Published:Updated:

`அடுத்தடுத்து கைதாகும் இடைத்தரகர்கள்!' - விஸ்வரூபமெடுக்கும் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரம்

டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வு முறைகேடு விவகாரம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பர் மாதத்தில் டி.என்.பி.எஸ்.சி, குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகம் முழுவதும் 5,575 மையங்களில் 16,29,865 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்தாண்டு நவம்பரில் வெளியிடப்பட்டன. அதையடுத்து தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டது,

`இது முதல் தடவையல்ல; தொடரும் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு!' -அதிர்ச்சிப் பின்னணி
டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்
டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய பலர் தரவரிசைப் பட்டியலில் அதிகமாக இடம்பிடித்திருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக தரவரிசைப் பட்டியலின் முதல் 100 இடங்களில் 39 பேர் அந்த இரண்டு மையங்களில் தேர்வெழுதியவர்கள் என்பது தெரியவந்தது. டி.என்.பி.எஸ்.சி இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸாரின் உதவியை நாடியது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில், 99 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது. அவர்களுக்கு வாழ்நாள் தடைவிதித்த டி.என்.பி.எஸ்.சி, தேர்வு முறையிலும் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று அறிவித்திருக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு விவகாரம் தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீஸார் சிவகங்கை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர் என 5 மாவட்டங்களில் நடத்தி வருகிறார்கள்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு தரவரிசை பட்டியல்
டி.என்.பி.எஸ்.சி தேர்வு தரவரிசை பட்டியல்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக இரண்டு வட்டாட்சியர்கள் உள்பட மொத்தம் 10 பேரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் சென்னையில் விசாரணை நடத்தி வருகின்றனர். கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜிடம் நேற்று இரவு முழுவதும் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில், பள்ளிக் கல்வித்துறை அலுவலக உதவியாளர் ரமேஷ், எரிசக்தி துறை உதவியாளர் திருக்குமரன், மற்றும் தேர்வு எழுதிய நிதிஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேபோல், கடலூரைச் சேர்ந்த ராஜசேகர் என்ற இடைத்தரகரைக் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, நெல்லை மாவட்டம் விஜயாபதியைச் சேர்ந்த ஐய்யப்பன் என்பவர் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார். அரசியல் புள்ளிகள் சிலருடன் நெருக்கமாக ஐய்யப்பன் இருந்து வருவதாகவும், இடைத்தரகராக அவர் செயல்பட்டார் என்றும் கூறப்படுகிரது.

`அந்த' 52 விடைத்தாள்கள்; சிக்கிய வட்டாட்சியர்கள்! -ஆய்வில் அதிர்ந்த டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விசாரணையில், வி.ஏ.ஓ தேர்வில் முறைகேடு செய்து உறவினர்கள் இருவருக்கு உதவியதாக அவர் போலீஸாரிடம் தெரிவித்ததாகச் சொல்கிறார்கள். மேலும், குரூப் - 2 தேர்வில் பெண் ஒருவருக்கு உதவியதாகவும் அவர் போலீஸாரிடம் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டி.என்.பி.எஸ்.சி
டி.என்.பி.எஸ்.சி

குரூப் - 4 தேர்வில் மாணவர் ஒருவரிடமிருந்து ரூ.12 லட்சம் பெற்றுக்கொண்டு உதவியதாகவும் அவர் போலீஸாரிடம் கூறியிருக்கிறார். இதனால், குரூப் - 4 தேர்வைத் தாண்டியும் சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு