Published:Updated:

`தகரத் தடுப்புகள்... இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?' - கொரோனா பெயரில் அரங்கேறும் கொடுமைகள்

கொரோனா பெயரில் நடக்கும் கொடுமைகள்
கொரோனா பெயரில் நடக்கும் கொடுமைகள் ( வி. சதீஸ்குமார் )

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும், கொரோனாவின் பெயரைச் சொல்லி பல கொள்ளைகளும் கொடுமைகளும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

என்னங்க சார் நடக்குது..?

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் மருத்துவமனைகளிலோ அல்லது கொரோனா கண்காணிப்பு முகாம்களிலோ சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள். இதுதவிர, எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் தொற்று கண்டறியப்படும் நபர்கள், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் வசதி இருப்பின் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளவும் அனுமதியளிக்கப்படுகிறது.

தனிமைப்  படுத்தப்பட்டவரின் வீடு
தனிமைப் படுத்தப்பட்டவரின் வீடு
GCC

இப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்பவர்களின் வீடு, தகரம் அல்லது மரக்கட்டையால் அடைக்கப்படுகிறது. இப்படியான நடவடிக்கையில் பல கொடுமைகளும், கொடூரங்களும் நடந்துவருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.

சென்னை மடிப்பாக்கம், பத்மாவதி நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் தனியார் தொலைக்காட்சி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அந்த வீட்டிலிருந்து யாரும் வெளியே செல்ல முடியாதபடி தகரத்தால் வீட்டின் வாசல் அடைக்கப்பட்டது. அந்தக் குடியிருப்பில் வசிக்கும் மற்றொரு நபருக்கு உடல்நலம் சரியில்லாமல் போக, அவர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவை உருவானது. ஆனால், வெளியில் செல்வதற்கு வழியில்லாததால், அந்தப் பகுதி மாநகராட்சி அதிகாரிக்கு போனில் அழைத்துப் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர்களிடமிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை.

தனிமைப்  படுத்தப்பட்டவரின் வீடு
தனிமைப் படுத்தப்பட்டவரின் வீடு
GCC

அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில், அந்த நபர் தகரத்தின் அருகிலிருக்கும் சிறிய கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து, மருத்துவமனைக்குச் சென்று வந்திருக்கிறார். அதற்கு அடுத்த நாள் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து, `நீங்கள் தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறிவிட்டீர்கள். இன்னொரு முறை இப்படிச் செய்தால் உங்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மெசேஜ் வந்திருக்கிறது.

உதவி கேட்டு அழைத்தபோது கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, வெளியில் சென்று வந்த பிறகு `விதிகளை மீறிவிட்டீர்கள்’ என மெசேஜ் அனுப்புவது என்ன மாதிரியான அணுகுமுறை... நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற சந்தேகம் எழுகிறது.

கொரோனாவைவிட இது பெரிய கொடுமை சார்!

சென்னை குரோம்பேட்டை, புருஷோத்தமன் நகரில் பாதல் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் வங்கி ஊழியர் ஒருவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் 14 நாள்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவர் வீடு திரும்பியதும், அந்த வீட்டைவிட்டு யாரும் வெளியே வர முடியாத வண்ணம் வீட்டின் வாசல் தகரத்தால் அடைக்கப்படுகிறது.

வீட்டின் கதவில் தகரமடிக்கும் நகராட்சி ஊழியர்கள்
வீட்டின் கதவில் தகரமடிக்கும் நகராட்சி ஊழியர்கள்
வி. சதீஸ்குமார்

அந்த வீட்டில் வயதானவர்கள், உடல்நலம் சரியில்லாதவர்கள் என ஆறு பேர் வசிக்கிறார்கள். சுத்தமாக வெளியுலகத் தொடர்பில்லாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். அவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்ட பிறகும் நகராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. இந்தச் செய்தி தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறிய பிறகு, உடனடியாக அடைக்கப்பட்ட தகரத்தை நீக்க உத்தரவிட்டிருக்கிறது நகராட்சி நிர்வாகம்.

அடேங்கப்பா... என்ன ஒரு புத்திசாலித்தனம்..!

சென்னை அருகிலுள்ள பம்மல், அண்ணாநகர் பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுகிறது. அவர் மருத்துவமனைக்குச் செல்கிறார். அதைத் தொடர்ந்து அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு முழுவதுமே தகரத்தால் யாரும் வெளியே வர முடியாத வண்ணம் அடைக்கப்படுகிறது. இந்தத் தகவலை பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதில் கொடுமை என்னவென்றால், தொற்று உறுதி செய்யப்பட்டவரும் அங்கு இல்லை. அவர் வசித்த வீட்டில் அவரைத் தவிரவும் வேறு யாருமே இல்லை. பிறகு யாருக்காக இந்தத் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் தகர வேலி?

எல்லாமே காசு தான்!

தாம்பரம், கேம்ப் ரோடு, கீழ்கட்டளைப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீட்டை தகரத்தால் அடைப்பதற்கு 5,000-7,000 ரூபாய் வரை அந்த வீட்டில் குடியிருப்பவர்களிடமே கேட்கப்பட்டிருக்கிறது. `இதற்கான தொகையை நீங்கள்தான் தர வேண்டும்’ என்று வந்தவர்கள் பணம் கேட்டு நிர்பந்தம் செய்திருக்கிறார்கள்.

தெருவைத் தகரத்தால் அடைக்கும் மாநகராட்சி ஊழியர்கள்.
தெருவைத் தகரத்தால் அடைக்கும் மாநகராட்சி ஊழியர்கள்.
கே.ஜெரோம்

இத்தனைக்கும் அடைக்கப்படும் தகரங்கள் அல்லது மரங்கள் பெரும்பாலும் வாடகைக்கு எடுக்கப்படுபவைதான். இதற்கான தொகை அந்தந்தப் பகுதி நகராட்சி அல்லது மாநகராட்சி சார்பில் கொடுக்கப்பட்டு விடுகிறது. மேற்கொண்டு இப்படி வாங்கப்படும் தொகை யார் பாக்கெட்டுக்குச் செல்கிறது என்பது தெரியவில்லை. ஆனால், ஒருவரின் பாக்கெட் மட்டுமல்லாமல் பலரின் பாக்கெட்டுகளுக்குப் பிரிந்து செல்வதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

கொரோனா மட்டுமா? இந்த 12 உலகளவிலான பிரச்னைகளும் இதே 2020-ல்தான் நிகழ்ந்தன! #2020SoFar

இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?

ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் அல்லது ஒரு தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதும், சம்மந்தப்பட்ட நபரின் வீடு தனிமைப்படுத்தப்படுவதும், அவர்களை கொரோனா பரிசோதனை செய்ய அழைத்துச் செல்வதும் சரி. ஆனால், அந்தத் தெரு முழுவதையும் அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு முழுவதையும் அடைப்பது எந்தவிதத்தில் நியாயம்?

தகரத்தால் அடைக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு.
தகரத்தால் அடைக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு.

இப்படி ஒரு வீட்டுக்காக அடைக்கப்படும்போது, அருகில் வசிப்பவர்களுக்கு அந்த வீட்டுக்காரர்களின் மேல்தான் எரிச்சல் உண்டாகும். தொற்றிலிருந்து சரியாகி, குணமடைந்து வீடு திரும்பும்போது அக்கம்பக்கத்தினர் பேசும் பேச்சில் மனமுடைந்துபோகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களின் பேச்சிலிருந்து தப்பிக்க வீடுகளை காலி செய்துவிடுகிறார்கள் அல்லது காலி செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் எல்லோருக்கும் இ-பாஸ் என்றாகிவிட்டது, மதுபான கடைகளையும் திறந்தாகிவிட்டது. டாஸ்மாக் கூட்டத்தில் பரவாத கொரோனாவா, இப்படி ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்குப் பரவப் போகிறது? இன்னும்  இது போன்ற தேவையற்ற அல்லது லாபக் கணக்குடன்கூடிய நடைமுறைகளால் கஷ்டப்படப்போவது என்னமோ அப்பாவி மக்கள்தான்.

அடுத்த கட்டுரைக்கு