Election bannerElection banner
Published:Updated:

கேரளா: `கேன்சர் சென்டருக்கு கோல்வால்கர் பெயர்; சர்ச்சையைத் தவிருங்கள்!’ - பினராயி விஜயன் கோரிக்கை

பினராயி விஜயன் கோரிக்கை
பினராயி விஜயன் கோரிக்கை

`ஆர்.ஜி.சி.பி புதிய சென்டருக்கு `ஸ்ரீ குருஜி மாதவ சதாசிவ கோல்வால்கர் நேஷனல் சென்டர் ஃபார் காம்ப்ளக்ஸ் டிசீஸ் இன் கேன்சர் அண்ட் வைரல் இன்ஃபெக்‌ஷன்’ எனப் பெயர் வைப்பதாக மீடியாக்கள் மூலம் அறிந்தேன்’ - பினராயி விஜயன்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலுள்ள ராஜீவ் காந்தி சென்டர் ஃபார் பயோடெக்னாலஜியின் (ஆர்.ஜி.சி.பி) புதிய கேம்பஸுக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் இரண்டாம் தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தத் தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வெளியிட்டிருக்கிறார். ஆர்.ஜி.சி.பி நடத்திய இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், ``திருவனந்தபுரம் ஆக்குளத்திலுள்ள கேம்பஸ் உடனடியாகத் திறக்கப்படவிருக்கிறது. `ஸ்ரீ குருஜி மாதவ சதாசிவ கோல்வால்கர் நேஷனல் சென்டர் ஃபார் காம்ப்ளக்ஸ் டிசிஸ் இன் கேன்சர் அண்ட் வைரல் இன்ஃபெக்‌ஷன்' என்ற பெயரில் அது அழைக்கப்படும். கேன்சர் மருந்து குறித்த பரிசோதனை, நோய் எதிர்ப்பு ஆராய்ச்சி, ஸ்டெம் செல் மாற்றுதல் உள்ளிட்ட பல வசதிகள் இங்கு இருக்கின்றன" என்றார்.

ஹர்ஷவர்தன், மத்திய அமைச்சர்
ஹர்ஷவர்தன், மத்திய அமைச்சர்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தொடங்கிய டாக்டர் ஹெட்கேவார் மறைவுக்கு பிறகு இரண்டாவது தலைவராக இருந்தவர் `குருஜி’ என அறியப்படும் மாதவ சதாசிவ கோல்வால்கர். கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருந்தபோதுதான் அரசியல் கட்சி போன்ற பல துறைகளுக்குமான கிளை அமைப்புகளை உருவாக்கினார். ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பெயர் கேன்சர் சென்டருக்கு வைக்கப்பட்டதற்கு இடதுசாரி அமைப்புகளும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

இது குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனுக்கு கேரள முதல்வர் பினராயி வியஜன் எழுதியிருக்கும் கடிதத்தில், ``திருவனந்தபுரத்திலுள்ள ஆர்.ஜி.சி.பி புதிய சென்டருக்கு `ஸ்ரீ குருஜி மாதவ சதாசிவ கோல்வால்கர் நேஷனல் சென்டர் ஃபார் காம்ப்ளக்ஸ் டிசிஸ் இன் கேன்சர் அண்ட் வைரல் இன்ஃபெக்‌ஷன் எனப் பெயர் வைப்பதாக மீடியாக்கள் மூலம் அறிந்தேன். ஆரம்பத்தில் மாநில அரசால் நடத்தப்பட்ட ஆர்.ஜி.சி.பி-யை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காகவும், சர்வதேசத் தரத்தை அடையும் மையமாக மாறும் என்ற நோக்கத்துடனும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே, நீங்கள் முடிவு செய்திருக்கும் பெயரை கைவிட்டுவிட்டு, இந்தியாவின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரின் பெயரை இந்த நிறுவனத்துக்குச் சூட்டி, சர்ச்சையை தவிர்க்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் இரண்டாவது தலைவர் கோல்வால்கர்
ஆர்.எஸ்.எஸ் இரண்டாவது தலைவர் கோல்வால்கர்

கேரள மாநில காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இது பற்றி ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ``நவீன இந்தியாவை உருவாக்க அடித்தளம் இட்டவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. அவரது நினைவைத் தாங்கி நிற்கும் நிறுவனத்தின் இரண்டாம் கேம்பஸுக்கு, ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பெயர் சூட்டுவதை ஏற்க முடியாது.

மத துவேஷம், பாசிசம் ஆகியவற்றை முகமாகக்கொண்ட, இந்தியாவில் நிறைய வர்க்க மோதல்களின் பின்னால் இருப்பதாக குற்றம்சாட்டப்படுவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. அப்படிப்பட்ட ஓர் அமைப்பின் தலைவர் பெயரை, பெருமைவாய்ந்த அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்துக்குச் சூட்டுவது முரணானது. இது பிரிவினையை வளர்க்கவே உதவும். நாட்டின் அறிவியல் தொழில்நுட்பத்தில் என்ன பங்களிப்பு செய்தார் என்று கோல்வால்கர் பெயரை இந்த நிறுவனத்துக்கு சூட்டுகிறீர்கள் என மத்திய அரசு விளக்க வேண்டும்" என்றார்.

அதிக அளவில் போட்டியிடும் இளம் பெண் வேட்பாளர்கள்... களைகட்டும் கேரள உள்ளாட்சித் தேர்தல்!

அதே சமயம், சிலரை திருப்திபடுத்துவதற்காகவே சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குருஜி கோல்வால்கரின் பெயருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும். பிரிவினையை ஏற்படுத்தி நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் பிடிக்க சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் தந்திரம் செய்கிறது எனவும் கேரள பா.ஜ.க தலைவர் சுரேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு