியநாயகிபுரம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

சுகாதாரப் பணிகள் அலுவலகம் தஞ்சை
சுகாதாரப் பணிகள் அலுவலகம் தஞ்சை

இன்னும் சிலர் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்படும் நாங்கள், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு தடுப்புக் கழகத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்ல வேண்டும்.

83 டன் போலித்தங்கம்; 2.8 பில்லியன் டாலர் கடன்பெற்ற நிறுவனம்... சீனாவை உலுக்கிய தங்க ஊழல்!

அங்கு சான்றிதழ்களை சரிபார்க்கும் அதிகாரி ஒருவர், அனைத்தையும் செக் செய்துவிட்டு எங்களை ஆற்றுப்பாலம் அருகில் உள்ள சுகாதாரப் பணிகள் மாவட்ட துணை இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பார். அந்த அலுவலகத்தில் அக்கவுன்டன்ட் சூப்பிரண்டாக இருக்கும் சரவணன் என்பவரைப் பார்க்க வேண்டும்.

ரவீந்திரன்
ரவீந்திரன்

அவர் எங்களிடம், `இயக்குநர் ரவீந்திரனுக்கு ரூ. 20,000 லஞ்சம் தர வேண்டும். கொடுத்தால்தான் வேலையில் சேர்வதற்கான ஆணை கொடுக்கப்படும்’ என்பார். `சார், கொரோனா ஊரடங்கால் கையில் சுத்தமாகப் பணம் இல்லை. அதுதவிர நாங்க ஒப்பந்தப் பணிக்குத்தானே எடுக்கப்பட்டிருக்கிறோம்’ எனக் கேட்டால், ஏதாவது காரணத்தைச் சொல்வார். அத்துடன், `இயக்குநர் ரவீந்திரன் அலுவலகத்தில் இல்லை’ எனக் கூறி அடுத்த நாள் வரச் சொல்வார்.

இப்படி அலைய விடுவதால் நாங்களும் வேறு வழியின்றி பணத்தைக் கொடுத்தே பணியில் சேர்ந்திருக்கிறோம். பணம் கொடுத்த பிறகே, எங்களுக்கு பணிக்கான ஆணை கையில் கிடைத்தது’’ என்று புலம்பி வருகின்றனர். இன்னும் சிலர் இந்தப் பணிக்குச் சேர உள்ளனர். அவர்களிடமும் பணம் கேட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பி.டி.ஓ, ஓவர்சீர், இன்ஜினீயர்... ஊராட்சியில் யாருக்கு எவ்வளவு லஞ்சம்? ஆடியோ அதிர்ச்சி!

இது குறித்து துணை இயக்குநர் ரவீந்திரனிடம் பேசினோம். ``தனியார் நிறுவனம் ஒன்றின் மூலமாகத்தான் இவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நாங்கள் பணி ஆணை மட்டுமே வழங்குவோம். இதற்காக யாரிடமும் பணம் வாங்கவில்லை. யாரோ சிலர் தவறான குற்றச்சாட்டை கூறுகின்றனர்’’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு