Published:Updated:

இந்திய எல்லையில் 4.5 கி.மீ ஊடுருவல்; கிராமத்தையே கட்டமைத்த சீனா! - சாட்டிலைட் போட்டோக்களால் அம்பலம்

சீனா அத்துமீறல்
சீனா அத்துமீறல் ( planet labs inc )

சந்தேகத்துக்குரிய சீனாவின் புதிய கிராமத்தைக் குறிக்கும் சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள், நவம்பர் 1, 2020 தேதி எடுக்கப்பட்டவை.

இந்திய - சீன எல்லைப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. டோக்லாம் தொடங்கி கல்வான் பள்ளத்தாக்கு மோதல் வரை பல்வேறு இடங்களில் சீனாவின் அத்துமீறலை இந்தியா தொடர்ந்து முறியடித்ததோடு, கிழக்கு லடாக்கின் பாங்கோங் சோ ஏரிப் ஏரியைச் சுற்றியுள்ள முக்கியமான பகுதிகளையும் கைப்பற்றியது.

அதேபோல், யூனியன் பிரதேசமான லடாக்கில் 38,000 சதுர கி.மீ பகுதியை சீனா ஆக்கிரமித்ததோடு, அருணாச்சலப்பிரதேசத்தில் இந்தியா - சீனா எல்லைப்பகுதியின் கிழக்குப் பகுதியிலுள்ள 90,000 சதுர கி.மீ பகுதியை சொந்தம் கொண்டாடி வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் பாரம்பரிய எல்லைகளை சீனா அங்கீகரிக்காததால், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.

சீனா ஆக்கிரமிப்பு
சீனா ஆக்கிரமிப்பு
planet labs inc

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் சிக்கிம் மாநிலம், டோக்லாமில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சீன ராணுவம் புதிதாக பதுங்கு குழிகளை அமைத்திருப்பது, செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதியில் இருந்து 4.5 கி.மீ. தொலைவில் புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளது. சுபன்சிரி மாவட்டம், சாரி சூ நதிக் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள இந்தகிராமத்தில் 101 வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று செயற்கைக்கோள் புகைப்படம் உறுதி செய்துள்ளது.

நவம்பர் 1, 2020 அன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்த வல்லுநர்க,ள் அதை பகுப்பாய்வு செய்து, இந்திய எல்லைக்குள் சுமார் 4.5 கி.மீ தூரத்தில் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தப் பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதிகாரப்பூர்வ அரசு வரைபடங்களின்படி, இது 1959-ம் ஆண்டு முதல் சீன கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும், இதற்கு முன்னர் ஒரு சீன ராணுவ அதிகாரி வசிப்பிடம் மட்டுமே அங்கு இருந்தது. ஆனால் இந்த முறை ஆயிரக்கணக்கானோர் வசிக்கக்கூடிய ஒரு முழு கிராமம் கட்டப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்குரிய சீனாவின் புதிய கிராமத்தைக் குறிக்கும் சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள், நவம்பர் 1, 2020 தேதி எடுக்கப்பட்டவை. அதற்கு ஒரு வருடத்துக்கு முன்னதாக - ஆகஸ்ட் 26, 2019 - அன்று எடுக்கப்பட்ட படங்களில் கட்டுமான நடவடிக்கைகள் எதுவும் தென்படவில்லை. எனவே, இந்த கிராமம் கடந்த ஆண்டில் அமைக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், ``இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது. கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற உள்கட்டமைப்பு கட்டுமான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது

இந்திய இறையாண்மை, நிலப்பகுதிகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப் பட்டு வருகின்றன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு