Published:Updated:

`காய்கறி விற்கும் வாகன ஓட்டிகளிடம் கட்டாய வசூல்?’ - சர்ச்சையில் சிக்கிய புதுக்கோட்டை போலீஸார்

ஆலங்குடி காவல்நிலையம்
ஆலங்குடி காவல்நிலையம்

புதுக்கோட்டையில், வாகனத் தணிக்கை என்ற பெயரில்... கட்டாயப்படுத்தி பணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் பேரில், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 போலீஸாரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க மத்திய மண்டல ஐஜி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அத்தியாவசிய தேவை தவிர்த்து பொதுமக்கள் வெளியே செல்லக்கூடாது என்று போலீஸாரால் அறிவுறுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

குறிப்பாக, அத்தியாவசிய தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருள்களை ஏற்றுவதற்கான வாகனங்களை இயக்குவதற்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையே, அத்தியாவசிய தேவை தவிர்த்து, வெளியே தேவையின்றி சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீஸாரால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செங்குட்டுவன், தலைமைக் காவலர் கதிரேசன், காவலர் ஹலிபுல்லா ஆகியோர், வாகனத் தணிக்கை என்ற பெயரில், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களை மடக்கி, கட்டாயப்படுத்தி பணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் 3பேரையும் காத்திருப்போர் பட்டியலில் வைக்குமாறு மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

ஆலங்குடி காவல்நிலையம்
ஆலங்குடி காவல்நிலையம்

இதற்கிடையே, கடந்த 2018ல் கஜா புயல் அடித்தபோது, புயலால் சாய்ந்த தென்னை மரங்கள் உள்ளிட்ட மரங்களை எடுத்துச்சென்ற வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் செங்குட்டுவன் பணம் வசூலித்ததாகவும், அதற்காக துறைரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இதுபோன்று அடுத்தடுத்து புகார்கள் வந்ததால்தான் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

`தந்தை மூலம் மகளுக்கு பரவியது’ - சென்னை பெண் டாக்டரின் கொரோனா ட்ராவல் ஹிஸ்ட்ரி #Corona

இதுபற்றி உதவி ஆய்வாளர் செங்குட்டுவனிடம் கேட்டபோது, ``என் மீது களங்கம் ஏற்படுத்துவதற்காகத் தவறுதலாகப் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. என்னுடைய தரப்பு விளக்கத்தைக் கொடுத்துவிட்டேன். புகார் கொடுத்தவர்கள் காய்கறி வாங்க வந்ததாகக் கூறியுள்ளனர். ஆனால், வாகனச் சோதனையில் விசாரித்தபோது, அவர்கள் கடலை வாங்கச் சென்றதாகத்தான் கூறினர். அதனால், ஸ்பாட் ஃபைன் ரூ.500 போட்டு ரசீது கொடுத்து, இனிமேல் வரக்கூடாது என்று கண்டித்து அனுப்பினோம். வாகன ஓட்டிகளைக் கட்டாயப்படுத்தி யாரிடமும் பணம் பெறவில்லை. என் மீது தவறான குற்றச்சாட்டை வைத்து எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர்' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு