Published:Updated:

ஓட்டம் பிடித்த மின்மயான ஊழியர்கள்; அலறிய அம்பத்தூர்.. ஆந்திர டாக்டர் தகன விவகாரத்தில் நடந்தது என்ன?!

கொரோனா நோயாளி கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸ்
கொரோனா நோயாளி கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸில் பிரத்யேகக் கவச உடைகளை அணிந்து கொண்டு மருத்துவ குழு மின் மயானத்திற்கு உள்ளே உடலை கொண்டு வந்ததை பார்த்து அதிர்ந்த மின் மயான ஊழியர்கள் அங்கிருந்து அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்திருக்கின்றனர்.

சென்னை வானகரம் அப்பலோ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நெல்லூர் மருத்துவர் உயிரிழந்ததை அடுத்து அவர் உடலை தகனம் செய்வதற்கு அம்பத்தூர் மின் மயானத்திற்கு கொண்டுவதை பார்த்து அந்த மயானத்தின் ஊழியர்கள் பயந்து அலறி ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் 56 வயது நபர். இவருக்கும், இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு நெல்லூரில் சிகிச்சை எடுத்து வந்தனர். திடீரென மருத்துவருக்கு உடல்நிலை மேலும் மோசமடையவே மேல் சிகிச்சைக்காக வானகரம் அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அங்கு மருத்துவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.

அவரது உறவினர்கள் உடலை சென்னையிலேயே தகனம் செய்ய முடிவெடுத்து, மருத்துவமனையில் தெரிவித்தனர். வானகரத்தில் இருந்து அம்பத்தூர் மின் மயானத்திற்கு மருத்துவமனை ஊழியர்கள் உடலை தகனம் செய்ய கொண்டு வந்துள்ளனர். ஆம்புலன்ஸில் பிரத்யேக கவச உடைகளை அணிந்து கொண்டு மருத்துவ குழு மின் மயானத்திற்கு உள்ளே உடலை கொண்டு வந்ததை பார்த்து அதிர்ந்த மின் மயான ஊழியர்கள் அங்கிருந்து அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்திருக்கின்றனர்.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

மயான ஊழியர்கள் ஓட்டம் பிடித்ததையடுத்து தகவல் அறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள் உடலை அங்கு எரிக்க எதிர்ப்பு தெரிவிக்க, இன்னொரு புறம் மின் மயான ஊழியர்கள் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து அங்கு விரைந்த மண்டல சுகாதாரத் துறையினர், மக்கள் கூட்டத்தை கலைத்து விட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்து பின் ஆம்புலன்ஸில் உடலை ஏற்றி மீண்டும் மருத்துவமனைக்கே திருப்பி அனுப்பினர். “அம்பத்தூர் பகுதியில் இதுவரை யாருக்கும் கொரோனா நோய் தொற்று இல்லை. அதனாலேயே எங்களுக்கு இது அச்சத்தை அளித்தது” என்று அங்கிருக்கும் பொதுமக்களில் ஒருவர் கூறினார்.

`ரோந்து வரும் போகாங் பேய் பொம்மைகள்!’ - சமூக இடைவெளியில் அசத்தும் இந்தோனேசிய கிராமம்

இது குறித்து அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிதம்பர முருகேசன் அவர்களிடம் கேட்ட போது "ஆந்திராவை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை வானகரம் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இறந்துள்ளார். வானகரம் பகுதியில் போதிய மின் தகன வசதிகள் இல்லாததால் மருத்துவமனை நிர்வாகம் முறையாக சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்று அருகில் உள்ள அம்பத்தூர் மின் மயானத்திற்கு ஆம்புலன்ஸில் கொண்டு வந்துள்ளது. ஆம்புலன்ஸில் இருந்து உடலை மயானத்தில் இறக்கி விட்டு உடன் இறந்த மருத்துவரின் உறவினர் ஒருவரை விட்டுவிட்டுதான் அங்கிருந்து மருத்துவமனை ஊழியர்கள் கிளம்பிச் சென்றிருக்கின்றனர்.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

மருத்துவக்குழு கவச உடைகளுடன் உடலை இறக்கியதை கண்ட மின் மயான ஒப்பந்த ஊழியர்கள் கொரோனா நோயாளி என்பதை அறிந்து கொண்டு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்து எங்களிடம் வந்து புகார் அளித்தனர். அதற்குள் மண்டல சுகாதார துறையினரும் தகவல் தெரிந்து சம்பவ இடத்துக்கு வந்தனர். பொது மக்கள் உடலை அம்பத்தூர் மின் மயானத்தில் தகனம் செய்வதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இறந்த மருத்துவரின் உடலை மீண்டும் ஆம்புலன்ஸில் ஏற்றி அப்பலோ மருத்துவமனைக்கே அனுப்பி விட்டோம்" என்றார்.

கொரோனா தொற்றால் சென்னையில் இறந்த ஆந்திர மாநில டாக்டரின் சடலத்தை தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் என்ன செய்வது என்று சுகாதாரத்துறையினரும் உறவினர்களும் திகைத்தனர். இந்தச் சமயத்தில் டாக்டரின் சொந்த ஊருக்கு கொண்டு செல்வதிலும் சிரமங்கள் இருந்ததால் சென்னையிலேயே தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த இடத்தை அதிகாரிகள் ரகசியமாக வைத்திருந்தனர். ஏற்கெனவே ஊரடங்கு உத்தரவால் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லை. இருப்பினும் பொதுமக்கள் தூங்கியபிறகு மருத்துவமனையிலிருந்து டாக்டரின் சடலம் போரூர் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கொரோனா தொற்றால் இறந்தவர்களை தகனம் செய்யும் வழிகாட்டுதல்படி ரகசியமாக அவரின் சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளதாக உள்விவரம் தெரிந்தவர்கள் தெரிவித்தனர்.

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை செய்ய அரசு சில வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படிதான் கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் கொடுமை என்னவென்றால் கொரோனா தொற்றால் இறந்தவருக்கு உறவினர்கள் கூட அருகில் இருந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

அடக்கம் செய்ய 12 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்படுகிறது. மேலும் இறுதி அஞ்சலியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். சடலம் அடக்கம் செய்ய தோண்டப்படும் குழியிலும் அந்தக் குழி மூடியப்பிறகும் அந்த இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஊழியர்கள் அனைவரும் தனிமனித கவச உடைகளை அணிந்துதான் பணியில் ஈடுபடுகின்றனர். இறுதி அஞ்சலி முடிந்ததும் தனிமனித கவச உடைகளும் தீயிலிட்டு எரிக்கப்படுகின்றன.

``வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை அடக்கம் செய்வது குறித்த நெறிமுறைகள் அரசு ஊழியர்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இதுகுறித்து தெரியும்''

வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த 46 வயது நபர் இறந்தபோதும் இத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. அடக்கம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன்பிறகு முழு பாதுகாப்பு கவச உடை அளிக்கப்பட்டது. உறவினர்கள் 20 அடிக்கு மேல்தான் நிற்கவைக்கப்பட்டார்கள். அனைத்து சமய சடங்குகளும் தூரத்தில்தான் நடைபெற்றது. தவிர்க்க இயலாத முக்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அப்படிக் கலந்து கொள்பவர்களும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருப்பார்கள்.

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், “வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை அடக்கம் செய்வது குறித்த நெறிமுறைகள் அரசு ஊழியர்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இதுகுறித்து தெரியும். தனியார் மருத்துவமனைகளுக்கும் இவைகுறித்து அறிவுறுத்தியுள்ளோம். அரசாங்க மருத்துவமனைகளில் இதுபோன்ற பிரச்னைகள் வந்ததில்லை. தலைமைச் செயலாளரும் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கும், ஆட்சியர்களுக்கும் இந்த நெறிமுறைகள் குறித்து கூறியுள்ளார். தனியார் மருத்துவமனையில் ஏதோ அவசரத்தில் இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது. இதுபோல் நடக்காமலிருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வோம்” என்றார் அவர்.

பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்

ஆந்திர மாநில கணக்குப் படி அம்மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியான முதல் மருத்துவர் இவர் என்று சொல்லப்படுகிறது. பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவரே சிகிச்சைக்காக வந்த இடத்தில் மரணமடைந்தது மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது.

நோய் யாரும் விரும்பி வருவதில்லை. இறப்பைக்கூட சொந்த மாநிலத்தில் செய்ய முடியாமல் இங்கே செய்யும் சூழலிலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. அரசு முறையான நெறிமுறைகளை தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியதாகக் கூறினாலும் இன்று சுகாதாரத்துறை செயலர் உறுதியளித்தது போல மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

அடுத்த கட்டுரைக்கு