Published:Updated:

காவல் நிலையத்தில் டிக் டாக்; 100 வீடியோக்கள்! -அதிர்ச்சிகொடுத்த சென்னை எஸ்ஐ

காவல் நிலையத்தில் எடுக்கப்பட்ட டிக்டாக் வீடியோ
காவல் நிலையத்தில் எடுக்கப்பட்ட டிக்டாக் வீடியோ

சென்னையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டரின் டிக் டாக் வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. காவல் நிலையத்திலேயே டிக்டாக் வீடியோ எடுக்கப்பட்டுள்ளதால், அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவரும் எஸ்ஐ ஒருவர், டிக்டாக் வீடியோ பிரியராக இருந்துள்ளார். அதனால் ஏராளமான வீடியோக்களை டிக்டாக்கில் பதிவு செய்துவந்துள்ளார். தற்போது இந்த வீடியோக்கள், சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

டிக்டாக்
டிக்டாக்

கொரோனா ஊரடங்கு காரணமாக, காவல்துறையினர் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிவருகின்றனர். இந்தச் சூழலில், சென்னையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், காவல் நிலையத்தில் டூயூட்டியில் இருக்கும்போதே வீடியோக்களை எடுத்து டிக்டாக்கில் பதிவு செய்துவந்துள்ளார். அவரின் டிக்டாக் ஐடி-யில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளன. டிக் டாக்கில் வீடியோக்களைப் பதிவு செய்துள்ள எஸ்ஐ, காவல் துறையின் சீருடையில் இல்லை.

ஆனால், இரட்டை அர்த்தங்கள் கொண்ட சினிமா பாடல்களுக்கு அவர் டிக் டாக் செய்துள்ளார். அந்த வீடியோக்களைப் பார்க்கும்போது முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. தமிழக காவல் துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், இப்படி நடந்துகொள்ளலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக காவல்துறையில் காவலராக பணிக்குச் சேர்ந்த அவர், பதவி உயர்வு மூலம் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருகிறார்.

டிக்டாக்
டிக்டாக்

சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரின் டிக்டாக் வீடியோக்களைப் பார்த்த உயரதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டரிடம் வீடியோ குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில், வீடியோ விவகாரம் கமிஷனர் அலுவலகம் வரை சென்றுள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிக்டாக்கில் வீடியோக்களைப் பதிவுசெய்த சப்-இன்ஸ்பெக்டர் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் சிலரிடம் கேட்டதற்கு, ``காவல்துறையில் பணியாற்றுபவர்கள் தங்களின் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். பொது இடங்களிலும் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும். ஆனால், டிக் டாக்கில் வீடியோக்களைப் பதிவுசெய்த சப்-இன்ஸ்பெக்டர், சினிமா பாடல்களுக்கு ஏற்ப சைகை செய்தும், நடனமாடியும் வீடியோக்களைப் பதிவுசெய்துள்ளார். இதில் சில வீடியோக்கள் காவல் நிலையத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது. அதனால் நிச்சயம் அவர்மீது நடவடிக்கை பாயும்" என்றனர்.

காவல் நிலையத்தில் எடுக்கப்பட்ட டிக்டாக் வீடியோ
காவல் நிலையத்தில் எடுக்கப்பட்ட டிக்டாக் வீடியோ
லைக்ஸ்க்காக விபரீத டிக்டாக் வீடியோ... பதறிய உறவினர்கள்! - புதுக்கோட்டை கலாட்டா

சம்பந்தப்பட்ட சென்னை சப்-இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்க அவரின் செல்போன் நம்பருக்கு பல தடவை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. அவரின் விளக்கத்தையும் உரிய பரிசீலனைக்குப் பிறகு வெளியிட தயாராக இருக்கிறோம்.

டிக்டாக்கில் வீடியோக்களைப் பதிவுசெய்வது தனிப்பட்ட மனித சுதந்திரம் என்றாலும், காவல் நிலையத்துக்குள் டிக்டாக் வீடியோக்கள் எடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இந்த சப்-இன்ஸ்பெக்டர்.

ஏற்கெனவே காவல் சீருடையில் டிக்டாக் வீடியோக்களைப் பதிவு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு